என் மலர்tooltip icon

    சேலம்

    • கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது.
    • பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரேமா (வயது 35). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கணவன் -மனைவிக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரேமா சேலம் சூரமங்கலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராசிபுரத்தில் இருந்து பஸ் ஏறி சேலத்திற்கு வந்தார்.

    பின்னர் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர், அந்த ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திட்டில் படுத்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள் இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேமாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரேமா திருவாக்கவுண்டனூர் பைபாஸில் பஸ்சை விட்டு இறங்கியதும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘கியூட்’ நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
    • இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.

    சேலம்:

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.

    அந்த வகையில் நடப்பாண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வை பொறுத்தவரையில் வருகிற மே மாதம் 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கணினி வாயிலாக நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. கடந்த ஆண்டு இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த நிலையில் 45 நிமிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில், கணக்கியல், கணக்கு போன்ற கணக்கீடுகள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான நுழைவுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு நேரம் போதுமானதாக இல்லை என்ற புகாரும், கூடுதல் நேரம் ஒதுக்க கோரிக்கையும் எழுந்தது. அதன் அடிப்படையில், கல்விக்குழு இதுதொடர்பாக ஆலோசித்து இருப்பதாகவும், கணக்கீடுகள் சம்பந்தமான பாடங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை கணக்கீடுகள் பாடங்களுக்கான நுழைவுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


    • கிழக்கு பகுதி நீர்நிலைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை வேண்டுமென முதல்-அமைச்சர்க்கு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காவிரிநதி கர்நாடக மாநில அணைகளை நிறைத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது.


    வாழப்பாடி:

    மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தியதைப் போல, மாவட்டத்தின் கிழக்கு பகுதி நீர்நிலைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காவிரி நதி

    கர்நாடகத்திலுள்ள கூர்க் மலைப்பகுதி தலைக்காவிரியில் உற்பத்தி–யாகும் காவிரிநதி அந்த மாநில அணைகளை நிறைத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது.

    மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நதிநீர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்கு பயன்படுகிறது.

    1935–-ம் ஆண்டில் இருந்து இந்த அணையில் இருந்து சேலம் மாவட்ட பாசனத்திற்கென, எந்த திட்டமும் செயல்படுத்தப்–படவில்லை.

    இதனால் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தின் பாசனத்திற்கு பயன்படவில்லை.

    உபரி நீர்

    காவிரியை தவிர மற்ற ஆறுகள், நீரோடைகள், குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வறண்டே கிடக்கின்றன. எனவே, மேட்டூர் அணை நிரம்பிய பிறகு காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரில் சிறு பகுதியை சேலம் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு திருப்பும் திட்டத்தை செயல்படுத்தினால், மாவட்டம் முழுவதும் நீர்வளம் பெருகுமென, தமிழக அரசுக்கு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தப்படுமென, 4 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    100 ஏரிகள் நிரப்பும் திட்டம்

    இத்திட்டத்திற்காக ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள மேட்டூர், எடப்பாடி, ஓமலுார், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள். 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் உட்பட மொத்தம் 100 ஏரிகளில் காவிரி உபரி நீரை வாய்க்கால்கள் வாயிலாக கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    விவசாயிகள் ஏமாற்றம்

    இத்திட்டத்தால் ஏறக்குறைய 4,238 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சேலம் மாவட்ட கிழக்கு பகுதி லுள்ள வீரபாண்டி, பன மரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்–கன்பாளையம், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளில், மேட்டூர் அணை காவிரி உபநீரை நிரப்பும் திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

    இத்திட்டத்தை விரிவு படுத்தி, வீரபாண்டி, பனம ரத்துப்பட்டி, வாழப்பாடி ஏரிகளுக்கு காவிரிநதி உபரிநீரை கொண்டு வந்து, இதன் மூலம் கிழக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளை யும் நிரப்பி, பாசனத்திற்கும், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் வழிவகை செய்ய வேண்டும்.

    இதனால், வசிஷ்டநதி, ஸ்வேதா நதி ஆற்றுப்படுகை கிராமங்களிலுள்ள விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறும்.

    எனவே, சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நிலையான வாழ்வாதரத்தை ஏற்படுத்திக் கொடுக்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் (என்எம்எம்எஸ்) இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
    • இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    சேலம்:

    நாடு முழுவதும் அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்எம்எம்எஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு நேற்று நடந்தது.

    சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. நேற்றைய தேர்வில் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். விண்ணப்பித்திருந்த 195 மாணவர்கள், தேர்வெழுத வரவில்லை. இத்தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன.
    • கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த தங்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிர்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியர் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியர் லெனின் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் செல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • திருச்சி பஸ் நிறுத்தும் இடத்தில் முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதையொட்டி சேலம், பள்ளப்பட்டி போலீசார் நேற்று புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சி பஸ் நிறுத்தும் இடத்தில் முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார்.

