என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார்.
    • கோவிலுக்கு சொந்தமான கோசாலை பகுதி ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் ஆய்வு நடத்தினார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு மனித உரிமைகளை மீறும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. மேலும் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேசை நியமித்துள்ளது.

    அவர் முழுமையான விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் நேற்று திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகிலுள்ள பயணியர் விடுதியில் வைத்து விசாரணையை தொடங்கினார்.

    அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சி.சி.டி.வி. காட்சிகள், சேகரிக்கப்பட்ட தடயங்கள் உள்ளிட்டவை சிவகங்கை மாவட்ட போலீசார் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் புகார், முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார்.

    பின்னர் மடப்புரம் கோவிலில் பணியில் இருந்த உதவியாளர் சக்தீஸ்வரன், கோவில் இணை ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் குமார், வினோத்குமார், கோவில் சி.சி.டி.வி. ஆபரேட்டர் சீனிவாசன், பிரவீன், நகை மாயமான காரை இயக்கிய அருண் உள்ளிட்டோரிடம் 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினார். அவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். அதே பயணியர் விடுதியில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோவில் பாதுகாவலர்கள் வினோத், பெரியசாமி, பிரபு ஆகிய 4 பேரிட மும் தனித்தனியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அஜித்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவரது பின்னணி தகவல்கள், கோவில் செயல் அலுவலர் மற்றும் சக ஊழியர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அது தொடர்பாக அவர்கள் அளித்த பதில்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டன. மேலும் நகை மாயமானதாக புகார் கொடுத்த நிகிதா, கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த நேரம், அங்கு நடந்த விவாதம், உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் மடப்புரம் கோவில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசாரின் டெம்போ வாகனம், அஜித்குமாரை அழைத்துச் சென்ற இடங்கள், விசாரணை நடத்திய இடங்கள், கொடூரமாக தனிப்படை போலீசார் தாக்கியதாக கூறப்படும் கோவிலுக்கு சொந்தமான கோசாலை பகுதி ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் ஆய்வு நடத்தினார்.

    இந்த விசாரணையின் போது மடப்புரம் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து வந்தபோது, நடைபெற்ற விசாரணைகள் குறித்தும், நகை திருட்டு புகார் அளித்த நிகிதா அஜித்குமாரிடம் கார் சாவியை ஒப்படைத்தது, திரும்ப பெற்றது குறித்த சாட்சியங்களையும் நீதிபதி ஜான் சுந்தர்லால் பதிவு செய்துகொண்டார்.

    இந்த கள ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் பிற்பகலில் நீதிபதி ஜான் சுந்தர்லால், அஜித்குமார் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் 5 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் அஜித்குமாரை அழைத்துச் சென்ற இடங்கள், மதுரை, திருப்புவனம், சிவகங்கை உள்ளிட்ட இடங்களுக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்த இருக்கிறார்.

    இந்த விசாரணை முடிவில் வருகிற 8-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

    • கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
    • பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அஜித்குமாரின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மறைந்த காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் விஜய் சம்பவம் குறித்து கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும், வறுத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
    • அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    காவல்நிலைய மரணங்கள் என்பது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது.

    நானும் காவல்நிலைய விசாரணையை எதிர்கொண்டவன் தான். போலீசாரின் தமிழ் விசாரணை போக்குபற்றி நன்றாக தெரியும்.

    அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அவசியம்.

    திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி என்றில்லை. எல்லா காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படியாகத்தான் இருக்கிறது.

    முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதலைத் தருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது.

    காவல்துறையினர் ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பட்டது.

    புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று 11 கட்டளைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை எந்த காவல்நிலையத்திலும் பின்பற்றுவதில்லை.

    அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம்.

    அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
    • மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

    இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் மர்ம மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் கொலை வழக்கில் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று போலீசார் நடத்திய கொடூரமாக தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.

    சம்பவத்தன்று 9½ பவுன் நகை திருட்டு போனதாக நிகித்தா என்பவர் சென்னையில் செல்வாக்குமிக்க ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திற்கு திருட்டு போன நகையை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    உடனடியாக சண்முக சுந்தரம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அனுப்பி இந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த 5 போலீசாரும், கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    முதலில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கியதால் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். அஜித்குமார் நண்பர்கள் அருண்குமார், லோகேஸ்வரன், சகோதரர் நவீன்குமார் ஆகியோரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியுள்ளனர்.

    அதற்குப் பின்னரும் திருடப்பட்ட நகை தொடர்பாக எந்த விவரமும் தெரியவராத நிலையில் ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித்குமார், தான் மடப்புரம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள அலுவலகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் அதனால் தாங்கள் அஜித்குமாரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் முதலில் தெரிவித்தனர்.

    அங்கு சென்ற பின்னர் நகை எங்கே என்று கேட்டபோது அடி தாங்க முடியாமல்தான் அப்படி கூறியதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் தான் எந்த நகையையும் திருடவில்லை என்று கதறி அழுதுள்ளார். தங்களை ஏமாற்றியதாக கூறி ஆத்திரமடைந்த தனிப்படை போலீசார் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு ராடு போன்றவற்றால் அவரை கடுமையாக தாக்கியதாகவும் அப்போது அவர் அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.

    அஜித்குமார் அலறல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்ததும் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.

    ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் 9½ பவுன் நகை திருட்டு தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையின் கண்டனத்தை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

    • அஜித்குமார் தாயாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
    • நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற மதுரைகிளையும் நேற்று முதல் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இதனிடையே, பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலையும், வீட்டு மனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.

