என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக இடி-மின்னலுடன் மழை பெய்தாலும் சில அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க அளவு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. ஆனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது.

    இதனால் நேற்று பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 47.47 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 303 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நாங்குநேரி பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இன்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் விழும் தண்ணீரில் குளிக்க குடும்பத்துடன் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டி, விளாத்திகுளம், வேடநத்தம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. ஓட்டப்பிடாரம், கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 29 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    கோவில்பட்டியில் 26 மில்லிமீட்டரும், வேடநத்தம் பகுதியில் 15 மில்லிமீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காடல்குடி, தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான மழை பெய்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த வெயிலானது வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரித்து காணப்படும். அதே நேரத்தில் மேலும் சில நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி வெயில் தொடங்கினாலும் உக்கிரமாக இல்லை. இன்று வானம் மேக மூட்டத்துடனே காட்சியளித்தது.

    Next Story
    ×