என் மலர்
சேலம்
- குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டுவந்தபோ பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் நேற்று கடத்திச் சென்றார்.
குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளன. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல வருடங்களாக குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக வினோதினி கொண்டு வந்தபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
- சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).
இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
- வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
- கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
மேட்டூர்:
சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.
ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.
இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழை காரணமாக ஏற்காட்டில் கடும் குளிரும் நிலவியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் இந்த மழை கனமழையாக கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் ஏற்காட்டில் பெய்த திடீர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் நேற்றிரவு முதல் தண்ணீர் கொட்டுகிறது. இதில் ஏற்காடு செல்லும் பயணிகள் அந்த அருவிகளில் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இன்று காலையும் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான சூழலை ஆனந்தமாக அனுபவித்து ரசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் விடிய, விடிய கொசுக்கடியால் தவித்தனர். தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் இன்று காலை குளிர்ந்த காற்றும், கடும் குளிரும் நிலவியது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, நத்தக்கரை, ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 76.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 5, கரியகோவில் 4, வீரகனூர் 5, நத்தக்கரை 19, சங்ககிரி 2.4, எடப்பாடி 2.6, மேட்டூர் 2.4, ஓமலூர் 5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 806 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7752 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.46 கனஅடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 12 ஆயிரத்து 752 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று அது 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்துக் காணப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் 21 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக் கப்பட்டு அது 10 ஆயிரம் கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.54 அடியாக குறைந்தது.
- ஆடிப்பண்டிகையை யொட்டி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
- கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா 22 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24-ந் தேதி கொடியேற்றுதல், 30-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் திருக்கல்யாணம் சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
திருவிழாவையொட்டி கோவில் வளாகம், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம், உருளுதண்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதலே கோவிலில் திரண்டனர்.

பின்னர் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடனாக உருளு தண்டம் செலுத்தியும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பொங்கல் நிகழ்ச்சி நாளை வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பொங்கலிட்டு வருகிறார்கள. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உருளு தண்டம் செய்தும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தும் , அலகு குத்தியும் தங்களது நேர்ச்சை கடன்களை செலுத்தி வருகிறார்கள்.

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற்றதால் குடும்பத்துடன் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு உருளுதண்டம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.
மேலும் நேற்றும், இன்று காலையும் தங்ககவசத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்ததர்கள் திரண்டு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கூழ், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 10-ந் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11-ந் இரவு 11.30 மணிக்கு சப்தாபரணம், 12-ந் தேதி மதியம் 1 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
ஆடித்திருவிழாவையொட்டி கோவிலில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதேபோல சேலம் மாநகரம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் சேலம் மாநகரமே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும் ஆட்டம் பாட்டத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆடிப்பண்டிகையை யொட்டி இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் குடும்பத்துடன் பெரும்பாலனோர் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
- தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையும் கடந்த மாதம் 30-ந் தேதி 120 அடியை எட்டியது.
கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதிகபட்சமாக உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அந்த தண்ணீர் உபரி நீராக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரத்து 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6665 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 124.18 அடியாக உள்ளது.
இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 359 ஆகனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2729 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 83.46 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் இன்று காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் பவர் ஹவுஸ் வழியாக வினாடிக்கு தொடர்நது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் கயிறு, தற்காப்பு சாதனம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றனர்.
- தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நாய்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை.
மேட்டூர்:
மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மழை கால நீர் போக்கி வழியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே 16 கண் மதகு அருகே காவிரி ஆற்றில் நடுவில் உள்ள மலை குன்றுகளில் 7 நாய்கள் சிக்கிக் கொண்டது. இந்த நாய்களை மீட்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில் ராட்சத டிரோன் மூலம் நாய்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று தாசில்தார் ரமேஷ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நாய்களை மீட்க புதுப்பாலத்தில் இருந்து கயிறு கட்டி 3 தீயணைப்பு வீரர்கள் கயிறு, தற்காப்பு சாதனம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நாய்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை.
இதனால் இன்று 2-ம் நாள் முயற்சி பலனளிக்காத நிலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் திரும்ப வந்தனர். தொடர்ந்து 7 நாய்களையும் மீட்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தண்ணீரின் வேகமாக அதிகமாக இருப்பதால் நாய்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
16 கண் நீர் போக்கியில் தண்ணீர் நிறுத்தினால் மட்டுமே நாய்களை மீட்க முடியும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். தண்ணீர் திறப்பு நிறுத்தும் வரை நாய்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
நகராட்சி தொடக்கப்பள்ளி, இ-சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படும் இப்பகுதியில் உள்ள எடப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 மர்ம பொருள்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷாராகி அங்கு சென்று பார்த்தபோது அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த போலீசார் வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட போலீசார் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
சேலம்:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.75அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2063 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 4500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
- கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 7-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 34 ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 454 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.14 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 36 ஆயிரத்து 996 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 73 ஆயிரத்து 330 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் வீதம் திறக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
- கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையும் நிரம்பியது.
கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு அணை நிரம்பியதும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிபடியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 1.80 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் உபரிநீர் திறப்பும் வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






