என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- குற்றாலத்தில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- தண்ணீர் வரத்தை பொறுத்து மற்ற அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஐந்தருவி, மெயின் அருவியில் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் மலைப்பகுதிகளுக்குள் பெய்துவரும் கனமழையின் காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீர் வரத்தை பொறுத்து மற்ற அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






