என் மலர்
திருநெல்வேலி
- சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
நெல்லை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு அரசு விரைவு போக்குவரத்துக்கழக சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ்சின் பின்புறம் மற்றொரு அரசு சொகுசு பஸ் நெய்வேலியில் இருந்து குமரிக்கு வந்து கொண்டிருந்தது. தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது நெய்வேலியில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற விரைவு பஸ்சை முந்திச்செல்ல முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ஊட்டி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஊட்டி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. பின்னர் சாலையோரம் இருந்த தனியார் பள்ளி காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதில் பின்னால் வந்த நெய்வேலி பஸ்சின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.போலீசார் மற்றும் அப்பகுதியில் இருந்து வந்த மக்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்ளை மீட்டனர். அந்த பஸ்சில் பயணித்த 33 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
- ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.
- ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.
நெல்லை:
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.
அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.
பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
- நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக மாக பயன்படுத்த ப்படுவ தாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறுவுறுத்தலின்பேரில் இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொ ள்ளப் பட்டது. இதில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரி முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 பேட்டரி வாகனங்கள் மூலம் குற்றாலம் ரோடு, சேரன்மகா தேவி ரோடு, வழுக்கோடை பகுதி, தொண்டர் சன்னதி பகுதிகளில் உள்ள சுமார் 36 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் 26 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவது கண்டறிய ப்பட்டது. அவற்றை பறிமு தல் செய்து கடை ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 26 கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- மராத்தான் போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
நெல்லை:
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மாவட்டத்தின் மக்கள் அனைவரும் நம் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடந்த இந்த மராத்தான் அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.
சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியானது ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என தனித்தனியாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் இளம் வயதினர், முதியவர்கள் வரையிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். இதில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 4 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 3 ஆயிரமும் என ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ. 200 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
- முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
திசையன்வினை:
திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.
முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது.
- ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.
வள்ளியூர்:
ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தடைசெய்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி ராதாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. பேரணியை பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது. பேரணியின் போது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
வருங்காலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் மீது ஊராட்சி சட்டம் 1994-ன் படி அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பேரணியில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், ஊராட்சி துணை தலைவர் பலவேசம், வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவரோச் சுபாணந்தி, ஊராட்சி செயலர் மாரியப்பன், ஊர் பொதுமக்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது.
- இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை, ஜூன். 4-
க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு உணவுகளை வழங்கி இந்த சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ராஜன், கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், எழில் ஜோசப், புளியடி குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர்.
- இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் பஸ்கள், ரெயில்களில் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறை
ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடு முறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மேலாண்மை இயக்குனர் மோகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொந்த ஊர்
கோடை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில் பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 60 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 60 சிறப்பு பஸ்களும், திருப்பூருக்கு 30 சிறப்பு பஸ்களும், மதுரைக்கு 100 சிறப்பு பஸ்களும் என 250 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளை யும் இயக்கப்படுகிறது.
முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தேவைப்படும் ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சீரான பஸ்கள் இயக்கத்தை உறுதி செய்யவும், சிறப்பு அலுவலர்கள் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது.
- நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது. இங்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள்.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி மற்றும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சொந்த வாகனத்தில் செல்பவர்களோ, வாடகை வாகனத்தில் அதிகப்படியான பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை மட்டுமே தற்போது நிலவி வருவதாக நடுத்தர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செல்ல ஒரு நபருக்கு ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இத்தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சவாலான தொகையாக இது இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அல்லது வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பணம் படைத்தோருக்கு மட்டுமே அருவிக்கு செல்ல முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் பணக்கார அருவியாக மணிமுத்தாறு அருவி மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, ஏ.எல்.எஸ். லட்சுமணன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர்், அல்லா பிச்சை, சின்னத்தாய், சுப்புலட்சுமி, சகாய ஜூலியட் மேரி, ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், பேட்டை பகுதி இளைஞரணி மணிகண்டன், வக்கீல்கள் கந்தசாமி, காமினி தேவன், ராஜா முகமது, கல்லூர் பாலா மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், சிவா, தங்க திருப்பதி, நெல்லை ரவி, முருகன், வினோத், சுடலைமுத்து, ஏ1 அருண், காந்தி, மகேஷ், மணி, தமிழரசன், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலரும், தச்சை மண்டல முன்னாள் சேர்மனுமான சுப்பிர மணியன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுமார் 120 பேருக்கு இலவச நோட்டு- புத்தகங்கள் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தி.மு.க. சார்பில் நலத்திட்டங்கள், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அவை வழங்கப்படவில்லை.
தொடர்ந்து மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சாலியர் தெரு, தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு என பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- விசாக திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஸ்ரீமத்பரசமய கோளரிநாத ஆதீன கமிட்டி தலைவர் அனந்த நாராயணன் ஆச்சாரி, செயலாளர் வக்கீல் ஆறுமுகராஜ், பொருளாளர் அசோக்ராஜ், அறங்காவலர்கள் ஆறுமுகநயினார், சக்திவேல், சுப்பிரமணியசாமி, கந்தன், கண்ணன், வக்கீல் முருகமுரளிதரன், நெல்லை குமார், அர்ச்சகர் பாலாஜி சர்மா, வக்கீல் பரமசிவகுமார், சங்கரன் ஆச்சாரி, வேலு ஆச்சாரி, ஆறுமுக ஆச்சாரி மற்றும் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் இளைஞர் அணி நிர்வாகிகள் நரசிம்மன், சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விசாகத்தை யொட்டி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது
- முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டலத் திற்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஓட்டலில் இன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருணாநிதி பிறந்தநாள்
நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் வாழும் காலம் வரை அவரின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசி களை விடுதலை செய்திட வேண்டும். பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை மேற்கொள்ளா மல், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற முனையும் பா.ஜனதா அரசின் நடவடிக்கை கண்டிக் கத்தக்கது.
சிறப்பு நிதி
வற்றாத ஜீவநதியாக இருந்த தாமிரபரணியின் இன்றைய நிலைமை வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையால் அதன் உயிரோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சாக்கடைகள் மூலம் அதன் பொழிவை இழந்துவிட்டது. அந்த நதியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். கங்கை நதியை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வரும் மத்திய அரசு தாமிர பரணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின் றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் நிர்வாகிகள் அகமது நவவி, சேக் அப்துல்லா, மாநில பேச்சா ளர் பேட்டை முஸ்தபா, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செ யலாளர் கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், உமர், சிக்கந்தர், சத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.






