என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது கணவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நர்சை குத்திவிட்டு மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்து விட்டு பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தேடிவந்த நிலையில், அவர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். அவர் தனது பெயரை அக்பர் இப்ராகிம் என்று மாற்றி உள்ளார். இவருக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் அய்யம்மாள் தனது மகன்களுடன் அண்ணாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறி உள்ளார். நேற்று அய்யம்மாள் வழக்கம் போல் பணிக்கு சென்றிவிட்டு திரும்பிய போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

    இது குறித்து விசாரித்தபோது, அவர் சைத்தான் தான் என்னை கொலை செய்ய சொல்லியது என்று மட்டும் கூறி வருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
    • குடும்ப தகராறில் மனைவியை கணவனே நடுரோட்டில் கத்தியால் குத்தியும், உயிரோடு எரித்தும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்தனர். நேற்று காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

    அவரை கணவர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். மருத்துவமனை அருகே உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் சென்றபோது, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் திடீரென அய்யம்மாளை கத்தியால் குத்திவிட்டு தான் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். அப்போது பாட்டில் உடைத்து அய்யம்மாள் உடலில் மண்எண்ணெய் கொட்டியது. உடனே பாலசுப்பிரமணியன் அவரை உயிரோடு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாளின் உடலில் தீப்பற்றி வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். அவர் தனது பெயரை அக்பர் இப்ராகிம் என்று மாற்றி உள்ளார்.

    கணவன்-மனைவிக்கு இடையே தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இணைந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்புதான் நெல்லை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் குடும்ப தகராறில் மனைவியை கணவனே நடுரோட்டில் கத்தியால் குத்தியும், உயிரோடு எரித்தும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக இடி-மின்னலுடன் மழை பெய்தாலும் சில அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க அளவு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. ஆனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது.

    இதனால் நேற்று பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 47.47 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 303 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நாங்குநேரி பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இன்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் விழும் தண்ணீரில் குளிக்க குடும்பத்துடன் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டி, விளாத்திகுளம், வேடநத்தம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. ஓட்டப்பிடாரம், கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 29 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    கோவில்பட்டியில் 26 மில்லிமீட்டரும், வேடநத்தம் பகுதியில் 15 மில்லிமீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காடல்குடி, தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான மழை பெய்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த வெயிலானது வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரித்து காணப்படும். அதே நேரத்தில் மேலும் சில நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி வெயில் தொடங்கினாலும் உக்கிரமாக இல்லை. இன்று வானம் மேக மூட்டத்துடனே காட்சியளித்தது.

    • ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கி னார். செயலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், வரவு-செலவு உள்ளிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேசியதாவது:-

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த தொகையை வைத்து கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை தேர்வு செய்து அங்கு அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை செலவு செய்யலாம்.

    அனைத்து கவுன்சி லர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முக்கிய தேவைகள் குறித்து தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தற்போது நெல்லை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள 204 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வறட்சி கிராமங்களை தேர்வு செய்து 50 ஆழ்துளை கிணறுகள் வரை அமைக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சா யத்துகளில் பணியாற்றும் சுமார் 1,497 தூய்மை பணியாளர் களுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து கையுறைகள், ஆடைகள் உள்ளிட்ட வற்றை ஒரு மாதத்துக்குள் வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய ப்பட்டு வருகிறது. அவற்றை கலெக்டர் கார்த்திகேயன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தலை மையில் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, தனித் தங்கம், மகேஷ் குமார், பாஸ்கர், அருண் தவசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.
    • எடை அளவுகளை முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு கொள்ள வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,

    தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி கடைகள் மற்றும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர் நிறுவனங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுதல் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 27 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 11 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.

    எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம், பொறுப்பு) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    • குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • நாராயணன் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் செய்துங்க நல்லூரை சேர்ந்த தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பதும், மதுபாட்டி ல்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 2,800-ஐ பறிமுதல் செய்தனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு வட்டாரத் திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட செங்களாக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கட்டளை கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சரியான மின்சார சேவை தேவை என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கட்டளை கிராமத்திற்கு மின்சார துறை அதிகாரிகள் உதவியுடன் புதியதாக மின் மாற்றி அமைத்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அதன் பின்பு சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தையும், டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அலெக்ஸ் மற்றும் களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காங்கிரஸ் ஊடக பிரிவு ஸ்ரீதேவி மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

    நெல்லை:

    ஆதிதமிழர் பேரவையின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் இன்று நெல்லையில் நிருபர்களி டம் கூறியதாவது:-

    பாளை சாந்திநகர் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1992-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டு 1997-ல் பணிகள் முடிக்கப்பட்டு 366 வீடுகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். அந்த வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

    அதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. எனவே பழைய வீடு களை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரி களுக்கும் கோரிக்கை வைத்தோம்.

    இதைத்தொடர்ந்து 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. ஆனால் 7 மாதமாகியும் இதுவரை புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நாங்கள் வெளியில் அதிக வாடகையில் வசித்து வருகிறோம்.

    இந்த பணிகளை ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களுக்குள் புதிய குடியிருப்புகள் பணிகள் தொடங்க வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அம்பை, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி-மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-

    ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழை யூத்து, பனையங்குறிச்சி, நாலா ங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.

    இதேபோல் கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம் மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராசிரியை மீனா சமூகவலைதளங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.
    • சான்றோரும் சமநிலை உணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மாணவர்கள் குறைதீர்க்கும் மன்றம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா வரவேற்றார். முதல்வர் மேஜர் து.ராஜன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மீனா சமூகவலைதளங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சகாய தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்றத்தின் உறுப்பினர்களான ராஜேஸ்வரி, மேரி பெர்னார்டு, ஷோபா, செல்வராணி, புனிதா, கோகிலவாணி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் கல்லூரியின் சான்றோர் ஆய்வு மையம் மற்றும் சம வாய்ப்பு மையம் இணைந்து சான்றோரும் சமநிலை உணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறைத் தலைவர் நிர்மலா, தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு தலைவர் கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்திய விமானப் பாதுகாப்புத்துறை மண்டல ஒருங்கிணைப்பாளர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில், சம வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.
    • வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை நடத்தி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்நிலையில் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். அதில் ஏ.எஸ்.பி. பெயரை குறிப்பிட்டு மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை நடந்த அனைத்து வித அதிகாரிகளின் விசாரணைகளிலும் பல்வீர்சிங் மற்றும் சிலர் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது புதிய திருப்பமாக மேலும் 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் போகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருண்குமார் தரப்பை சேர்ந்த 7 பேர் நாளை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் அவரது எதிர்ப்பு தரப்பான செல்லப்பா உள்பட 8 பேருக்கும் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    • போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
    • அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று பால்குட ஊர்வலம் நடை பெற்றது. வழக்கமாக கங்கைகொண்டான் பெருமாள் கோவில் முன்பிருந்து தொடங்கும் பால்குட ஊர்வலம் அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும்.

    இந்நிலையில் வழக்கமான பாதைக்கு மாற்றாக வேறு பாதை வழியாக பால்குட ஊர்வலம் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆனால் வழக்கமாக ஆண்டுதோறும் நாங்கள் செல்லும் வழியாக பால்குட ஊர்வலம் கொண்டு செல்வோம் என்று பொது மக்கள் தெரிவித்த போதும், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    பின்னர் மாற்றுப்பாதை வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது.

    இதற்கிடையே போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று முப்பிடாதி அம்மன் கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் சீதா லட்சுமி, சந்திரசேகர், கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×