என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.
    • திருச்சியில் இருந்து இரவு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.


    கோடை விடுமுறை என்பதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் புக் செய்பவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.

    இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயிலை இயக்க திருச்சி ரெயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி திருச்சியில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.

    இந்த ரெயில் திருவரும்பூர் (இரவு 11.20 மணி), பூதலூர் (11.36), தஞ்சை (11.57), பாபநாசம் (நள்ளிரவு 12.21), கும்பகோணம் ( 12.34), மயிலாடுதுறை (12.54), வைத்தீஸ்வரன்கோயில் (1.13), சீர்காழி (1.20), சிதம்பரம் (1.33), கடலூர் துறைமுகம் (2.06), திருப்பாதிரிபுலியூர் (2.13), பண்ருட்டி (2.42), விழுப்புரம் (அதிகாலை 3.40), திண்டிவனம் (4.13), செங்கல்பட்டு (5.18) வழியாக நாளை காலை (திங்கள்கிழமை) 6.05 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த சிறப்பு முன்பதிவு இல்லாத ரெயிலை பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.

    • தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
    • தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

    திருச்சி:

    மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை நடந்து முடிந்த தொகுதிகளில் 310 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை பாரதிய ஜனதா செய்ய உள்ளது.

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது, யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற இருக்கின்றது. வரும் 4-ம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.

    தமிழக முதலமைச்சர், மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகிறார். அது அவர்களுடைய பகல் கனவாகவே இருக்கப்போகிறது. காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

    பிரதமர் மோடி பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பொய்யாக திரித்து பேசி வருகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி சீமான் என்னை விட அதிகமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சொல்லி உள்ளார் என்ற கேள்விக்கு, அவர் கட்சியைக் கலைக்க தயாராகி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    • இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
    • ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    மலேசியா சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 68).

    இவர் கடந்த 20-ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை மெயின் ரோடு கோவில்பட்டிக்கு சென்றார்.

    மீண்டும் மலேசியா செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு தனது மனைவி அமுதாவுடன் வந்தார்.

    இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திடீரென ராஜலிங்கம் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அமுதா, அவரை உடனடியாக மீட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்த தனியார் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    • பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை, மேலதெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) மற்றும் சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் (56) ஆகிய இருவரும் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் பிறந்த தேதியில் மாற்றம் செய்தும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதனை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
    • அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    திருச்சி:

    பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக் கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அசாம் மாநிலத்திலிருந்து பெண் யானை கொண்டு வரப்பட்டது.

    அதற்கு இந்த கோவிலின் சார்பில் அகிலா என்று பெயர் சூட்டப்பட்டது. அதனை கவனித்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஜம்புநாதன் என்ற யானை பாகனை நியமித்து பராமரித்து வருகின்றனர்.

    பெண் யானை அகிலா கடந்த 2002 மே 24-ந்தேதி பிறந்து அசாம் மாநிலத்திலேயே வளர்ந்தது. 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அன்று முதல் அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அகிலாவிற்கு 21 வயது முடிந்து 22-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. அதற்காக நேற்று பெய்த சாரல் மழையிலும் ஷவரிலும் அகிலா ஆனந்த குளியல் போட்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாரானது.

    இன்று காலையில் யானை அகிலாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவிலை வலம் வர செய்தனர். பக்தர்கள் பலரும் யானைக்கு பழங்கள் கொடுத்து உபசரித்து வணங்கினர். இன்று மாலை 4 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் அகிலாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதற்காக ஏராளமான பழங்களை பரிசுகளாக கொடுக்கின்றனர். இந்த பிறந்தநாள் விழாவிலும், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அகிலாவிற்கு பரிசு அளிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண் மற்றும் அவரது பெற்றோர் திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர்.
    • நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என திருவேங்கை நாதன் ஏங்கினார்.

    மணச்சநல்லூர்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருவேங்கை நாதன் (வயது 40 ). இவர் திருமணம் செய்து கொள்வதற்காக ஆன்லைன் முலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பெண் தேடி வந்தார்.

    இந்த நிலையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மணச்சநல்லூர் பகுதியில் இருப்பதை அறிந்தார்.

    உடனே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினார். கடந்த 2021-ம் ஆண்டு அவரது குடும்பத்துடன் மணச்சநல்லூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த பெண்ணிற்கு திருவேங்கையை பிடிக்கவில்லை. அதை தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர். ஆனால் திருவேங்கையால் அந்த பெண்ணை மறக்க இயலவில்லை. நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என ஏங்கினார்.