    இந்த நிலையில், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அஜித்குமார் சகோதருக்கு அரசு வேலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு வேலைக்கான சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டாவை உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தாரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • போலீசார் தாக்கியதில் கவாலாளி அஜித் குமார் கொல்லப்பட்டார்.
    • நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

    திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துவார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    • 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்ட எஸ்பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

    நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. அஜித குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    • விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
    • வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.

    போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

    இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 



    • அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    கைதான காவலர்களான பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 6 காவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
    • தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில், அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இடதுபக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும், வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையிலும் இருந்தது. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயங்கள் இருந்தன.

    இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனிடையே, தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    • நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து காளியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி சாமி தரிசனம் செய்வார்கள். அதில் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரது மகன் அஜித்குமார் (வயது 27) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காவலாளியாக பணியில் சேர்ந்தார். திருமணமாகி மனைவி உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட அவருக்கு தற்போது வரை சம்பளம் கூட தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) என்பவர் தனது மகள் நிகிதா (48) என்பவருடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். மாற்றுத்திறனாளியான சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27), கோவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலியை எடுத்து கொண்டுவந்து கொடுத்தார்.

    முன்னதாக சிவகாமிக்கு சொந்தமான 10 பவுன் நகைகளை ஒரு துணியில் சுற்றி கட்டைப்பையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை 'பார்க்கிங்' செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.

    இதையடுத்து தனக்கு கார் ஓட்ட தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை அஜித்குமார் 'பார்க்கிங்' செய்துள்ளார். சுமார் 1 மணி நேர இடைவெளிக்கு பிறகு கோவிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறினர். அப்போது அங்கு பையில் சுருட்டி வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை.

    இதுபற்றி சிவகாமி மற்றும் நிகிதா ஆகியோர் காரை பார்க்கிங் செய்ய கார் சாவியை பெற்ற அஜித்குமாரிடம் கேட்டனர். ஆனால் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து சிவகாசி 10 பவுன் நகை மாயமானது குறித்து திருப்புவனம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை, நேற்று தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணைக்காக அவர் உள்பட 5 பேரை காரில் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்குமாருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமாரை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டு மற்ற 4 பேரையும் போலீசார் விடுவித்து உள்ளனர்.

    பின்னர் அஜித்குமாரை சிகிச்சைக்காக முதலில் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து உடல் நிலை மோசமானதாக கூறி அவரை மதுரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றிய தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    நல்ல உடல் நிலையில் இருந்ததால்தான் அஜித்குமார் கோவில் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு உடலில் எந்தவித நோயோ, பிரச்சனையோ இல்லாதபோது, போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் சென்று கோஷங்கள் எழுப்பினர்.

    அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோவில் காவலாளியின் மர்மச்சாவு குறித்த தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நகை மாயமான புகாரில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி, எனது அண்ணனை அழைத்து சென்றதாக உறவினர்கள் போனில் தெரிவித்தனர். நான் வேலையை முடித்து விட்டு வர 4 மணியாகி விட்டது.

    ஊருக்குள் வந்து நான் கேட்டபோது நகை தொலைந்ததாக பெண்கள் புகார் தெரிவித்து இருந்தனர். நானும், எனது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அப்போது எனது அண்ணனை போலீஸ் நிலையத்துக்குள் வைத்து விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

    எனவே காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் எனது தாயாரும் வீட்டுக்கு வந்து விட்டோம். காலை 6 மணிக்கு 3 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நகையை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டு பீரோவை திறந்து பார்த்தனர். எனது செல்போனை வாங்கிக் கொண்டு என்னை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு மேலும் 2 வாலிபர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் ஊருக்கு வெளியே உள்ள தோப்புக்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு வைத்து எனது அண்ணனை அடித்தனர். என்னையும் அடித்தனர். சுமார் அரை மணி நேரம் எங்கள் இருவரையும் அடித்தனர்.

    காலையிலும் மதியமும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்தனர். மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்த பிறகும் எனது அண்ணனை மீண்டும் அடித்தனர். கடைசி வரை எனது அண்ணன் எனக்கு தெரியாது என்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் கூறினான். ஆனால் போலீசார் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் நகை இருக்கும் இடத்துக்கு கூட்டி செல்கிறேன் என்று சொன்னான். அப்படியாவது போலீசார் அடிப்பது குறையும் என்பதற்காக அப்படி சொன்னான். கோவிலுக்கு பின்னால் நகை இருக்கிறது என்று கூறியுள்ளான்.

    இதனால் அவனை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று போலீசார் பார்த்தனர். அங்கு நகை இல்லாததால் போலீசார் கோவிலின் பின்புறம் வைத்தும் அவனை அடித்து உள்ளனர்.

    பின்னர் என்னை வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு என் அண்ணனுக்கு என்ன நடந்தது, எங்கே அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை.

    மாலை 6 மணியளவில் என்னிடம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போடுமாறு கூறினார்கள். நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    எனது அண்ணனை போலீசார் அழைத்து சென்றிருக்க கூடாது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், அதன் மூலும் நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அஜித் குமார் உயிரிழப்பு குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது உறவினர்கள் திரண்டு நிற்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார்.
    • காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் ஊழியர் அஜித்தை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோவில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    ×