என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் 1 கிலோ நகை-ரூ.50 லட்சம் கைவரிசை: கொள்ளை நடந்த வீட்டில் முக்கிய தடயங்கள் சேகரிப்பு
- மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும்.
- போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.
ராஜசேகர், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மனைவி மகேஸ்வரி, மகன் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு புறப்பட்டு சென்றார்.
மீண்டும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 1 கிலோ 150 கிராம் தங்க நகைகள், ரூ.50 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், ஆடிவேல் உள்ளிட்டோர் தலைமையில் மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வி நிறுவன வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வீட்டில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் வளாகத்தின் மெயின் கேட்டில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் இல்லை.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் காம்பவுண்டை ஒட்டி உள்ள பெரியமரத்தின் வழியாக ஏறி மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த வளாகத்தின் பின்பகுதி தோட்டங்கள், காடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதால் மர்ம நபர்கள் அந்த வழியாக தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அதில் பதிவான ரேகைகளை பழைய குற்றவாளிகளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் கல்வி நிறுவன வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், வீடுகள், பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கடந்த 2 நாட்களாக சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு மேலும் கூடுதலாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அவரது வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்ததாகவும், நகையின் மதிப்பும் 1¼ கிலோவுக்கும் அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும். இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆலங்குளம் போலீசார் அங்கு விடிய விடிய முகாமிட்டு தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.






