என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்
- கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
- பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
அஜித்குமாரின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மறைந்த காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் விஜய் சம்பவம் குறித்து கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும், வறுத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.






