என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் அரியானூர் ராக்கிபட்டியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டது.
    • கல்லூரிக்கும் விடுதிக்கும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் பஸ்கள் இயக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மணியனூரில் தற்காலிக கட்டிடத்தில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சேலம் அரியானூர் ராக்கிபட்டியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டது.

    அந்த கட்டிட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இதையடுத்து அரசு சட்டக் கல்லூரி அந்த புதிய கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக மாணவர்கள் விடுதி அரசு சார்பில் கட்டப்பட்டது.

    ஆனால் அந்த விடுதி கல்லூரியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேவம்பாளையத்தில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் நிலையில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் பஸ்கள் இயக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் இதுவரை பஸ்கள் இயக்கப்படாத நிலையில் கல்லூரியில் இருந்து விடுதிக்கு செல்ல மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் வெளியூர்களில் இருந்து தங்கி படிக்கும் மாணவர்களில் பலர் அரியானூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் மாணவர்களுக்கும் அதிக அளவில் செலவாகிறது . கல்லூரி விடுதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    தற்போது சட்டக் கல்லூரி விடுதியில் 20-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளனர். 30 கோடி ரூபாய் செலவு செய்து மாணவர்கள் செல்ல பஸ் வசதி இல்லாததால் அந்த விடுதி கட்டிடம் கட்டியும் பலன் இல்லாத நிலை உள்ளது.

    எனவே கல்லூரிக்கும் அந்த விடுதிக்கும் இடையே அரசு சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையே குறிப்பிட்ட நேரம் மட்டுமாவது பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு.
    • ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு. இவர் மாறுதல் ஆன பிறகு புதிய ஆணையாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய ஆணையாளருக்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன். மற்றும் நகராட்சி அதிகாரிகளும் வார்டு கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • நகராட்சியின் 8,9-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் வினியோகம் இல்லை

    இந்த நிலையில் நகராட்சியின் 8,9-வது வார்டுகளை சேர்ந்த கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இதையடுத்து இப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து 8-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தாரமங்கலம் - ஓமலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு அத்தாணி நாகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (50) இவர் தனது மனைவி பெரியநாயகம் (45) என்பவரின் பெயரில் உள்ள வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடு தனக்கு சொந்தம் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டை மீட்டெடுக்க முடியாத விரக்தியில் மாரிமுத்து மனைவி பெரியநாயகம்(45) தாயார் கனகாம்பாள்(75) சித்தப்பா அங்கப்பன்(65) உறவினர் குமார்(50) ஆகியோர் தனது வீட்டிற்கு வெளியே கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி. மற்றும் தாரமங்கலம் போலீசார் மாரிமுத்து குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்ககிரி:

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதனையடுத்து வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார ஆத்ம குழு தலைவர்கள் ராஜேஷ் (சங்ககிரி), பரமசிவம் (கொங்கணாபுரம்), பச்சமுத்து (மகுடஞ்சாவடி), நல்லதம்பி (எடப்பாடி) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்கள்.

    மேலும், உதவி பொறியாளர்கள் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரி ஆகியோர் அரசு திட்டங்கள், பவர் டிரில்லர்களின் பயன்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

    • உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

    வறண்ட வடிநில ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விதமாக திப்பம்பட்டி நீர் தேக்க பகுதியில் பிரதான நீரேற்றம் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதேபோல் மேட்டூர் -சரபங்கா காவிரி உபரி நீரேற்று திட்டம் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், குப்பம்பட்டி, சூரப்பள்ளி, எடப்பாடி வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது நங்கவள்ளி, மல்லப்பனூர் பகுதியில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு அடுத்து ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி, குப்பம்பட்டி பகுதியில் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜலகண்டாபுரம் பெரிய ஏரி கிணறு பகுதியில் திரண்டனர்.

    குடியிருப்பு பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கால்வாய் அமைத்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் ெபாதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேலம்:

    தமிழகத்தை பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்தி இருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி-சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக்கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்துள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.

    • பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார்.
    • மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சென்னையை சேர்ந்தவர் கார்த்திக்கேயன், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரம் ஜெய்புரி கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை வாங்கி 120 வீட்டு மனைகளாக பிரித்தார்.

    அந்த வீட்டு மனைகளுக்கு டி.டி.சி. அனுமதி பெற வேண்டி மகுடஞ்சாவடி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவியின் கணவரான மணிகண்டனை நாடினார். அவர் வீட்டுமனையில் சதுர அடிக்கு 50 வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கார்த்திக்கேயன் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜனிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரையின் பேரில் நேற்று கார்த்திக்கேயன் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக தெரிவித்தார்.

