என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் தெற்கு வள்ளியூர் அருகே உள்ள மேல கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசூர்யா (வயது 20) என்பதும், தப்பி ஓடியது நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற செல்லையா மகன் அருள்நம்பி (23) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலசூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருள்நம்பியை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
    • மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இருந்து மாட்டு சாணம் உரம் ஏற்றி கொண்டு ஒரு மினிலாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த ஜெனிஸ்குமார் (வயது 43) ஓட்டி சென்றார்.

    மினிலாரியில் தொழிலாளர்கள் ஆலங்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60), கணபதிபுரம் அருகே உள்ள புதுமடத்தையை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகியோர் இருந்தனர். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மினிலாரியில் மோதியது. இதில் மினிலாரி தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதுபோல மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் ஜெனிஸ்குமார், தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்த யுகேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஜெனிஸ்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பால கிருஷ்ணன் ராஜாக்கள் மங்களம் தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவில்பத்து ஜோதி நகரை சேர்ந்த இளங்கோ (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
    • ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ துவரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 50). தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த கணபதி மனைவி ராணி(60) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வட்டி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் வட்டி பணத்தில் ரூ.3,500 மட்டும் கொடுத்த ஜெயக்குமார் மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராணி, அவரது கணவர் கணபதி(70), மகள் சுமதி(40), மருமகள் முத்துலெட்சுமி(38) ஆகிய 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் அன்று இரவில் விஷம் குடித்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் விசாரணை நடத்தி ராணி, கணபதி உள்பட 4 பேர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதில் தலைமறைவாக உள்ள ராணி, கடந்த ஜூலை மாதம் தெற்கு மீனவன்குளம் பகுதியை சேர்ந்த இசக்கி என்பரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர். காங்கிரஸ் பிரமுகரான அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மருமகள் முத்துலெட்சுமி கள்ளிகுளம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
    • காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதில் தென்மாவட்டங்களில் வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே பருவமழை பெய்தது. இதனால் குளங்கள் வறண்டன.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை குறைவால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. மேலும் கோடையை மிஞ்சும் வகையில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது.

    நெல்லையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 48.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 5 அடி உயர்ந்து 54.20 அடியை எட்டியது.

    இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 22 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் 156 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 72.93 அடியானது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 3,184 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 354 கனஅடி நீர் வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது.

    மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் 118 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 41.30 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சுமார் 2 அடி அதிகரித்து 43.10 அடியானது. கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பையில் 21 மில்லிமீட்டரும், களக்காட்டில் 13.6 மில்லி மீட்டரும், கன்னடியனின் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு இரவு வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் 14.7 சென்டி மீட்டரும், மாஞ்சோலை எஸ்டேட்டில் 86 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 61 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, வீரவ நல்லூர், முக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 10.8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    கடனா, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடியும், குண்டாறு அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அடவி நயினார் அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை 53 அடியாகவும், கடனா அணை 47.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டத்தில் செங்கோட்டையில் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சிவகிரியில் 28 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 22 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் மெயின் அருவிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அந்த அருவியில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களில் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    • முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
    • பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). இவர் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜெகனை 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

    இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாளை பகுதியை சேர்ந்த அனீஸ் (28 ), அஜித்குமார்( 24), மூளிக்குளத்தை சேர்ந்த சந்துரு( 22), பாஸ்கர்( 22 ), ராஜா குடியிருப்பைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்( 27), வி.எம். சத்திரத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு (21)ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 6 பேரும் வெவ்வேறு காரணங்களை வாக்குமூலமாக போலீசாரிடம் கூறி வருகின்றனர். இதில் கைதான முதல் குற்றவாளியான விக்கி கூறுகையில், என்னிடம் ஜெகன் அடிக்கடி தொந்தரவு செய்யும் விதமாக பேசி வந்தார். இதனால் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். அனீஸ் கூறுகையில், என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு காரணமாக ஜெகன் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.

