என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் போலீசாரிடம் சிக்கிய ரவுடி லல்லு மீது 30 வழக்குகள்
- ரவுடிகள் லல்லு மற்றும் விஜய் என்ற வெள்ளையனை கருமலைக்கூடல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லல்லு, விஜய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வெண்ணிலா (40).
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும், மருமகள் சுகந்தியும் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் வீட்டுக்கு பிரபல ரவுடியான லல்லு என்கிற லல்லு பிரசாந்த் (வயது 30), அவருடைய மனைவி கோமதி (30) மற்றொரு ரவுடியான விஜய் என்ற வெள்ளையன் (27) ஆகிய 3 பேரும் வந்தனர். அவர்கள் 3 பேரும், வெண்ணிலாவை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் மருமகன் ராஜேஷை கொலை செய்தது போல் உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, ராஜாவின் கழுத்தில் வீச்சரிவாளை வைத்து பையில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லல்லுவின் மனைவி கோமதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் லல்லு மற்றும் விஜய் என்ற வெள்ளையனை கருமலைக்கூடல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் லல்லு மற்றும் விஜய் ஆகிய இருவரும் சென்றனர். இதை பார்த்த போலீசார்அவர்களை பிடிக்க முற்பட்டனர். போலீசார் பலமுறை சொல்லியும் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனால் அவர்களை கைது செய்வதற்காக பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.
அப்போது ரவுடிகள் இருவரும் மோட்டார்சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. லல்லுவிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விஜய் என்கிற வெள்ளையனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கருமலைக்கூடல் போலீசார் அவா்கள் இருவரையும் கைது செய்து மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரவுடிகள் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கையாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரவுடிகள் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டர்(37), மூர்த்தி (36), பிரகாஷ் (30) உள்ளிட்ட கும்பல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்த பெயிண்டர் ரகுநாத் (29) என்பவரை இழுத்து ஆஸ்பத்திரி வரண்டாவில் போட்டு கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தை போல், மேலும் ஒரு சம்பவம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே போலீசார், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரி முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆஸ்பத்திரி முன்பு மேட்டூர் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லல்லு, விஜய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதனை போலீசார், பதிவு செய்து கொண்டனர்.
இதற்கிடையே கைதான ரவுடி லல்லுவின் மனைவி கோமதியை போலீசார் , மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைத்துள்ளனர். அப்போது அவர் சோகத்துடன் இருந்தார். அவருக்கு சக கைதிகள் ஆறுதல் கூறினர்.
கைதான லல்லு மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு 9 வழிப்பறி வழக்குகள், அடிதடி வழக்குகள் என 22 வழக்குகளும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 8 வழக்குகளும் உள்ளன.
இதேபோன்று விஜய் என்கிற வெள்ளையன் மீது ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு மற்றும் அடிதடி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 1 திருட்டு வழக்கு என 8 வழக்குகளும் உள்ளன.
இதில் லல்லு, ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் திருந்தாமல் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவருமே கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் பிரபல ரவுடி பட்டியலில் உள்ளதாகவும், குறிப்பாக பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் போலீசார் பகீர் தகவல் தெரிவித்துள்ளனர்.






