என் மலர்
தென்காசி
- இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.
- வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று முதல் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் தடை நீடிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.
இதனால் தடை விதிக்கப்பட்டிருந்த பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்த நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்த ஆண்டிற்கான குற்றால சாரல் திருவிழா அடுத்த மாதம் நடத்தப்படு வதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. சாரல் திருவிழா தொடங்கப்படும் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது. மாலையில் கனமழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை முதல் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது. இதனால் இன்றும் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுடர் வடிவேலு (வயது 57).
இவருக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த தவமாரியம்மாள் என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது சுடர் வடிவேலு தனது குடும்பத்துடன் மனைவி ஊரான ஊத்து மலையில் வசித்து வந்தார். அவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது இளைய மகளுக்கு பாம்பு கடித்ததால் தவமாரியம்மாள் அவரை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் சுடர் வடிவேலு வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதில் அவரது கையும் துண்டானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சுடர் வடிவேலு பஸ் நிறுத்தம் பகுதியில் கடை வைத்திருக்கும் நிலையில் அதன் எதிர் திசையில் சாலையின் மற்றொரு புறத்தில் கார்த்திக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சுடர் வடிவேலு பூக்கடையை விரிவாக்கம் செய்தார். அப்போது சாலையை ஒட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கார்த்திக் அவரிடம் சத்தம் போட்டுள்ளார். அதற்கு சுடர் வடிவேலுவும் பதிலுக்கு சத்தம் போட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடனும், சுடர் வடிவேலு தனது ஆதரவாளர்களுடனும் என இருதரப்பாக பிரிந்து 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊரை சார்ந்த தன்னையே சுடர் வடிவேலு எதிர்க்கிறார் என்று கருதிய கார்த்திக், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது கூட்டாளிகளான அதே பகுதியில் வசிக்கும் கணேசன்(30), மணி வண்ணன் (28), அருள் பாண்டியன், உதயகுமார் ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு சுடர் வடிவேலு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக இருந்த சுடர் வடிவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
- குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் இன்று பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
- அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்று காலையிலும் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடையானது நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, மதிய நேரத்தில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று அருவிகளை ரசித்து பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மழைப்பொழிவு குறைந்து அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட பலருக்கும் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் (60), செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று காலையில் கோவில்பட்டி செல்வராஜ் (70), மதுரை விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூர் மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமார் (72), தனலட்சுமி (70) ஆகியோருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
அவர்களும் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி கலெக்டர் லாவண்யா, மாவட்ட சுகாதார துறை அதிகாரி கோவிந்தன், உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பாபு, இன்ஸ்பெக்டர் கவிதா, தென்காசி தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார் சண்முகநாதன் உள்பட அரசு அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சமையல் அறையில் உள்ள உணவு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பின் அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் சம்பவத்தன்று அசைவ உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அந்த அசைவ உணவின் மாதிரிகள், குடிநீரும் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த இல்லத்தில் இருந்த மற்ற 48 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த இல்லத்திற்கு உதவி கலெக்டர் லாவண்யா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பழனிநாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் உணவு ஒவ்வாமையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
3 பேர் உயிரிழந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது.
- வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் தென்காசியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த வெளியூர் நபர்கள் பலரும் குற்றால அருவிகளில் அலைமோதினர். அவர்கள் காலை முதலே குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிந்தனர்.
குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படகுகளுக்கு வண்ணம் தீட்டும் பணி, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படகு குழாமில் தண்ணீர் சற்று அதிகரித்ததும் படகு சவாரி தொடங்கி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் ஸ்ரீபத்மாவதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரூ.25 ரூபாய் மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய்க்கு வாங்கி ஸ்ரீ பத்மாவதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி என்.ஓ.சி. கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
பத்மாவதி இன்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று அவரை 'சஸ்பெண்டு' செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த 1 வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மலை அடிவார பகுதி மற்றும் நகர் பகுதிகளிலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது.
இதனால் 2 மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பாதுகாப்பு கருதி இன்று 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை குறைந்து நீர்வரத்து சீரானதும், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.






