என் மலர்tooltip icon

    சேலம்

    • கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.

    • ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார்.
    • ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.

    • பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.

    • ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    • குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் குற்றச்ெசயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ரவுடிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, திருந்தி வாழுங்கள் என அறிவுரை கூறியும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதுபோல், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து, உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    • தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார்.
    • பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த டிரைவரை அரிவாளால் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு (55), அவரது குடும்பத்தினர், காரை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சின்னகண்ணு, இவரது மகன்கள் மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் டிரைவரை அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த வெங்கடேஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.

    • 3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர்.
    • போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த சந்தைப்பேட்டையில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவர் செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கடந்த ஓராண்டாக, ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீவட்டிபட்டியில் இருந்து சந்தைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வெங்கடேஷ் வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் அருகே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு 3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர். இதை ரோந்து போலீசார் பார்த்துள்ளனர்.

    இதேபோல் போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தப்பிச் சென்றவர்களில் ஒரு நபர், தீவட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான். அவனை மடக்கிப் பிடித்த தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே இருசக்கர வாகனத்தில் தப்பிய மற்ற 2 நபர்கள் சேலத்தில் பிடிபட்டனர். அவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் 3 பேரும் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த அதிசய நிகழ்வை இன்றும், நாளையும் பார்க்கலாம்.
    • ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    சிற்ப கலையில் சிறந்து விளங்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்குநோக்கிய சிவாலயம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரிய ஒளி லிங்கத்சூதின் மீது படுவது வழக்கம்.

    சூரியன் மறையும் நேரத்தில் ஒளியானது கோவிலுக்கு வெளியே உள்ள தெவச கம்பத்தின் மீது பட்டு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்பு வழியாக மூலஸ்தானத்தில் உள்ள சிவ லிங்கைத்தின் மீது விழும்.

    இந்த அதிசய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் மாசி மாதம் 3 நாட்கள் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவில் பிரகாரங்களை கடந்து நந்தியின் கொம்புகள் வழியாக ஊடுறுவி சென்று சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

    இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர். 2-வது நாளான இன்றும், நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    முதல் நாளில் லிங்கத்தின் வலது பகுதியில் விழுந்த சூரிய ஒளி, 2-ம் நாளான இன்று இடது பகுதியிலும், 3-ம் நாளில் லிங்கத்தின் மைய பகுதியிலும் விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனால் ஏராளமான பக்தர்கள் தாரமங்கலம் சிவன் கோவிலை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 2,000 கன அடியாக நீடித்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

    இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 841 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.74 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.71 அடியாக சரிந்துள்ளது.

    • ரவுடிகள் லல்லு மற்றும் விஜய் என்ற வெள்ளையனை கருமலைக்கூடல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லல்லு, விஜய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வெண்ணிலா (40).

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும், மருமகள் சுகந்தியும் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் வீட்டுக்கு பிரபல ரவுடியான லல்லு என்கிற லல்லு பிரசாந்த் (வயது 30), அவருடைய மனைவி கோமதி (30) மற்றொரு ரவுடியான விஜய் என்ற வெள்ளையன் (27) ஆகிய 3 பேரும் வந்தனர். அவர்கள் 3 பேரும், வெண்ணிலாவை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் மருமகன் ராஜேஷை கொலை செய்தது போல் உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, ராஜாவின் கழுத்தில் வீச்சரிவாளை வைத்து பையில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

    இது தொடர்பாக வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லல்லுவின் மனைவி கோமதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் லல்லு மற்றும் விஜய் என்ற வெள்ளையனை கருமலைக்கூடல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் லல்லு மற்றும் விஜய் ஆகிய இருவரும் சென்றனர். இதை பார்த்த போலீசார்அவர்களை பிடிக்க முற்பட்டனர். போலீசார் பலமுறை சொல்லியும் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனால் அவர்களை கைது செய்வதற்காக பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.

    அப்போது ரவுடிகள் இருவரும் மோட்டார்சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. லல்லுவிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விஜய் என்கிற வெள்ளையனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கருமலைக்கூடல் போலீசார் அவா்கள் இருவரையும் கைது செய்து மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரவுடிகள் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கையாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரவுடிகள் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டர்(37), மூர்த்தி (36), பிரகாஷ் (30) உள்ளிட்ட கும்பல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்த பெயிண்டர் ரகுநாத் (29) என்பவரை இழுத்து ஆஸ்பத்திரி வரண்டாவில் போட்டு கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தை போல், மேலும் ஒரு சம்பவம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே போலீசார், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரி முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆஸ்பத்திரி முன்பு மேட்டூர் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லல்லு, விஜய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதனை போலீசார், பதிவு செய்து கொண்டனர்.

    இதற்கிடையே கைதான ரவுடி லல்லுவின் மனைவி கோமதியை போலீசார் , மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைத்துள்ளனர். அப்போது அவர் சோகத்துடன் இருந்தார். அவருக்கு சக கைதிகள் ஆறுதல் கூறினர்.

    கைதான லல்லு மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு 9 வழிப்பறி வழக்குகள், அடிதடி வழக்குகள் என 22 வழக்குகளும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 8 வழக்குகளும் உள்ளன.

    இதேபோன்று விஜய் என்கிற வெள்ளையன் மீது ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு மற்றும் அடிதடி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 1 திருட்டு வழக்கு என 8 வழக்குகளும் உள்ளன.

    இதில் லல்லு, ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் திருந்தாமல் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவருமே கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் பிரபல ரவுடி பட்டியலில் உள்ளதாகவும், குறிப்பாக பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் போலீசார் பகீர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தின் அனைத்து துறை தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட

    அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 272 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்க ளிடம் வழங்கி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, கலெக்டர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, காதொலிக் கருவி கோரி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,800/- வீதம், மொத்தம் ரூ.5,600/- மதிப்பில் 2 காதொலிக் கருவிகளை அவர்களுக்கு வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மனுக்கள் கொடுத்த உடனேயே காதொலி கருவி வழங்கிய மாவட்ட

    கலெக்டருக்கு பயனாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
    • இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.

    மார்ச் மாதம் தொடங்கும் இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் வரை நடைப்பெற உள்ளது. அதாவது, பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1, பொதுத் தேர்வு மார்ச் 13-ந்தேதி 14-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பொறுத்தவரை ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து 27.30 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்வு தொடங்குகிறது. அதே வாரத்தில் தேர்வு முழுவதும் முடிவடைகிறது. மே மாதம் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தேர்வுக்கான ஏற்பாடு களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மும்முரமாக செய்து வருகிறார்கள். அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அடங்கிய பண்டல்கள் அனைத்தும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வந்ததும், அந்த பண்டல்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 1 முதல் 5 -ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு குறித்த உறுதி பூர்வமான அறிவிப்பை விரைவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    சேலம், நாமக்கல்

    சேலம் மாவட்டத்தில்

    அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், தனியார் தொடக்கப்பள்ளி கள் 1500-க்கும் அதிகமாக உள்ளன. இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. முழு ஆண்டு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் (வண்டி எண்-06407) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் மேட்டூர் அணை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-06408) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண்-16212) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்பூர் செல்லும். இந்த ரெயில் சேவை சேலம்- ஓமலூர் இடையே இல்லை.

    மேலும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) இயக்கத்தில் 45 நிமிடம் கால தாமதமாகவும், சேலம்-அரக்கோணம் ரெயில் (வண்டி எண்-16088) வருகிற 25-ந் தேதி ரெயில் இயக்கத்தில் 30 நிமிடமும் காலதாமதம் ஏற்படும். இந்த தகவல்கள் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×