என் மலர்
சிவகங்கை
- துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
- முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலபணி திட்டம் சார்பில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டுதலின்படி "தூய்மை பணியில் இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கொங்கம்பட்டி கிராமத்தில் நடந்தது.
முகாமில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்கூடாது. துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 300 பேர் சிகிச்சை பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம், இளையான்குடி, வட்டார மருத்துவர் அருண் அரவிந்த், வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகமது, வங்கி துணை மேலாளர் பாலமுருகன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசர், இளையான்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் நோன்பரசன் மற்றும் ஆய்வுக்கூட பிரிவு ரஞ்சித் குமார், இளையான்குடி தாசில்தார் கோபி நாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிறைவு விழாவில் கொங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி சரண்யா பிரசாந்த், கண் மருத்துவர் ரிஷிகேஷ், செய்யது அபுதாஹிர், ஜனாப் முகம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பீர் முகமது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமாகனி செய்திருந்தனர்.
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
- மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு துணைத்தலைவர் பொன் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் மோகனசுந்தரம் வர வேற்றார். செயலாளர் முத்துமாடன் அறிக்கை வாசித்தார். பொருளா ளர் திருமாவளவன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் தங்கவேலு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
கணேசன் செயலாளராகவும், ஞானசேகரன் மாவட்ட பிரதிநி தியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்கவேண்டும்.
ராமேசுவரம் மார்கத்தில் இருந்து பகலில் ெரயில் வசதி இல்லாத நிலையில் காரைக்குடி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சுப்பன் கால்வாயை தூர்வார வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தினர்.
- சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மானாமதுரை
மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டம் இளையான்குடியில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஹாரூன்ரசீது தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளராக அகமது சிராஜீதீன், துணைச் செயலாளர்களாக பைசூல் ரகுமான், சதாம் ஹூசேன் முஜிபர் ரஹ்மான், பொருளாளராக ஷேக்யமானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், மானாமதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் சுப்பன் கால்வாயை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், காளையார் கோவில் உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
- ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
- தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாரதா நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டு, சக்தி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
அம்மனுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், அதன் பின்னர் மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், மகாலட்சுமி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், ஐஸ்வர்ய லெட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கனகதுர்க்கை, மூகாம்பிகை உள்ளிட்ட அலங்காரம் செய்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை சிலம்பணி விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி திருப்பத்தூர் சாலை, மின்சாரம் வாரிய அலுவலகம் வழியாக கோவில் சென்றடைந்தனர்.
- திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.
இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.
மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.
எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.
போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- வருகிற 14-ந்தேதி இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கா திருவிழா தொடங்குகிறது.
- விழாவில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலம் 140 ஆண்டுகள் புகழ்மிக்க ஆலயம் ஆகும். இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதபட்டு சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டு பிராத்தனை நடை பெறும்.
இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இடைக்காட்டூர் திருஇருதயஆண்டவர் 140வருடத்திற்கும் மேலாக இங்கு ஏப்ரல் மாதம் 2நாட்கள் பாஸ்கா திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பாஸ்கா திருவிழா வருகிற 14, 15தேதிகளில் இரவு இடைக்காட்டூரில் உள்ள கிறிஸ்து அரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்பில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளை கலைஞர்கள் தத்ரூபமான முறையில் நடத்தப்படும்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நடித்து காண்பித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். 2நாட்கள் விடிய விடிய நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் இடைக்காட்டூர் வருவார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர் செய்து வருகின்றனர்.
- சிவகங்கை அருகே உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புரவி எடுப்பு விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அய்யனார், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.
நேற்று இரவு தேவகோட்டை குலாலர் தெருவில் உள்ள மகமாயியம்மன் கோவிலில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மண்ணால் ஆன குதிரை மற்றும் காளைகளை தோளில் சுமந்து சுமார் 4 கி.மீ தூரம் ஒத்தக்கடை, ஆற்றுப்பாலம், தளக்காவயல் விலக்கு வழியாக வேம்புடைய அய்யனார் கோவில் எதிரே உள்ள திடலில் பழங்கால முறைப்படி பனை ஓலையால் அமைக்கப்பட்ட பந்தலில் கிராம மக்கள் வைத்தனர்.
குழந்தை வேண்டியும், வீட்டுக்குள் பாம்பு, ஓணான் வராமல் இருக்க மணலால் செய்த ஆண், பெண், மிதளை பிள்ளை, பாம்பு, தேள், ஓணான் போன்றவற்றை நேர்த்திக்கடனாக வேம்புடைய அய்யனாருக்கு செலுத்தினர்.
விழாவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, பாப்பான்கோட்டை, இரவுசேரி, தளக்காவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாளை இரவு கோழி பூஜை நடைபெற உள்ளது.
- தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சமரச நாள் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.
- மையத்தில் வைக்கப்படும் பிரச்சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி பேரணியை தொடங்கிவைத்தார்.
அவர் பேசும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கடைப்பிடிக்கப்படு கிறது. சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்சினைக்கு இருதரப்பினரையும் வைத்து சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். இந்த மையத் தில் வைக்கப்படும் பிரச் சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும். பிரச்சினை களுக்கு அவசரம் காட்டாமல் இரு தரப்பினர் சம்மதத்து டன் அமைதியாக தீர்வு காணப்படும். தீர்வு உங்கள் கையில் என்றார்.
பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச் சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, சுந்தரராஜ், மாவட்ட உரிமை யியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டி, சத்திய நாராய ணன் மற்றும் சமரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
- தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






