என் மலர்
திருநெல்வேலி
- தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார்.
- கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை டவுன் அரசன் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 50). இவர் நெல்லை டவுன் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசன் நகர் பகுதியில் வீடுகட்டி மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இந்த தெருவில் 500 மீட்டர் தூரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து சாலையில் குறுக்காக கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார். இதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்து தார் சாலையை மறைத்து கல்தூண் நடுவதற்கு முயற்சி செய்தார்கள். இதனை நாங்கள் தட்டிக்கேட்டபோது என்னையும், எனது கணவரையும் பார்த்து அவதூறாக பேசினார்கள். சாலையை மறைக்க முயற்சி செய்ததை தட்டிக்கேட்டதால் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரதராஜனுக்கு இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த வரதராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை மணவிவிளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 33). தொழிலாளி. இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு இருந்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது. திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும் வயிற்றுவலி குணம் ஆகவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான்.
- வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தலைமை தாங்குவோம் என்ற தலைப்பில் பேசியதாவது:-
பெண்கள் உயர்கல்வி கற்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. இன்று சமத்துவம், சமூகநீதி கொள்கை அடிப்படையில் பெண்கள் உயர்கல்வி கற்று கல்வி தரத்தில் உயர்ந்து வருகிறார்கள். கல்வி தான் நம்முடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான். ஒரு குறிக்கோளுடன் தன்னம்பிக்கை, திட்டமிடுதலுடன் ஒரு மனிதன் வாழ்ந்தால் அதுவே ஒரு அதிசயமாகும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் கல்வி மேதை என்பது மறுக்கப்பட்டு வந்தது. சுதந்திரம் இருந்தபோதும் அதனை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். சமத்துவம், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் அனைவரும் சமம். நமது முன்னோர்கள் உயர்கல்வி கற்பது என்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் வகுத்த பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இன்று நாம் அனைவரும் உயர்கல்வி கற்று வருகிறோம். தற்போதுள்ள பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். படிக்கலாம். வேலை பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும். கல்வி என்பது மிகப்பெரிய பேராற்றல் மிக்க ஆயுதம் என்றார் நெல்சன் மண்டேலா. கல்வி என்ற பேராயுதத்தை ஏந்தினால் இந்த உலகத்தில் வெற்றி பெறலாம். மாணவர்களாகிய உங்களுக்கு உடல் பலமும் மன பலமும் மிக முக்கியமாகும்.
எனவே, மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும். எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன், திட்டமிட்டு, ஒரு கனவு கண்டு, அந்த கனவின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் வாழ வேண்டும். ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு செல்வது உயர்கல்வியே. கல்வி என்பது மாபெரும் ஆயுதம் ஆகும். பெண்களை சாதிக்க வைப்பது கல்வி தான். கல்வி கற்பதின் மூலம் உலகில் தலைசிறந்தவர்களாக தலைமை தாங்கலாம். அதற்கு கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது.
நெல்லை:
நெல்லையில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.
நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 11 அம்மன் கோவில்களிலும் அம்மன்களுக்கு துர்கா ஹோமமும், யாக சாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன.
இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்
இன்று காலை 8 மணிக்கு 11 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பு அணிவகுத்தன. இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியில் நிற்கின்றன. இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 11 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.
இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 36 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
தச்சநல்லூர்
இதேபோல் தச்சநல்லூரில் இன்று இரவு சந்திமறித்தம்மன், தேனீர்குளம் எக்காளதேவி அம்மன், வாலாஜபேட்டை முத்துமாரியம்மன், தளவாய்புரம் துர்க்கை அம்மன், உச்சினிமகாளியம்மன், உலகம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சப்பரங்கள் அணிவகுத்து நாளை மதியம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
- முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- மரணமடைந்த வேல்துரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை:
சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அதனை அறிந்ததும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தற்போதைய செகந்திராபாத் பாராளு மன்ற தொகுதியின் பொறுப் பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரு மான ரூபி மனோகரன் எம்.எல்..ஏ. உடனடியாக நெல்லை திரும்பினார். மரணமடைந்த வேல்து ரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளையங்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், களக்காடு கிழக்கு வட்டார பொறுப்பாளர் பானு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், கவுன்சிலர் மரிய சாந்தி, முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் நிர்வா கிகள் சித்திரைவேல், ஆனந்த ராஜன், தாழைகுளம் ராஜன், நந்தகோபால், பிலியன்ஸ், ஸ்ரீதேவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
- வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த திவ்யா நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரூபசேகர். இவரது மனைவி திவ்யா (வயது31). இவர் வள்ளியூரில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
இதற்காக அவர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வள்ளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வள்ளியூர்-சவுந்திரபாண்டியபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
- 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார்
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
அமைச்சர் உதயநிதி நெல்லை வருகை
இதையொட்டி மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
மேலும் அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
அதன்படி வருகிற 27-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
உற்சாக வரவேற்பு
இதற்காக நாளை (வியாழக்கிழமை) மாலையில் விருதுநகரில் இருந்து காரில் நெல்லைக்கு அவர் வருகிறார். அப்போது அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தாழையூத்து பண்டாரகுளம் அருகே கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்குள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விடுதியில் அவர் இரவில் தங்குகிறார்.
