என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • முருகனின் மகனுக்கும், சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43). விவசாயி. இவரது மகனுக்கும், ஏர்வாடி கோவில் வாசலை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவா, முருகன் வீட்டிற்கு வந்து, அவரது மகனை அவதூறாக பேசினார்.

    இதனை முருகன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

    • அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • தி.மு.க. தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆர்வமுடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியிலும், 5-ந்தேதி தென்காசியிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் 2 நாட்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை, குமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி வருகிற 17-ந்தேதி காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மதியம் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்று மாலை காரில் புறப்பட்டு நெல்லை வருகிறார்.

    அவருக்கு நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் வைத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார்.

    மறுநாள்(18-ந்தேதி) காலை நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    அன்று மாலை நெல்லை டவுனில் உள்ள பள்ளி மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே எழுச்சியுரை ஆற்றுகின்றார்.

    அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆர்வமுடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மடத்துப்பட்டி தொடக்கப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வருவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்து வருகிறார்கள்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மது போதைக்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர வருகை தராமல் இருப்பதாகவும்,

    மேலும் மது போதையில் பள்ளிக்கு வருவதாகவும், இதனால் மாணவர்களின் படிப்பு பாழாகி விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பள்ளியை நிர்வகிக்கும் டயோசீசன் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோரை நேரில் சந்தித்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் அந்த பெற்றோர்கள் இன்று புகார் மனு அளித்து ள்ளனர்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர்கள் மனு அனுப்பி வைத்துள்ளனர்.

    • தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ஜெயமாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகளிரணியின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து மகளிர் அணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், வருகிற 14-ந்தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் வலுவாக இருந்து 40 தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் அன்னபூரணி, தமயந்தி, பார்வதி மோகன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவுரி ஒரு கண் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுரி தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துபாண்டியன் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

    இதில் மூத்த மகள் கவுரி(வயது 21) நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக செவிலியராக பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்த பின்னர் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பிடிக்காத காரணத்தால் கவுரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துவிட்டார்.

    அதன்பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாயார் வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வேதனையில் இருந்த கவுரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
    • கடந்த 3-ந் தேதி முதல் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்ற முயற்சிப்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை பஸ் நிலையம் எதிரே ஜோதிபுரம் திடலில் தென் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். இதில் பொருளாளர் மாரியப்பன், போராட்ட குழு தலைவர் பரமசிவன், போராட்ட குழுச் செயலாளர் சந்திரலால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பணி யாற்றும் 600-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் ஏ.ஐ.எப். திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும். இதனால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர். நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும். சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.

    கடந்த 25.2.2001-க்கு பிறகு பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தரை பாலத்தில் சென்ற போது ஆட்டோவும், ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானது.
    • படுகாயம் அடைந்த சந்தன குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தென்கரையை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 37 ). இவர் சம்பவத்தன்று திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோவும், ஜீப்பும் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் சந்தன குமார் படுகாயம் அடை ந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்கு றுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவை ஓட்டி வந்த நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்த உதயா (21) மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சொத்தில் மும்தாஜ் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
    • மும்தாஜ் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். மும்தாஜின் பெற்றோர் வீடு அம்பையில் உள்ளது.

    மும்தாஜின் பெற்றோர் சொத்தில் அவர் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த சொத்தை பங்கு வைப்பது தொடர்பாக ஏற்கனவே மும்தாஜ் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் அங்குள்ள கூட்டரங்கில் மனு வாங்கிக் கொண்டிருக்கும்போது வந்த மும்தாஜ் திடீரென ரிப்பனால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து ரிப்பனை பிடுங்கினர். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
    • மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் 50 சதவீதம் குறைவாக பெய்த நிலையில் கார் சாகுபடி முழுமையாக பொய்த்து போனது. மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு தாமிரபரணி நேரடி பாசனம் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் மட்டுமே நெல் நடவு நடைபெற்றது.

    அதிலும் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது எந்த அளவில் பயன் அளிக்கும் என தெரிய வில்லை என்று விவசாயிகள் புகார் கூறிவந்தனர்.

    இதனிடையே மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது. இங்குள்ள 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பல முறை மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் எடுத்து ரைத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் மானூர் பகுதி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்து மனு அளித்தனர். மாவட்டம் முழுவதுமே வறட்சியான சூழல் நிலவுகிறது. எனவே நெல்லை மாவட்ட வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரசுக்கு இது குறித்து பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து செவி சாய்க்காவிட்டால் இம்மாதம் 30-ந் தேதி வன்னிகோனேந்தல் பகுதியில் 5 ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தங்கள் பகுதிக்கு வறட்சி நிவாரணம் கிடைக்காவிடில் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உறுதி அளித்தார்.

    • உடையார்பட்டியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செய லாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் சுதா பரம சிவன், மாநில கொள்கை பரப்பு துணைச் செய லாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்து கருப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செய லாளர் ஜெகநாதன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், பகுதி செய லாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, ஜெனி, சண்முக குமார், மோகன், சக்தி குமார், காந்தி வெங்கடாசலம், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணைச் செயலாளர் மாரீசன், பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், தொழில்நுட்ப அணி விக்னேஷ், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், வட்ட செயலாளர் பாறையடி மணி, மாணவரணி சிவபாலன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், மணி, பழைய பேட்டை கணேஷ், பக்கீர் மைதீன், தங்க பிச்சையா, பழனி சுப்பையா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவது குறித்து நிர்வாகிகள் பேசினர்.

    • மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலச்செவல் மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுபக்குமார், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் அன்னபூரணி கலந்து கொண்டு பேசினார். இதில் சேரன்மகாதேவி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தி பேசினர்.

    • சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது
    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    திருவாடுதுறை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-வது தொகுப்பு நிறைவு விழா நெல்லையில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து தொடங்கி 4 ரத வீதிகளிலும் வலம் வரும் வகையில் திருக்கயிலாய பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியை திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தொடங்கி வைத்து 2 குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பேரணிக்கு முன்பாக சென்றார்.

    அதனைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் சிவ வாத்தியங்கள் இசைத்தும், சங்கு நாதம் ஊதியம், கோலாட்டம் ஆடியும் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணி நெல்லையப்பர் கோவில் முன்பு தொடங்கி வாகையடி முனை தெற்கு ரத வீதி, சந்தி பிள்ளையார் கோவில், மேலரத வீதி, லாலா சத்திர முக்கு, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து அடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் திருமுறை பதிகங்கள் பாடி ஊர்வலமாக சென்றனர்.

    இந்த பேரணியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7-ம் வகுப்பு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது.

    ×