என் மலர்tooltip icon

    சேலம்

    • காமிரா மற்றும் செல்போனுடன் செல்ல ரூ.20 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 50 ரூபாயாக உயர்வு
    • 5 வயதிற்கு மேற்பட்ட 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்வு

    சேலம்

    தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சி பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றியமை க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்காவுக்கு காமிரா மற்றும் செல்போனுடன் செல்ல ரூ.20 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.5 வயதிற்கு மேற்பட்ட 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வீடியோ கேமரா பதிவு நிகழ்ச்சிகளுக்கு 100 ரூபாயாக இருந்த கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    4 சக்கர சிறிய வாகனங்களுக்கு 25 ரூபாயாக இருந்த கட்டணம் 50 ரூபாயாகவும், பெரிய வாகனங்களுக்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.பூங்காவுக்குள் பேட்டரி வாகனங்களில் செல்ல ரூ. 50 ரூபாய் கட்டணம் அதே அளவிலும், குழந்தைகளுக்கான 30 ரூபாய் கட்டணம் அதே அளவிலும் நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுஷ்மா இவர் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்

    சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்தவர் கதிரவன். இவரது மகள் சுஷ்மா வயது (23), பி.எஸ்.சி. பி. எட். பட்டதாரியான இவர் நேற்றிரவு எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தீராத வயிற்று வலியால் சுஷ்மா அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் மனம் உடைந்து எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
    • கழிவு நீர் கால்வாயை தூர்வாரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

    மேட்டூர்

    மேட்டூர் அருகே மேச்சேரி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. திமுக,வை சேர்ந்த சுமதி சீனிவாச பெருமாள் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.

    சுகாதார சீர்கேடு

    11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற் றம் வீசி வருவதால் அப்பகு தியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் கலந்து மழை நீர் வீட்டுக்குள் செல்கிறது. 11-வது வார்டு அண்ணா நகர் பகுதி சேர்ந்த தி.மு.க.

    கவுன்சிலர் தனம் கழிவு நீர் கால்வாயை தூர்வாரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் தனம் மேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தனது கண வர் பிரசாத்துடன் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    குற்றச்சாட்டு

    இது குறித்து கவுன்சிலர் தனம் கூறுகையில் எங்கள் வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை.

    இதுகுறித்து பேரூராட்சி செயலாளரிடம் கேட்டால் தலைவரிடம் கேட்குமாறும், தலைவரி டம் கேட்டால் அதிகாரிகளை கேட்கு மாறு அலைக்கழிப்பதாக குற்றச் சாட்டு கூறினார்.

    பின்னர் மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியதால் கவுன்சிலர் புறப்பட்டு சென்றார்.

    • காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் காலை புத்து ணர்வு பயிற்சி

    சேலம்

    சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்க

    ளில் பணிபுரியும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் காலை புத்து ணர்வு பயிற்சி ஜாகீர் அம்மாபாளையம் தாசில்தார் அலுவலகம் மைதானத்தில் இன்று காலை நடை பெற்றது. இதில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

    இதேபோல் அனைத்து மாநகர போலீஸ் நிலை யங்களிலும் நடைபெற்றது.

    • நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,181 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை இந்த 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 6,753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,988 கன அடியாகவும், நீர்மட்டம் 99.06 அடியாகவும் உள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து 604 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 274 கன அடியாகவும், நீர்மட்டம் 73.62 அடியாகவும் உள்ளது.

    இந்த நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் 6,430 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,060 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 6,428 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் 48.23 அடியாக நீடித்த நீர்மட்டம் இன்று காலையில் 47.99 அடியாக சரிந்தது.

    இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையில் 16.56 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.56 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
    • எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (36), ஆத்தூர் பேட்டை செல்வம் (31), ஏத்தாப்பூர் முருகன் (41), இடையப்பட்டி ஞானசேகரன் (41), வடுகத்தம்பட்டி சரவணகுமார்(33), தும்பல் கோபி (23), காடையாம்பட்டி ஸ்ரீராம்(21), ஏத்தாப்பூர் சசி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 11 வாகனங்கள், ரூ.4,060 ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
    • விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.

    சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம், வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.

    எங்கள் ஊரில் 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில் அதற்கு மேல் படிப்புக்கு கூடமலை செல்ல வேண்டியுள்ளது இதனால் மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    உறுதிமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சுகாதாரமான சூழல்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

    செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    அரசு நிலம்

    சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுர் பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களுக்கு சமுதாய கூடமும், மயானமும் அமைத்து தர பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே எங்களது நீண்ட நாள் கோரிக்கையான மயானமும், சமுதாய கூடமும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அரசு பள்ளிக்கு

    கூடுதல் வகுப்பறை

    சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-கொண்டப்ப நாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் 730 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் போதிய கட்டிட வசதி, கழிவறை வசதி இல்லை. நூலகம், ஆய்வகம், கணினி அறைகளை வகுப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் வரண்டாவில் அமர்ந்து கற்கும் நிலையும் உள்ளது. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வகுப்பறைக்கு போதுமான கட்டிடம் கட்டுவதுடன் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    ×