    மற்ற 4 பேரும் கூறுகையில், எங்கள் ஊரில் யார் பெரியவர் என்பது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை நடந்து வந்தது. மேலும் டாஸ்மாக் பார் தொடர்பாக பிரபுவிடம் அடிக்கடி ஜெகன் இடைஞ்சல் செய்யும் விதமாக நடந்து வந்தார். மேலும் ஜெகன் வேகமாக வளர்ந்து வருவது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருடன் சேர்ந்து கொலை செய்தோம் என்றனர். இவ்வாறாக கைதான 6 பேரும் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பிரபுவை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் முருகன், காசி பாண்டியன், வாசிவம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பிரபுவை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறி ஜெகனின் உறவினர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகளில் கலந்து கொண்ட தலா 7 பேருக்கு சிறப்பு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டிகள் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் பாளையில் இன்று நடத்தப்பட்டது.

    போட்டியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாராத்தான் போட்டிகளை நெல்லை மாவட்ட பயிற்சி கலெக்டர் கிஷன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக பிரிவு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் வழியாக சீனிவாச நகர் பாலம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது.

    5 கிலோமீட்டர் பயணத்தை கல்லூரி மாணவ- மாணவிகள் ஓடி நிறைவு செய்தனர். மாணவர்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜான்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் சாரா டக்கர் கல்லூரியை சேர்ந்த மாணவி முதல் பரிசையும் பெற்றனர்.

    முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரொக்க பணமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட தலா 7 பேருக்கு சிறப்பு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக மாவட்டத்தில் ஊத்து பகுதியில் 45 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 40 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 17 மில்லி மீட்டரும் பதிவானது.

    இதேபோல் நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், களக்காடு, கொடுமுடியாறு, நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.

    இன்று காலை வரை 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் 48.90 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 62.47 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 41.40 அடியாகவும் உள்ளது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாததால் குற்றால அருவிகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் அதிகபட்சமாக 39 மில்லி மீட்டரும், எட்டயபுரத்தில் 18 மில்லி மீட்டரும், கயத்தாறில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    • கொடை விழாவில் அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது.
    • அவதூறாக பேசியதை பார்த்த ரமேஷ்ராம் அதனை தட்டிக் கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவில் தர்மகர்த்தா முருகன், அவரது மனைவி சீதாலெட்சுமி ஆகியோர் இருவரையும் சத்தம் போட்டனர்.

    இதையடுத்து அழகிய நம்பியும், கோபியும், முருகனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசினர். இதைப்பார்த்த சங்கரசுப்பிரமணியன் மகன் ரமேஷ்ராம் (27) தட்டிக் கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகியநம்பி, கோபி, சந்தனசெல்வம், சுடலைமுத்து, நம்பிராஜன், மாயாண்டி, சூர்யா ஆகிய 7 பேரும் சேர்ந்து ரமேஷ்ராம், மகாலிங்கம், முத்துபாண்டி, முருகன் ஆகிய 4 பேரையும் கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி அழகியநம்பி உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.

    • வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • தடகள் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் வட்டார பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    டி.டி.என். கல்வி குழு மத்தின் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி போட்டிகளை தொடக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை உரை யாற்றினார். தொடர்ந்து மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளாடிஸ் லீமா ரோஸ் தேசிய கொடியையும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் கொடியை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் மற்றும் ஒலிம்பிக் கொடியினை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் ஏற்றினர்.

    குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், ராதாபுரம் குறு வட்டார செயலாளருமான பெஞ்சமின் வரவேற்று பேசினார். வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் வாழ்த்தி பேசினார். ஆண்களுக்கான தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது.

    2-வது இடத்தை இடிந்தகரை பிஷப்ரோச் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திசையன் விளை பொதிகை பப்ளிக் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றது. மகளிருக்கான தடகள் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை கூடங்குளம் ஹார்வர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்று சென்றது. 2-வது இடத்தை திசையன்விளை ஹோலி ரெடிமேர்ஸ் மேல்நி லைப் பள்ளியும், 3-வது பரிசை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியும் பெற்றது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற தடகள் போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாட்டி னை ஹை-டெக் பாலி டெக்னிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
    • முத்துபாரதி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி புதுக்குளத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது மனைவி முத்துபாரதி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் முத்துபாரதி தனது குழந்தை களுடன் புதுக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    மாயம்

    கடந்த 28-ந் தேதி இரவில் முத்துபாரதி பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது முத்துபாரதி மற்றும் அவரது 2 குழந்தை களையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ரகுராஜ் (50) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் முத்து பாரதியை தேடி வருகிறார்.

    • சுப்பிரமணியன் பாளையங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழே பூவாணி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் சுப்பிரமணியன் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீவலப்பேரி மருகால்தலை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×