27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார். பின்னர் மாதா மாளிகையில் நடைபெறும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
நூலகம் திறப்பு
தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.டி.சி.நகர் பகுதியில் இளைஞரணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வழியாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்திற்கு அமைச்சர் உதயநிதி வருகிறார். அங்கு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
ஆய்வு கூட்டம்
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் மாலையில் பாளை திருமால் நகரில் நூலகத்தை திறந்து வைத்துவிட்டு குமரி மாவட்டத்திற்கு காரில் புறப்படுகிறார்
- திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர்.
- தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது.
- இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.
நெல்லை:
பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.
இந்த போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு முதல் 2 நிலைகளை பெறுகின்ற அணிகளுக்கு கருவேலம் வெற்றிக் கோப்பைகளும், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் முருகேசன், பீர்அலி, டாக்டர் மாரிக்கண்ணன், சார்லஸ், ஜாண்சன், ராதா, மோகன், முனைவர் ஹமர் நிஷா,மங்கை,ஜெயா மற்றும் சிந்தா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
- வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கண்ணன் குளம் பாரதி நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி பவித்ரா (வயது25).
மணிகண்டன் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந்தேதி இவர் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணி கண்டனுக்கு முக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது.
இதற்காக பணம் தேவை ஏற்பட்டதால் பவித்ரா வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைப்பதற்காக எடுக்க வந்தார். அப்போது வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா இதுபற்றி பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அதன் பேரில் பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விஜயதசமி தினத்தன்று தொடங்கும் செயல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தை கள் பச்சரிசியில் 'ஹரி ஓம்' என எழுதி கல்வி கற்றலை தொடங்கினர்.
நவராத்திரியின் 9 நாள் ஸ்ரீதேவி கொழுவிருந்து10-ம் நாளான விஜயதசமி அன்று மகிசனை போரிட்டு சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதாக ஐதீகம்.அதன் காரணமாக விஜயதசமி தினத்தன்று செய்யும் செயலும் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன் அடிப்படையில் விஜயதசமி தினத்தன்று, புதிய தொழில் தொடங்குவது புதிய செயல்களை செய்வது, கல்வி கற்றலை தொடங்குவது போன்ற ஐதீகங்களை வாடிக்கையாக பொது மக்கள் வைத்துள்ளனர். அதன்படி விஜயதசமியான இன்றைய தினம் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றல் நிகழ்ச்சியை தொடங்கினர். புதிதாக கல்வி கற்கும் குழந்தைகள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு வருகை தந்து ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்து பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும், உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதியும் தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.
நெல்லையப்பர் கோவில் உழவர் பணி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர். இதே போல் நெல்லை டவுன் பகுதியில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவில் மற்றும் நெல்லை நகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினர்.
- தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது.
நெல்லை:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளை யங்கோட்டையில் நடை பெறும் தசரா விழா மற்றும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகியவை ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பிரதான கோவிலான பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினந்தோறும் பல்வேறு பூஜைகள், நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பாளையில் உள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வ கர்மா உச்சினிமாகாளி, புதுப் பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை தொடங்கி யது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.
விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லெட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்குமாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது. மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரு கிறார்கள்.
நாளை(புதன்கிழமை) காலை பாளை ராஜகோபாலசுவாமி கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. அப்போது ஆயிரக்க ணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் வைத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
பி்ன்னர் நாளை மாலை 12 சப்பரங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக பாளை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நிற்கும். அதன்பின் நள்ளிரவில் பாளை எருமைகிடா மைதானத்தில் 12 சப்பரங்கள் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இதனையொட்டி நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் 36 சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர் அவை தேரடி திடலில் அணிவகுத்து நிற்கிறது. மாநகர் பகுதி முழுவதும் மொத்தம் 63 சப்பரங்கள் அணிவகுப்பானது இன்றும், நாளையும் நடக்கிறது.
இதனையொட்டி மாநகர் பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் எருமைகிடா மைதானமும் சூரசம்கா ரத்திற்கு தயார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