    அதனை பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார். அதன்படி நேற்று கார்த்திக்கேயன் பணத்தை கொண்டு சென்று ஆனந்தனிடம் கொடுத்தார். இதுகுறித்து அவர் மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் அங்கு வந்து சிறிது நேரத்தில் 5 லட்சத்தை வாங்கினார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு எங்காவது வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்பு மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் 2 பேரையும் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து செல்ல முயன்றனர். அப்போது மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மணிகண்டனின் தங்கை பேபி போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து கோஷமிட்டார். இதையடுத்து பேபியை அப்புறப்படுத்தி விட்டு மணிகண்டன் மற்றும் ஆனந்தனை போலீசார் சேலத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நள்ளிரவு 11.30 மணியளவில் 2 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை கீழ்நாடு பஞ்சாயத்து மேல்பூண்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு நண்பர்களான அய்யனார், ராமர், ஆண்டி, பிரசாந்த், குமார் ஆகிய 5 பேரும் மாப்பிள்ளை தோழனாக சென்றுள்ளனர்.

    அப்போது 5 பேரும் மது குடித்துள்ளனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டார் திருமண செலவுக்காக மாப்பிள்ளை தோழர்களுக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அய்யனார் என்பவர் மயக்கமடைந்து உள்ளார். இதையடுத்து அய்யனாரை நண்பர்கள் சேர்ந்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே வீட்டில் மயங்கி கிடந்த அய்யனாரை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் இதுகுறித்து கரியகோவில் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அய்யனாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது.

    இதே போல மேட்டூர், ஆத்தூர், காடையாம்பட்டி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. விவசாய பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், 5 ரோடு, 4 ரோடு பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 25.8, ஆத்தூர் 17.20, காடையாம்பட்டி 17, சேலம் 15.2, பெத்தநாயக்கன் பாளையம் 14 , தலைவாசல் 13, ஆனைமடுவு 5, ஓமலூர் 2.4, தம்மம்பட்டி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 144.60 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • ஒரு வயது குழந்தையும் உயிரிழப்பு
    • இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் நகர் என்.மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சி மண்டலம் 4-ல் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை குட்டம்பாளையம் ஈங்கூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25) என்பவருக்கும் திருமணமாகி சஞ்சனா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ராஜதுரைக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜதுரை தனது மாமனார் பழனிசாமி (50), மாமியார் பாப்பாத்தி (47) ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பழனிசாமி, பாப்பாத்தி ஆகியோர் தனது உறவினர்களான ஆறுமுகம் (49), இவரது மனைவி மஞ்சளா (42), செல்வராஜ் (55), விக்னேஷ் (35) ஆகியோருடன் ஆம்னி வேனில் பெருந்துறையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மகள், மருமகனை சமாதானம் செய்து வைத்தனர்.

    பின்னர் மகள் பிரியா, பேத்தி சஞ்சனாவை சில நாட்கள் தங்களுடன் இருப்பதற்காக அழைத்துக் கொண்டு பழனிசாமி, பாப்பாத்தி உள்பட 8 பேரும் சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னிவேன் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அடுத்த சின்னாக்கவுண்டனுார் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் ஆம்னி வேன் திடீரென பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், சஞ்சனா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஆம்னி வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் டிரைவர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விக்னேஷ், பிரியா ஆகிய இருவருக்கும் அவசர வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அங்கு விபத்து எவ்வாறு நேரிட்டது? என்பது குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் விபத்து ஏற்பட்ட காட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    அதேபோல் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மற்றும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் அறிவுடை நம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பொதுவாக அதிகாலை நேரத்தில் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்காது என்பதால் டிரைவர் விக்னேஷ் அதிவேகத்தில் ஆம்னி வேனை ஓட்டி இருக்கலாம் என தெரிகிறது. மேலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது. அதிவேகத்தில் சென்றபோது குளிர்ந்த காற்று காரணமாக தூக்கத்தில் விக்னேஷ் ஆம்னி வேனை ஓட்டி லாரி மீது மோதி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து லாரியை டிரைவர் எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான லாரியையும், டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் அவர்களது உறவினர்கள் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதவாறு உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சோகமாக காணப்படுகிறது.

    சங்ககிரி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிற்கு திரும்பும் போது வார்டன் ஒருவர், அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தவறாக பேசியுள்ளார்.
    • ஜெயில் வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    சேலம்

    சேலம் மத்திய ெஜயிலில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியும் உள்ளார். கடந்த 24-ந்தேதி இவரை பார்க்க அவரது மனைவி ஜெயிலுக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் போது வார்டன் ஒருவர், அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தவறாக பேசியுள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமாகவும் பேசி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெண்ணின் உறவினர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இைதயடுத்து ஜெயில் வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயில் சூப்பிரண்டிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வார்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட கைதியின் மனைவியிடம் செல்போன் வாட்ஸ் அப்பில் வார்டன் என்ன என்ன தகவல் அனுப்பினார்? என கேட்டோம். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் வார்டன் செல்போனில் என்ன பேசி னார்? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகர் சைபர் கிரைம் பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதில் வார்டன் பேசியது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×