    அவரிடம் ஹான்ஸ் அல்லது கஞ்சா பொட்டலம் இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் 62 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய் அதில் இருந்தது.

    இதையடுத்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மெயின்ரோடு, குமணன்குட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது59) என்பது தெரியவந்தது.

    இந்த பணம் எப்படி உங்களுக்கு கிடைத்தது என அவரிடம் போலீசார் கேட்டனர். நகைக் கடைகளில் பணம் முதலீடு செய்து அதில் வாங்கும் தங்க நகைகளை சிறிய நகை கடைகளுக்கு கொடுத்து விற்பனை செய்வதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் அதில் கிடைத்த பணம் தான் இது என அவர் தெரிவித்தார். மேலும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி திருச்சிக்கு செல்வதாக கூறினார்.

    எனினும் அவரது பேச்சு நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தொழில் செய்வதற்கான ஆவணம், பணத்திற்கான ரசீது எதுவும் இல்லை. இதை அடுத்து போலீசார் சேலம் மாவட்ட வருமான வரி துறை அதிகாரிகள் ராஜாராம், முருகானந்தம் ஆகியோரிடம் ரூ.62 லட்சத்துடன் பாலகிருஷ்ணனை ஒப்படைத்தனர். வருமான வரி துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கோமதி (வயது 24), மாற்றுத் திறனாளியான இவருக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.

    அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோமதியின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கோமதி இறந்தார் என கூறி எடப்பாடி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எடப்பாடி போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதி சேர்ந்த பொன்னுசாமி இவரது மகன் அரவிந்த் குமார் வயது 30 பொன்னுசாமி மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சேலம் பஜாருக்கு வரும்போது சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற அரிசி தரகர் அறிமுகம் ஆனார்.நடராஜன் தனக்கு ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை தெரியும் அவர் மூலம் உனது மகனுக்கு அரசு வேலை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதை தொடர்ந்து அரவிந்த் குமார் இடம் சசிகுமார் அறிமுகப்ப டுத்தப்பட்டார். உடனடியாக அரசு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் அளித்ததன் பேரில் அரவிந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் ரூபாய் 2 கோடியே 83 லட்சத்தை வசூலித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பேசியபடி யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகம் இருந்த அரவிந்த் குமார், சசிகுமார் பற்றி விசாரித்த போது அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று இரவு மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நடராஜனை கைது செய்து இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணி, கோபி மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியில் தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலக். இவரது மனைவி அருணா (வயது 38). இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அருண்பென், இவரது மனைவி அபிராமி மற்றும் தீபா.

    இந்த நிலையில் அருண்பென், தனது வீட்டிற்கு உறவினரை இடப்பற்றாக்குறை காரணமாக, கடந்த 20-ந் தேதி அருணா வீட்டில் தங்க வைத்துள்ளார். இதற்காக அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் அருணா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே அருணா, தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
    • இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பாண்டியன் (31) என்பவரை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செல்வகு மார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது.
    • சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் என்றாலே காரம் மிகுந்த சம்பா மிளகாய்தான் நினைவுக்கு வரும். கொளத்தூரில் வசிப்பவர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க செல்லும்போது, சம்பா மிளகாயை கட்டாயம் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல், கொளத்தூரில் வசிப்பவர்களிடம் உறவினர்கள் விரும்பி கேட்பதும் சம்பா மிளகாய்தான். நாட்டு ரகமான சம்பா மிளகாய் காரம், மணம் மற்றும் நிறம் மிகுந்தது.

    கொளத்தூர் மிளகாய்க்கு தமிழகம் முழுவதும் எப்போதும் நல்ல கிராக்கி உள்ளது ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். 150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை விளைச்சலை தரும்.

    கடந்த ஆண்டு பெய்த மிக அதிக மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சம்பா மிளகாய் பயிரிடும் பரப்பளவு குறைந்துபோனது. விவசாயிகள் வாழை, தர்பூசணி போன்ற மாற்று பயிர்களை பயிரிடத் தொடங்கி உள்ளனர்.

    கொளத்தூர் வட்டாரத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, சம்பா மிளகாய் சாகுபடி பிரதானமாக இருந்து வந்தது. ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வந்தது. அப்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் மிளகாய் உற்பத்தி இருந்து வந்தது.

    தற்போது பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது. தற்போது ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

    கொளத்தூர் வாரச்சந்தையில் மிளகாய் வற்றல் கிலோ ரூ.330 முதல் ரூ.340 வரை விற்பனையாகிறது.

    நாட்டு இனமான சம்பா மிளகாய் சாகுபடி சரிந்து வருவதால், தற்போது சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    ×