என் மலர்
சேலம்
- கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.
- இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்
(வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு குழந்தை பிறந்த பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் அடுத்த குழந்தை பிறக்க வேண்டும்.
- இந்த மாத்திரையை விட கருத்தடை ஊசியை பயன்படுத்துவதையே சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சேலம்:
தாய்மை அடையும் பெண்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் அடுத்த குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்து பிறக்கும்
குழந்தைகள் ஆரோக்கிய மாக பிறக்கும். இதற்காக ஒரு குழந்தை பிறந்தவுடன் சிலர் கருத்தடை மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த மாத்திரையை விட கருத்தடை ஊசியை பயன்படுத்துவதையே சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இதை அரசும் ஏற்றுக்கொண்டு கருத்தடை ஊசி செலுத்துவதை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் கருத்தடை ஊசி சிறப்பு முகாம்களை குடும்ப நலத்துறை சார்பில் நடத்தி
வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் பெண்களுக்கு தற்காலிக கருத்தடை ஊசி சிறப்பு முகாம் இன்று தொடங்கி மார்ச் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் சேலம் அரசு மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, 7 தாலுகா மருத்துவமனை உட்பட 10 அரசு மருத்துவமனைகள், மலைப்பகுதியான கரிய கோவிலில் உள்ள மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம், 87 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், 35 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டணமில்லா கருத்தடை ஊசி செலுத்தப்படுகிறது.
இந்த முகாமை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குடும்ப நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
- எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
சேலம்:
சேலம் நகர மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர்கள் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
எனவே, குகை, லைன்மேடு, நெத்திமேடு, டவுன், கிச்சிப்பாளையம், களரம்பட்டி, கடைவீதி, தாசநாயக்கன்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, தில்லைநகர், கோட்டை மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள், இந்த முகாமில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
அதற்கான உரிய தொகையை செலுத்தினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெயர் மாற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு பெயர் மாற்றம் செய்து தரப்படும். மின் இணைப்பின் உரிமையாளர் இறந்துவிட்டால் அவரது பெயரை மாற்ற வேண்டும் என்றால் கூடுதல் ஆவணங்கள் இணைக்க வேண்டும். அதேபோல், மற்ற இனங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களுக்கு படிவம்-2-ல் மின் இணைப்பு உரிமையாளர் சம்மதக்கடிதம் வேண்டும்.
கூட்டு உரிமையா ளர்களின் சம்மத கடிதம், காப்பு தொகையை மாற்றிக்கொள்ள மின் இணைப்பு உரிமையாளர் சம்மத கடிதம் அளிக்க வேண்டும். சம்மத கடிதம் அளிக்கப்படாவிட்டால் அந்த விண்ணப்பதாரர் புதிதாக காப்புத்தொகை செலுத்த வேண்டும்.
மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ள மின் இணைப்புகள் மற்றும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படமாட்டாது என்று சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்து உள்ளார்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று வினாடிக்கு 824 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து வினாடிக்கு 847 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு, இன்று காலை 9 மணி முதல் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 106.02 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
- தி.மு.க அரசு 75 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு தடுப்பணை கட்டுவதை கைவிட்டு உள்ளனர்.
- தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது. இங்கு நேற்று எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்பட 8 மாவட்ட விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சிப்காட்-க்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே தடுப்பணை அமைக்க அ.தி.மு.க ஆட்சியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி பணி நடந்தது. தற்போது தி.மு.க அரசு 75 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு தடுப்பணை கட்டுவதை கைவிட்டு உள்ளனர். இந்த தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசும்பால் லிட்டர் ரூ.50, எருமைப்பாலுக்கு 60 ரூபாய் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம்:
சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, பரந்த ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த ஒருவார காலமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். பனி மூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.
பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், சாலையோரக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டமின்றி உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
- 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
- இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சாலைப்பணியின் ஒப்பந்த–தாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
- பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம் :
சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- “சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் குற்றச் செயல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வழக்குகள் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்க ஏதுவாக இருந்து வருகிறது.
மேலும் கேமிராக்கள் இல்லாத பகுதிகளில் அவற்றை பொருத்த நடவ–டிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சரியாக நடத்தி, அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணன், நாகராஜன், வெங்கடேசன், அசோகன், சரவண குமரன், லட்சுமி பிரியா, ஜெயந்தி, இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
- இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த ரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவரது சகோதரர் அரவிந்த்குமார்(20), உறவினர்கள் பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேர், சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அதிக ஹாரன் சத்தம் ஏற்பட்டதாக, சின்னம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள், அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதில் இரு தரப்பின ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கனூரைச் சேர்ந்த
சந்தோஷ்குமார், அரவிந்த்கு மார், பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேரையும் தாக்கியதாக, சின்னமநாயக்கன்பா ளையம் கிராமத்தைச் சேர்ந்த வைரமணி(31), பிரவீன்கு மார்(28), பிரேம்குமார் (20), வெங்கடேஷ் என்கிற ஜெமினி (19) ஆகிய 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
- சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
சேலம்:
ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
இதனால் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் ஏற்காடு பூங்கா அருகே நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது வந்த ஒரு கும்பலை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறு
கையில் தாங்கள் மதுரை, சென்னையில் இருந்து வந்த தாகவும், சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
அதுபோல் ரோஜா தோட்டத்தில் நடத்திய சோத னையில் ஒண்டிக்கடையில் உள்ள கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த 3 மோட்டார்சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 25). இவர் சேலம் கோட்டை அருகே உள்ள சின்னசாமி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆசிக்கிற்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆசிக் தலைமறைவாகிவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
மேலும் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆசிக் வசித்து வந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவற்றை பதிவு செய்து கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.






