search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் கும்பல் வெறிச்செயல்: பா.ஜனதா நிர்வாகி கொலையில் 6 பேர் சிக்கினர்
    X

    பாளையில் கும்பல் வெறிச்செயல்: பா.ஜனதா நிர்வாகி கொலையில் 6 பேர் சிக்கினர்

    • முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
    • ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்துக்கு சென்ற ஜெகன் தனது நண்பர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் ஜெகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், பாளை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொலை கும்பலை தேடியது. அதன் அடிப்படையில் 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் பா.ஜனதாவில் நிர்வாகியாக இருப்பதால் சமீப காலமாக தன்னை ஒரு பிரமுகராக வெளிக்காட்டி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது எதிர்தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியில் நடந்த கொலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூளிக்குளத்தில் நடைபெற்ற கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று பிடிபட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். தகவல் அறிந்து பா.ஜனதா நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகளும் அங்கு வந்தனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாகவும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் எனவும் ஜெகன் தரப்பினர் போலீசாரிடம் கூறினர். அதுவரை உடலை வாங்க போவதில்லை என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×