என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரு மாதத்தில் 14 கொலைகள்: கொலை களமாக மாறி வரும் நெல்லை மாவட்டம்
- குடிபோதையில் தகராறு என கடந்த 1 மாதத்தில் மட்டும் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
- கொலைகளில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களாக இருக்கின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சிறிய மோதலில் ஏற்பட்ட விரோதத்தில் தொடங்கி, பழிக்குப்பழியாகவும், முன்விரோதம் காரணமாகவும், இடப்பிரச்சினை, குடிபோதையில் தகராறு என கடந்த 1 மாதத்தில் மட்டும் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள கீழ வீரராகவபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி நள்ளிரவில் தனியார் உணவு விநியோக நிறுவன ஊழியரான முகேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
3-ந் தேதி மாவட்ட பகுதியில் உள்ள சுத்தமல்லியில் கொம்பையா என்ற விவசாயி, 4-ந் தேதி மாநகர் பகுதியில் உள்ள கருப்பன் துறை பகுதியில் மாயாண்டி என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.
9-ந் தேதி வீரநல்லூரில் அருணாச்சலக்குமார் என்பவரும், 11-ந் தேதி வி.கே.புரம் முதலியார்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி என்பவரும், 13-ந் தேதி கீழநத்தம் பகுதியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜாமணி என்பவரும், 16-ந் தேதி பழவூர் பகுதியில் விவசாயி செல்வன் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆகஸ்ட் 19-ந் தேதி நள்ளிரவில் வீரவநல்லூர் பகுதியில் விவசாயி கணேசன், 20-ந் தேதி நெல்லை மாநகரம் பேட்டை பகுதியில் டாஸ்மாக் பார் ஊழியர் இளவரசன், அதே தேதியில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெயிண்டர் செல்லத்துரை, 21-ந் தேதி நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பார்வதி நாதன் என்பவரும், 23-ந் தேதி தேவர்குளம் அடுத்த வன்னிகோனேந்தல் பகுதியில் வள்ளித்தாய் என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.
28-ந் தேதி சேரன்மகா தேவியை சேர்ந்த கணேசன் என்பவர் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குட்பட்ட தருவை பகுதியிலும், 30 -ந் தேதி பா.ஜ.க. நிர்வாகி ஜெகன் என்பவர் பாளையங்கோட்டை பகுதியிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகளில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களாக இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களது எதிர்காலத்தை பாழாக்கி விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், குற்றவாளிகளின் குடும்பங்களும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே பரவலாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதி வன்முறை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலைகளால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலை தற்போது மாறி விட்டதாக நினைத்துவரும் இந்த வேளையில், தனி நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி இருக்கிறது.
இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உளவுப்பிரிவு போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறியிருப்பதும் இதுபோன்ற நிலைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
நெல்லை மாநகரில் பேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, பெருமாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்கள் அடங்கும்.
இந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் சட்ட மீறல்கள், அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு மீறல்களை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை போலீசார் உள்ளனர். இவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் நடைபெறும் சம்பவங்களை உயர்அதிகாரிகளுக்கும், மாநகர போலீஸ் கமிஷனருக்கும் தெரிவிக்கின்றனர்.
இதில் கடந்த சில மாதங்களாக பேட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கான நுண்ணறிவு பிரிவு பணியிடம் காலியாகவே இருக்கிறது. எப்போதும் பணியில் இருப்பது போன்றே இந்த பணி இருப்பதாகவும், ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கூட நிம்மதியாக பங்கேற்க முடிவதில்லை என்றும் கூறி இந்த பணிக்கு வருவதற்கு பெரும்பாலான போலீசார் விரும்புவதில்லை.
இதனால் உளவுத் துறையின் நுண்ணறிவு பிரிவில் இடம் பெற்றுள்ள சீனியர் போலீசாரை கொண்டே நெல்லை மாநகரம் இயங்கி வருகிறது.
இவர்களில் சிலர் சொந்த தொழிலில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், வேறு யாரும் இந்த பணிக்கு வருவதில்லை என்பதால் அவர்களை கொண்டே சமாளித்தாக வேண்டிய நிலை இருக்கிறது.
அவர்களும் பல ஆண்டுகளாக வெறுமனே கடமைக்கு பணியாற்றுகிறார்கள். பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை கூட தடுக்க அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவல் அளிக்காமல் அலட்சியமாக செயல்படும் உளவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும், அதனை உயர்அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடும் நிலையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடத்திற்கு இன்னும் அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பதுதான் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் சென்னைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு மேலாகியும் அந்த பொறுப்புக்கு அதிகாரி நியமிக்கப்படவில்லை. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை நெல்லை சரக டி.ஐ.ஜி. பர்வேஷ் குமார் கடந்த 10 தினங்களுக்கு மேலாக பார்த்து வருகிறார்.
நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளடக்கியதாகும். இதை கவனிக்கும் நெல்லை சரக டி.ஐ.ஜி. கூடுதல் பொறுப்பாக நெல்லை மாநகரையும் பார்த்துக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. இதே போல நெல்லை மாநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் 3 போலீஸ் துணை கமிஷனர்கள் பணியில் இருந்தனர்.
நெல்லை மேற்கு மண்டலம் டவுன், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர் பகுதிகளை இணைத்தும், நெல்லை கிழக்கு மண்டலம் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம் போலீஸ் நிலையங்களை இணைத்தும் செயல்பட்டு வந்தது.
நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனராக இருந்த சீனிவாசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் புதிய அதிகாரி அந்த பதவி இடத்திற்கு நியமிக்கப்படவில்லை. நெல்லை மாநகர் காவல் ஆணையரகத்து நிர்வாக பொறுப்பை பார்த்து வந்த அனிதா கிழக்கு மண்டல பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதே நிலை நெல்லை மாவட்ட காவல்துறையிலும் நீடித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சாதி ரீதியிலான பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியான பல்வீர்சிங், அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விஸ்வரூபம் எடுத்த பல் பிடுங்கிய விவகாரத்தை தொடர்ந்து மாற்றப்பட்டு டி.எஸ்.பி. அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஏ.எஸ்.பி. அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் சாதி ரீதியிலான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தரப்பு கருத்தாக உள்ளது. எனவே நெல்லை மாநகரத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டு வந்த ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலைக்கு முக்கிய காரணமாக இடப்பிரச்சினை, சொத்து பிரச்சினை, கோவில் கொடை விழா தகராறு உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தடுக்க மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும், மாநகரத்தில் கமிஷனர் தலைமையிலும் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் வந்து பொதுமக்கள் மனு அளித்தாலும், அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட போலீசார் அலட்சியமாக இருப்பதோடு, புகாரரை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும், இதனால் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டங்கள் மீது புகார்தாரர்கள் நம்பிக்கை இழந்து விடும் நிலை நிலவி வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.






