search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussera Ceremony"

    • தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது.

    நெல்லை:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளை யங்கோட்டையில் நடை பெறும் தசரா விழா மற்றும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகியவை ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பிரதான கோவிலான பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினந்தோறும் பல்வேறு பூஜைகள், நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து பாளையில் உள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வ கர்மா உச்சினிமாகாளி, புதுப் பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை தொடங்கி யது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.

    விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லெட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்குமாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.

    விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது. மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரு கிறார்கள்.

    நாளை(புதன்கிழமை) காலை பாளை ராஜகோபாலசுவாமி கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. அப்போது ஆயிரக்க ணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் வைத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    பி்ன்னர் நாளை மாலை 12 சப்பரங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக பாளை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நிற்கும். அதன்பின் நள்ளிரவில் பாளை எருமைகிடா மைதானத்தில் 12 சப்பரங்கள் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    இதனையொட்டி நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் 36 சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர் அவை தேரடி திடலில் அணிவகுத்து நிற்கிறது. மாநகர் பகுதி முழுவதும் மொத்தம் 63 சப்பரங்கள் அணிவகுப்பானது இன்றும், நாளையும் நடக்கிறது.

    இதனையொட்டி மாநகர் பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் எருமைகிடா மைதானமும் சூரசம்கா ரத்திற்கு தயார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×