search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடியில் வனப்பகுதியில் காட்டுத்தீ
    X

    எடப்பாடியில் வனப்பகுதியில் காட்டுத்தீ

    • சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன.
    • கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த தங்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிர்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியர் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியர் லெனின் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் செல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×