என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டவுன் மேலரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை பழையப்பேட்டை, டவுன் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான

    டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் ,எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத் துறை மற்றும் கருப்பன் துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்கெட், ஏ.பி.மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.

    அப்போது டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று சாலை களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    அதன் உரிமையாளர்க ளுக்கு, உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அபராதம் இன்று மாலை வரை உரிமையாளர்களால் செலுத்தப் படவில்லை எனில் அந்த மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பதற்கு சுகாதார அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    • மானூர் தெற்கு பட்டியில் தி.மு.க சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

    நெல்லை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் தெருமுனை கூட்டம் மானூர் தெற்கு பட்டியில் நடைபெற்றது.

    மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி பேசினார். தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் தொப்பி மைதீன் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. தலைமைக்கழக பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில் சிறப்புரை ஆற்றினார்.

    இக்கூட்டத்தில் மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாவட்ட துணைச் செயலாளர் கிரிஜாகுமார், துணை மேயர் ராஜூ,முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மீரான் மைதீன், மிக்கேல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவ்ஷாத், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் நவநீதன், மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, மாவட்ட துணை அமைப்பாளர் தேவிகா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘வந்தே பாரத்’ ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
    • ‘வந்தே பாரத்’ ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நெல்லையில் இருந்து சென்னை செல்ல வேண்டுமானால் ஒரு நாளாகி விடும். அந்த நிலை இப்போது மாறியுள்ளது.

    'வந்தே பாரத்' ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

    கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் ரெயில்வே துறையில் தமிழகத்திற்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ராமேசுவரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரெயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சியில் பங்கேற்க தி.மு.க.வினர் கட்சி கொடி ஏந்தி வந்தனர்.
    • பா.ஜனதாவினர் பிரதமர் மோடி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நெல்லை ரெயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நெல்லை ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் பண்ணை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி மற்றும் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏ. அப்துல்வகாப், மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர் விஜிலாசத்தியானந்த், தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க.வினர் ஏராளமானோர் கட்சி கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்., இதற்கு போட்டியாக விழா மேடை அருகே இருந்த பா.ஜனதாவினர் பிரதமர் மோடி வாழ்க எனவும் கோஷம் எழுப்பினர்.

    இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து இது அரசு விழா, அரசியல் விழா அல்ல என கூறி இரு கட்சியின் தொண்டர்களையும் அந்தந்த மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். இதைத்தொடர்ந்து விழா நடைபெற்றது.

    • பொன்னம்மாள் களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.
    • பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பொன்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் களக்காடு செல்வதற்காக படலையார்குளம் மின்சார வாரிய அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் இருந்து களக்காடு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். களக்காட்டிற்கு சென்று பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் எடையுள்ள தங்க செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் இருந்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை பறித்து சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது.
    • தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம். எல். ஏ. ராகுல்காந்தி, பிரதமராக வேண்டி மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வார்கள்.

    அவர்களுடன் இணைந்து நானும் ராகுல்காந்தி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக வேண்டி சாமி தரிசனம் செய்தேன்.

    பாதயாத்திரையாக செல்லும் போது பொதுமக்களில் பலர் இந்த பாதையில் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    திடீரென்று சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது. அந்த சமயத்தில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவர்கள் அதில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 3 இடங்களில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து நான் அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொது செயலாளர் நம்பித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கி ணைப்பாளர் எம். எம்.ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சுவாமிநாதன்பிள்ளை, உடையார், தங்கராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சுரேஷ், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாரத்தான் போட்டி 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.
    • போட்டியில் மொத்தம் 5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இருதய பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவேரி மருத்துவமனை சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபாட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர துணை மேயர் கே. ஆர். ராஜூ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைர முத்து வரவேற்று பேசினார். மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இப்போட்டி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இருந்து தொடங்கி குறிப்பிட்ட பாதையை கடந்து பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் 2,300 பேர் மற்றும் பெண்கள் 2,700 பேர் என மொத்தம்5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர் போட்டி-ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை எஸ்.நிகில்குமார் ரூ.12,500, இரண்டாம் பரிசை எம். ரெங்கராஜ் ரூ. 10,000, மூன்றாம் பரிசை எம். அஜித்குமார் ரூ.7,500, 10 கிலோ மீட்டர்- பெண்கள் பிரிவு போட்டியில் முதல் பரிசை எஸ். ஐஸ்வர்யா ரூ. 12,500, இரண்டாம் பரிசை எஸ்.எம். ஹிதாயத் பவுசியா ரூ. 10,000, மூன்றாம் பரிசை சி.வேணிகா ரூ. 7,500-ஐ பெற்றனர்.

    5 கி.மீ போட்டி- ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசை மூர்த்தி ரூ. 10,000, இரண்டாம் பரிசை ஸ்ரீனிவாசன் ரூ.7,500 மூன்றாம் பரிசை முத்து இசக்கி ரூ. 5,000 பெற்றனர்.

    5 கி.மீ. - பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஆர். ரம்யா ரூ.10,000, இரண்டாம் பரிசை எம்.சவுமியா ரூ. 7,500 மூன்றாம் பரிசை எம். பாக்கியவதி ரூ. 5,000. வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுத் தொகை வழங்கப் பட்டது. விழாவில் காவேரி மருத்துவமனை டாக்டர் மகபூப் சுபுகாணி, டாக்டர் லட்சுமணன், டாக்டர் டி.ஜே. பிரபாகர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • லெனின்சிங் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மாயநேரியை சேர்ந்தவர் லெனின்சிங் (வயது 32). தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இவர் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான லெனின்சிங்கை தேடி வருகின்றனர்.

    • ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர்.
    • போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம். உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்.

    ஐதராபாத்திலும் கவர்னர் என்ற வகையில் முதல் குடிமகனாக வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால் நான் சாதாரண குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.

    ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் 'மன் கி பாத்' மூலம் அதனை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் பாரத பிரதமர். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளார்.

    அது போல் தான் ரெயில் என்றாலே மிக தாமதமாக செல்லும். அதனால் ரெயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரெயிலில் பழமை இருக்கும்.

    ஆனால் புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். வந்தே பாரத் ரெயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

    முதலமைச்சர் இன்று ஒன்றை சொல்லி இருக்கிறார். அதாவது பிரதம அமைச்சர் ஐந்து டீ யை முன்னிலைப்படுத்தினார்.

    டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.

    ஆனால் டேலண்ட் ஆகத்தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது. டெக்னாலஜி காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. டூரிசம் காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது.

    அதை மாதிரி ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு தான் வந்தே பாரத் வந்துள்ளது. எந்த டீ யும் நீங்கள் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ யையும் செயல்படுத்தி தான் இந்த வந்தே பாரத் ரெயில் வந்துள்ளது.

    இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு அனாவசியமாக பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டும். அதனை சீர்கெடுக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. விநாயகர் சிலையை உயரமாக வைக்கக்கூடாது என கூறினார்கள். அதற்காக அளவீடுகளை கட்டுப்படுத்தி குறைத்தோம். அதிக கட்டுப்பாடுகளை விதித்தால் வைக்கும் எண்ணிக்கை குறையும் என்கிற உள்நோக்கத்தோடு தான் செயல்படுத்துகிறார்கள்.

    ஆனால் விநாயகரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    சனாதனத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சனாதனம் இங்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் எந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகரை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்று கொசுவை கூட உங்களால் ஒழிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.

    எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.

    விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.
    • நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன.

    நெல்லை:

    இந்திய ரெயில்வே துறை சார்பில் ரெயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உலகத்தரத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    பயண தூரத்தை அதிவேகத்தில், கடப்பதால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

    நாடு முழுவதும் இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரெயிலான சென்னை-கோவை ரெயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் கோரிக்கை வலுத்தது. அதன் அடிப்படையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது. அதற்கு ஏற்ப பிட்லைன், தண்டவாளங்கள் பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 21-ந்தேதி இந்த ரெயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. பிறகு மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இரவு நெல்லைக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ரெயிலை காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதியம் இந்த வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயிலுடன் விஜயவாடா-சென்னை சென்ட்ரல், பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-ஐதராபாத் (கச்சிகுடா), காசர்கோடு-திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா), பூரி-ரூர்கேலா, உதய்பூர்-ஜெய்ப்பூர், பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் (சபர்மதி) ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வந்தே பாரத் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பிரதமர் பேசுகின்ற மன் கீ பாத் நிகழ்ச்சியை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர்.

    நெல்லை சந்திப்பில் இருந்து தற்போது ரெயில் புறப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை ரெயிலில் பயணம் செய்தார். இதேபோல மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சி வரை பயணம் செய்தார்.

    தொடர்ந்து இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சில நிமிடங்கள் நின்று செல்கிறது. அந்தந்த ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் இந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இந்த ரெயிலில் வழக்கமான சேவையானது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

    இந்த பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் இந்த ரெயிலின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின.

    நாளை சென்னையில் இருந்து பயணிக்க மட்டும் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தன. இந்த ரெயிலில் சாதாரண ஏ.சி. பெட்டிகளில் உணவுடன் சேர்த்து பயணிக்க ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டிகளில் ரூ.3,005 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளுக்கு காலையில் டீ, காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ரெயிலில் டீ, ஸ்நாக்ஸ், இரவு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் எடுக்கும்போதே அதனை தவிர்க்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 652 கிலோமீட்டர் தூரத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து 7 மணி நேரம் 50 நிமிடத்திற்குள் அடைந்துவிடும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்னகத்தில் அதிக வருவாயை அள்ளிக்கொடுக்கும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயிலில் 1 வி.ஐ.பி. பெட்டி மற்றும் 7 சாதாரண பெட்டிகள் உள்ளன.

    வி.ஜ.பி. பெட்டியில் 52 இருக்கைகள் உள்ளன. மற்ற பெட்டிகளில் தலா 76 இருக்கைகள் உள்ளன. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பெட்டிகளில் சார்ஜர் வசதி, சாப்பிட தேவையான வசதி, நவீன கழிப்பிட வசதி, வை-பை வசதி, சுழலும் இருக்கைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ரெயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் மற்ற ரெயில்களை விட கூடுதலாக சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி பெண்கள் தங்களது கை குழந்தைகளுடன் தனியாக பயணம் செய்யும் போது கழிப்பறைக்கு செல்லவேண்டி இருந்தால் குழந்தையை அங்கு கொண்டு சென்று உட்கார வைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளிலும் பாதுகாப்புக்காக தலா 2 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசல் பகுதியிலும் தலா 2 சி.சி.டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    முற்றிலும் சென்சார் மயமாக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் மட்டுமே ரெயிலில் ஏற முடியும். மற்ற ரெயில்களை போல ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய முடியாது. அவ்வாறு படிக்கட்டில் நின்றால் ரெயில் அங்கிருந்து நகராத வகையில் இந்த ரெயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்ற பின்னர் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அதன்பின்னரே ரெயில் புறப்பட முடியும்.

    ×