

சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.
அதில் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்ப ங்களை, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழவின் மூலம் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களில் உரிய ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப் படும். அதன் பின்னர், நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.