என் மலர்tooltip icon

    தென்காசி

    • அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்த நிலையில் சாரல் மழையின் எதிரொலியாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த ஒரு வார காலமாக போதிய மழை இல்லாமல் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா ஏற்பாடுகளும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலம் பஸ் நிலையம், குற்றாலம் பேரூராட்சி, தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில் மற்றும் தென்காசியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    குற்றாலத்தில் இன்று காலையில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம், தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது.
    • குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

    கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.

    எனினும் அருவிகளில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலத்தில் இதமான சூழ்நிலை காணப்படுகிறது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    குற்றால சாரல் திருவிழா வரும் 19-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

    • மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.

    அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.

    பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.

    இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்கள் போன்று வேலை நாட்களிலும் சுற்றுலாப் பணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • கேரளாவில் இருந்து புது வரவாக அபி எனும் மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

    இதனால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்கள் போன்று வேலை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இன்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலை பகுதிகளில் வாசஸ் தலங்களில் கிடைக்கக்கூடிய அரிய வகை பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து புது வரவாக அபி எனும் மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    பலாப்பழ சீசனும் முழுமையாக தொடங்கி உள்ளதால் பலாப்பழங்கள் குற்றாலம் செல்லும் சாலையில் அங்கங்கே வியாபாரிகளால் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனை குற்றாலம் வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
    • ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

    சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4-ந் தேதி நடந்த நகர்மன்ற சேர்மன் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தலா 15 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தது. தொடர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மன் ஆக தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதேபோல துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நகராட்சியில் சேர்மன் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என கூறி சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் கமிஷனர் (பொறுப்பு) நாகராஜனிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில் இன்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி சேர்மன் பதவி பறிபோனது.

    தி.மு.க.வை சேர்ந்த சேர்மன் பதவி பறிபோன சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்து உள்ளதால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி இழந்தார் . இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதிய சேர்மன் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும்.
    • போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.

    ராஜசேகர், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மனைவி மகேஸ்வரி, மகன் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு புறப்பட்டு சென்றார்.

    மீண்டும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 1 கிலோ 150 கிராம் தங்க நகைகள், ரூ.50 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், ஆடிவேல் உள்ளிட்டோர் தலைமையில் மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வி நிறுவன வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வீட்டில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் வளாகத்தின் மெயின் கேட்டில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் இல்லை.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் காம்பவுண்டை ஒட்டி உள்ள பெரியமரத்தின் வழியாக ஏறி மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த வளாகத்தின் பின்பகுதி தோட்டங்கள், காடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதால் மர்ம நபர்கள் அந்த வழியாக தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அதில் பதிவான ரேகைகளை பழைய குற்றவாளிகளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் கல்வி நிறுவன வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், வீடுகள், பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கடந்த 2 நாட்களாக சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனிடையே கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு மேலும் கூடுதலாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அவரது வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்ததாகவும், நகையின் மதிப்பும் 1¼ கிலோவுக்கும் அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும். இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆலங்குளம் போலீசார் அங்கு விடிய விடிய முகாமிட்டு தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
    • கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் முழுமையாக இருக்கும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தற்போது கேரளாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது.

    தொடர் தடைக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதியில் அமைந்திருக்கும் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் அதனை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மேலும் சிற்றாற்று தண்ணீர் மூலம் பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் அதனை நம்பி விவசாய பணியிலும் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர். 

    • ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை தடை நீடித்தது.

    இந்நிலையில் மலைப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளில் நீர் வரத்து சீரானது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் மெயினருவியில் இன்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஏற்கனவே பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை முதலே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 

    • தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவும் பெய்த தொடர் மழையால் மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என தற்போது அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் மழை நீடித்து வருவதால் மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருகிற 28-ந்தேதி ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ண மடை படகு குழாமில் படகு போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    • மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.
    • இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி பகுதியில் இருந்து மெயின் அருவிக்கு பயணம் செய்வதற்காக மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.

    அப்போது பஸ் கண்டக்டர் அந்த பெண்களை கீழே இறங்குமாறு கூறியதோடு, அலட்சியமாக அடுத்த பஸ்சில் வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை முதல் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
    • இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.

    பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×