என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • குடிபோதையில் தகராறு என கடந்த 1 மாதத்தில் மட்டும் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
    • கொலைகளில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களாக இருக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    சிறிய மோதலில் ஏற்பட்ட விரோதத்தில் தொடங்கி, பழிக்குப்பழியாகவும், முன்விரோதம் காரணமாகவும், இடப்பிரச்சினை, குடிபோதையில் தகராறு என கடந்த 1 மாதத்தில் மட்டும் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாநகர் பகுதியில் உள்ள கீழ வீரராகவபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி நள்ளிரவில் தனியார் உணவு விநியோக நிறுவன ஊழியரான முகேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    3-ந் தேதி மாவட்ட பகுதியில் உள்ள சுத்தமல்லியில் கொம்பையா என்ற விவசாயி, 4-ந் தேதி மாநகர் பகுதியில் உள்ள கருப்பன் துறை பகுதியில் மாயாண்டி என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.

    9-ந் தேதி வீரநல்லூரில் அருணாச்சலக்குமார் என்பவரும், 11-ந் தேதி வி.கே.புரம் முதலியார்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி என்பவரும், 13-ந் தேதி கீழநத்தம் பகுதியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜாமணி என்பவரும், 16-ந் தேதி பழவூர் பகுதியில் விவசாயி செல்வன் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ஆகஸ்ட் 19-ந் தேதி நள்ளிரவில் வீரவநல்லூர் பகுதியில் விவசாயி கணேசன், 20-ந் தேதி நெல்லை மாநகரம் பேட்டை பகுதியில் டாஸ்மாக் பார் ஊழியர் இளவரசன்,  அதே தேதியில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெயிண்டர் செல்லத்துரை, 21-ந் தேதி நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பார்வதி நாதன் என்பவரும், 23-ந் தேதி தேவர்குளம் அடுத்த வன்னிகோனேந்தல் பகுதியில் வள்ளித்தாய் என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.

    28-ந் தேதி சேரன்மகா தேவியை சேர்ந்த கணேசன் என்பவர் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குட்பட்ட தருவை பகுதியிலும், 30 -ந் தேதி பா.ஜ.க. நிர்வாகி ஜெகன் என்பவர் பாளையங்கோட்டை பகுதியிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கொலைகளில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களாக இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களது எதிர்காலத்தை பாழாக்கி விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், குற்றவாளிகளின் குடும்பங்களும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

    இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே பரவலாக உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதி வன்முறை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலைகளால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலை தற்போது மாறி விட்டதாக நினைத்துவரும் இந்த வேளையில், தனி நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி இருக்கிறது.

    இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உளவுப்பிரிவு போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறியிருப்பதும் இதுபோன்ற நிலைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    நெல்லை மாநகரில் பேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, பெருமாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்கள் அடங்கும்.

    இந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் சட்ட மீறல்கள், அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு மீறல்களை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை போலீசார் உள்ளனர். இவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் நடைபெறும் சம்பவங்களை உயர்அதிகாரிகளுக்கும், மாநகர போலீஸ் கமிஷனருக்கும் தெரிவிக்கின்றனர்.

    இதில் கடந்த சில மாதங்களாக பேட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கான நுண்ணறிவு பிரிவு பணியிடம் காலியாகவே இருக்கிறது. எப்போதும் பணியில் இருப்பது போன்றே இந்த பணி இருப்பதாகவும், ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கூட நிம்மதியாக பங்கேற்க முடிவதில்லை என்றும் கூறி இந்த பணிக்கு வருவதற்கு பெரும்பாலான போலீசார் விரும்புவதில்லை.

    இதனால் உளவுத் துறையின் நுண்ணறிவு பிரிவில் இடம் பெற்றுள்ள சீனியர் போலீசாரை கொண்டே நெல்லை மாநகரம் இயங்கி வருகிறது.

    இவர்களில் சிலர் சொந்த தொழிலில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், வேறு யாரும் இந்த பணிக்கு வருவதில்லை என்பதால் அவர்களை கொண்டே சமாளித்தாக வேண்டிய நிலை இருக்கிறது.

