search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாளில் 1154 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது- துண்டிக்கப்பட்ட சாலைகளால் மக்கள் தவிப்பு
    X

    ஒரே நாளில் 1154 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது- துண்டிக்கப்பட்ட சாலைகளால் மக்கள் தவிப்பு

    • திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது.
    • ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 4:20 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, கருமண்டபம், உறையூர் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோன்று மேலபுதூர் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக பகுதிகளில் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்தனர்.

    அதேபோன்று திருவெறும்பூர் பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1154.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று திருச்சி ஜங்ஷன் 82.8, திருச்சி டவுன் 68 , பொன்மலை 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கள்ளக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு அணைக்கட்டு 12.6,புள்ளம்பாடி 34.8,தேவி மங்கலம் 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னணியாறு டேம் 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44,நவலூர் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பர நாடு 19, துறையூர் 21.


    ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் தெருசாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டாடப்பட்டு கிடக்கிறது.

    நேற்று பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு காலி மனைகளில் வெள்ள நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் உச்சகட்டமாக இருந்தது 110 டிகிரி வரை வெயில் மக்களை சுட்டெரித்தது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிய மக்கள் நேற்று மழைக்கு பயந்து வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×