    பின்னர் ஆத்திரம் அடைந்த திருவேங்கைநாதன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து, அதனை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களில் விநியோகம் செய்துள்ளார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனே இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருவேங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வினியோகம் செய்த வாலிபரை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
    • கோவை மாவட்ட காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா். சவுக்கு சங்கர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆசிரியராக இருக்கும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

    இதனால் பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    அவர் ஆறு மாதங்களுக்கு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

    கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த வழக்கிலும் ஜாமின் கிடைக்கும் வரை சிறையில் இருந்து வெளியேற வரமுடியாது.

    • போலீசார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
    • போலீஸ் காவலுக்கு பின்னர் மீண்டும் நேற்று மதியம் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருச்சி:

    தமிழக பெண் போலீசாரை தவறாக விமர்சித்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 10-ந்தேதி டெல்லியில் திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து போலீசார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின் போது அவர் கூறுகையில், சவுக்கு சங்கரின் பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் அவரை பேட்டி எடுத்து எங்கள் சேனலில் ஒளிபரப்பு செய்தேன்.

    இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த தலைவரின் தூண்டுதலின் பேரிலும் இதை செய்யவில்லை.

    பெண் போலீசார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தினை தவிர்த்து இருக்கலாம். இவ்வளவு பிரச்சனையாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

    போலீஸ் காவலுக்கு பின்னர் மீண்டும் நேற்று மதியம் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் , சதாசிவம், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர்.

    அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(புதன்கிழமை) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மதியம் முதல் அய்யாக்கண்ணு சென்னை செல்வதை தடுப்பதற்காக திருச்சி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் உமா காந்த், உத்தண்டன், வெற்றிவேல், சதாசிவம், மதிமன்னன், ராஜேந்திரன், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    எங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது செய்துள்ளனர். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.

    • கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
    • ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

    மணப்பாறை:

    கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடும் வெயிலால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டது. விவசாய பயிர்களும் கருகும் நிலையும் ஏற்பட்டது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலும் 109 டிகிரிக்கும் மேல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    முதல் 2 நாட்கள் மிதமான மழை பெய்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மிக கனமழை பெய்தது. மணப்பாறை அருகே தொப்பம்பட்டி, நல்லாம்பிள்ளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அப்பகுதி விவசாயிகள் சுமார் 300 ஏக்கருக்கு மேல் கோடை காலத்திற்கு ஏற்ற குறுவை நெல் ரகங்களை பயிரிட்டிருந்தனர்.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மணப்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன. மேலும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் மணிகள் முளைவிடத் தொடங்கின.

    தண்ணீரை வெளியேற்றவும், அறுவடை செய்யவும் வழியில்லாமல் தொடர்ந்து நெல் மணிகள் வயல்களிலேயே முளைவிட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்,

    கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. அப்போது மழை பெய்திருந்தால் பயிர்கள் செழிப்பாக வளர உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்போது பெய்திருக்க வேண்டிய மழை காலம் கடந்து நெற்கதிரானபோது காற்றுடன் மழை பெய்துள்ளதால் நெற்கதிர்கள் சாய்ந்து விட்டன.

    அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பெய்த மழையால் நெற் பயிர்கள் வயலில் தேங்கிய நீரில் மூழ்கி, முளைவிடத் தொடங்கிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் கோடை கால சாகுபடி என்பதால் விவசயிகள் பலரும் பயிர் காப்பீடு செய்ய தவறிவிட்டனர். எனவே, அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது.
    • ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 4:20 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, கருமண்டபம், உறையூர் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோன்று மேலபுதூர் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக பகுதிகளில் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்தனர்.

    அதேபோன்று திருவெறும்பூர் பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1154.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று திருச்சி ஜங்ஷன் 82.8, திருச்சி டவுன் 68 , பொன்மலை 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கள்ளக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு அணைக்கட்டு 12.6,புள்ளம்பாடி 34.8,தேவி மங்கலம் 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னணியாறு டேம் 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44,நவலூர் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பர நாடு 19, துறையூர் 21.


    ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் தெருசாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டாடப்பட்டு கிடக்கிறது.

    நேற்று பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு காலி மனைகளில் வெள்ள நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் உச்சகட்டமாக இருந்தது 110 டிகிரி வரை வெயில் மக்களை சுட்டெரித்தது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிய மக்கள் நேற்று மழைக்கு பயந்து வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    • கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெறுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ், பனியன் அணிந்து மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு கவர்ச்சிகரமாக ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. பொதுவாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதை அறிந்த அந்த நடன பெண்கள் தங்கள் பதிவுகளை நீக்கி உள்ளனர்.

    ×