    அவர்களும் பல ஆண்டுகளாக வெறுமனே கடமைக்கு பணியாற்றுகிறார்கள். பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை கூட தடுக்க அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தகவல் அளிக்காமல் அலட்சியமாக செயல்படும் உளவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும், அதனை உயர்அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடும் நிலையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடத்திற்கு இன்னும் அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பதுதான் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் சென்னைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு மேலாகியும் அந்த பொறுப்புக்கு அதிகாரி நியமிக்கப்படவில்லை. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை நெல்லை சரக டி.ஐ.ஜி. பர்வேஷ் குமார் கடந்த 10 தினங்களுக்கு மேலாக பார்த்து வருகிறார்.

    நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளடக்கியதாகும். இதை கவனிக்கும் நெல்லை சரக டி.ஐ.ஜி. கூடுதல் பொறுப்பாக நெல்லை மாநகரையும் பார்த்துக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. இதே போல நெல்லை மாநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் 3 போலீஸ் துணை கமிஷனர்கள் பணியில் இருந்தனர்.

    நெல்லை மேற்கு மண்டலம் டவுன், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர் பகுதிகளை இணைத்தும், நெல்லை கிழக்கு மண்டலம் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம் போலீஸ் நிலையங்களை இணைத்தும் செயல்பட்டு வந்தது.

    நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனராக இருந்த சீனிவாசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் புதிய அதிகாரி அந்த பதவி இடத்திற்கு நியமிக்கப்படவில்லை. நெல்லை மாநகர் காவல் ஆணையரகத்து நிர்வாக பொறுப்பை பார்த்து வந்த அனிதா கிழக்கு மண்டல பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதே நிலை நெல்லை மாவட்ட காவல்துறையிலும் நீடித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சாதி ரீதியிலான பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியான பல்வீர்சிங், அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விஸ்வரூபம் எடுத்த பல் பிடுங்கிய விவகாரத்தை தொடர்ந்து மாற்றப்பட்டு டி.எஸ்.பி. அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    ஏ.எஸ்.பி. அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் சாதி ரீதியிலான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தரப்பு கருத்தாக உள்ளது. எனவே நெல்லை மாநகரத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டு வந்த ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலைக்கு முக்கிய காரணமாக இடப்பிரச்சினை, சொத்து பிரச்சினை, கோவில் கொடை விழா தகராறு உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தடுக்க மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும், மாநகரத்தில் கமிஷனர் தலைமையிலும் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டத்தில் வந்து பொதுமக்கள் மனு அளித்தாலும், அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட போலீசார் அலட்சியமாக இருப்பதோடு, புகாரரை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும், இதனால் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டங்கள் மீது புகார்தாரர்கள் நம்பிக்கை இழந்து விடும் நிலை நிலவி வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

    • மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார்.
    • ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் காவல்கிணறை சார்ந்த பிரவீன் குமார் (வயது 17) என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன் பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று மாலை மாணவர் படித்து வரும் துறையின் தலைவரான ஆனந்த் (40) என்பவர் மாணவனிடம் அசைன்மென்ட் நோட்டை கேட்டுள்ளார்.

    அப்போது மாணவன் தனது நோட்டை சக மாணவர் ஒருவர் வாங்கி சென்று விட்டதாகவும், எனவே தான் நோட்டில் எழுதவில்லை எனவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஆனந்த், கம்பால் மாணவனை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .

    இதுகுறித்து மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துறை தலைவரான ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    • முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
    • ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்துக்கு சென்ற ஜெகன் தனது நண்பர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் ஜெகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், பாளை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொலை கும்பலை தேடியது. அதன் அடிப்படையில் 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் பா.ஜனதாவில் நிர்வாகியாக இருப்பதால் சமீப காலமாக தன்னை ஒரு பிரமுகராக வெளிக்காட்டி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது எதிர்தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியில் நடந்த கொலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூளிக்குளத்தில் நடைபெற்ற கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று பிடிபட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். தகவல் அறிந்து பா.ஜனதா நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகளும் அங்கு வந்தனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாகவும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் எனவும் ஜெகன் தரப்பினர் போலீசாரிடம் கூறினர். அதுவரை உடலை வாங்க போவதில்லை என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
    • நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    வாகன பேரணி

    நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியினை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திர குமார் இன்று புதிய பஸ் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இப்பேரணி யானது குலவணி கர்புரம், மேலப்பா ளையம் சிக்னல் வழியாக என்.ஜி.ஓ. காலனி வந்தடைந்தது. தொடர்ந்து அருகிலுள்ள ஒரு மகாலில் ஓட்டுனர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வாகன விற்பனை யாளர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஹெல்மெட் கட்டாயம்

    பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்புக்கு 80 சதவீதம் காரணம் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டு பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்தி ருப்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது, இந்திய தர நிர்ணய சான்று அல்லாத சாதாரண ஹெல்மெட்டுகளை பயன்படுத்த கூடாது என்று கூறி விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தொழில்நுட்ப பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜ சேகரன், பெருமாள், மாவட்ட ஓட்டுனர் சங்கத்தலைவர் காளிதாஸ், நெடுஞ்சா லைத்துறை பொறியாளர் திருசெல்வன், லெட்சு மணன் உட்பட அரசு அலுவலர்கள், போக்கு வரத்துறை அலுவலர்கள், ஓட்டுனர்கள், பயிற்றுநர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.
    • உயிரை பறி கொடுத்தவர்கள் நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் இந்த செயல் மிகவும் தவறானது என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    பாளையில் பா.ஜனதா நிர்வாகி ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் பிரபு உள்ளிட்டவர்களை கைது செய்ய கோரி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இன்று முருகன் குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதா வது:-

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் நியாயம் கேட்டு ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.

    முடியை பிடித்து இழுத்து அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் துறை இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. உயிரை பறி கொடுத்தவர்கள் நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் இந்த செயல் மிகவும் தவறானது. நியாயத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

    உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். குற்றவாளிகள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் போராட்டம் நடத்தியவர்கள் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

     வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ரியான், ஜுடுவின், புகழேந்தி, முத்துகிருஷ்ணன், சாத்ராக், சாரோன், எட்வின், ரினு, யோகேஷ், ரிஜோ, சிவகுரு,சுபிஷ் மற்றும் டஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும் சொத்துவரி, குடிநீர்கட்டண வரிவிதிப்பு, பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இச்சிறப்பு முகாம் வார்டு 22-ல் பின்தங்கியுள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங் களை நிலுவை யின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர் ஆளுமை பண்பு வளர்த்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார். மேலும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் யமுனா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 'ஆளுமை பண்பு வளர்த்தல்' என்னும் தலைப்பில் 'ஆளுமை பண்பே நம் ஒவ்வொருவரின் சிறந்த தலைமை பண்பு' என ஒளிப்பட காட்டியின் மூலம் பண்படுத்துதல், வளர்ச்சி, மனநிலை குறித்து வகுப்புகள் நடத்தி சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் இந்துமதி, உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர், கணிதத்துறை உதவி பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி.
    • கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணேசன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்(24) என்பவர் நெல்லை கோர்ட்டில் இன்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார் மானூர் பகுதியில் ரஸ்தாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேல ரத வீதியில் கீழ் புறத்தில் டவுன் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று இரவு பணியில் இருந்த போலீசார் நள்ளிரவு போலீஸ் நிலைய அறையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீஸ் நிலைய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட செல்போன் திடீரென மாயமானது. அதேபோல் அங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காணாமல் போன 2 செல்போன்களையும் வேறு அறைகளில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் செல்போன்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் யாரேனும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தூக்கிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையம் மற்றும் ரத வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் நேற்று டவுன் ரத வீதியில் வாகன சோதனையில் டவுன் போலீசார் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், அந்த வாகன ஓட்டி மீது சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து அந்த நபர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து செல்போனை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.
    • பிரச்சனை காரணமாக தனித்தாசில்தாரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த மனோஜ் முனியன் என்பவர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளார். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக தனித் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரை சஸ்பெண்டு செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமையில் ஊழியர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×