என் மலர்tooltip icon

    சேலம்

    • ஒவ்வொரு வாரமும், வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம்:

    ஒவ்வொரு வாரமும், வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    அதன் தொடர்ச்சியாக நாளை 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த பஸ்கள் சேலம் புறநகர் பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது.

    மேலும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர் ஆகிய பகுதிகளுக்கும் முன்பதிவு மையங்கள் வழியாகவும், இணைய தளம் வழியாகவும் முன்பதிவு நடைபெறுகிறது.

    எனவே பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று போக்கு வரத்து கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

    • ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார்.
    • மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே கரியக்கோயில் அடுத்த வேலம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செவத்தான். இவருடைய மகன் மணி (28).

    அரசு வேலை

    பட்டதாரியான இவரை ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார். மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ஓராண்டு கடந்தும் வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த மணி தனது பணத்தை திருப்பிக்

    கொடுக்குமாறு சதீஸ்குமாரி டம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே மணிக்கும், அவருடைய பெரியப்பா மகனான ராமச்சந்திரன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருப்பதை அறி0ந்த சதீஸ்குமார் இவ ருடன் கூட்டு சேர்ந்து மணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பரான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் சதீஸ்குமார் வரவழைத்துள்ளார்.

    அரிவாள் வெட்டு

    திட்டமிட்டபடி நேற்று முன்தினம் சதீஸ்குமார் தனது காரில் வேலம்பட்டு கிராமத்திலுள்ள மணியின் வீட்டிற்கு சென்னை வாலி

    பரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணியை சென்னை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.

    மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயார் கரியாள் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காரை விரட்டி பிடித்தனர்

    மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் சதீஸ்குமார் சென்ற காரை விரட்டிப் பிடித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்ட சதீஸ்குமாரை கரியக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்திய கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், சதீஸ்குமாரையும் அவருடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக மணியின் சகோதரர் ராமச்சந்திரன் என்பவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சென்னை வாலிபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

    • வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம், உள்ளூர் விற்பனை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வர்த்தகத்தில், தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கொப்பரை பதப்படுத்துவோர் உட்பட 50ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் ஆர்டருக்கு ஏற்ப, பருமனுக்கு ஏற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30ஆயிரம் தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியார் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது ஒரு லாரி தேங்காய் விற்பனையில், லாரி வாடகை, தொழிலாளர் கூலி, வரி உள்பட ரூ.4 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவும் நெருங்கியுள்ளதால், தேங்காய் வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து, தொழிலாளர்களை கொண்டு மட்டை உரித்து, மூட்டைகளில் தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வாழப்பாடி பகுதி தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரூ.7,000 வரை விலை போன 1,000 தேங்காய்க்கு தற்போது ரூ. 10,000 வரை விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (75). இவரது மகன் ராசு (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி (50).

    நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாவாயி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பாவாயி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது மகன் ராசுவும் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த ராசுவின் மனைவி சாந்தியும் வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்றுள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். சாந்தியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அப்போது அங்கு பாவாயி தூக்கில் தொங்கிய நிலையிலும், ராசு வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாந்தியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாந்திக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாந்தியும் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
    • எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை கனமழையாக கொட்டியது.

    இந்த மழை எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழையாக கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நிலக்கடலை பயிர் செழித்து வளருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சாரல் மழையாக பெய்தது, மழையை தொடர்ந்து அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 10.6, மேட்டூர் 3.6, ஓமலூர் 2, தம்மம்பட்டி 2, ஏற்காடு 1, சங்ககிரி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 47.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
    • தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 15.86 டி.எம்.சி. உள்ளது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஆனால் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடையவில்லை.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் வழக்கமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விடவில்லை.

    இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், இந்த தண்ணீர் வந்து சேருவதை பிலிகுண்டுவில் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட பிறகு தான் கர்நாடக அரசு கடந்த 29-ந்தேதி முதல் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இந்த தண்ணீர் வருகிற 12-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு தண்ணீர் திறப்பு விவசாயிகளின் போராட்டம், அணையில் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நீர் திறப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 217 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 893 கன அடியாகவும், நீர்மட்டம் 98.20 அடியாக உள்ளது. அதுபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 7 கன அடியாகவும், நீர் இருப்பு 13.61 டி.எம்.சியாகவும் உள்ளது.

    தற்போது இந்த அணைகளில் இருந்து தண்ணீர் பெயரளவில் தமிழக காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் 8,060 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் (5-ந்தேதி) 6,428 கன அடியாக சரிந்தது.

    தொடர்ந்து நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 3,535 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.

    இன்று காலையில் மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 3,021 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 47.99 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 47.33 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.81 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 15.86 டி.எம்.சி. உள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
    • போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கலியனூர் என்ற பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகன்பாபு என்பவர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.

    அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்ற ஆம்னி வேன் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஒரு பெண், வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து பற்றி தெரியவந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கலெக்டர் கார்மேகம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், சங்ககிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

    அப்போது விதிகளைமீறி சாலை ஓரம் நிறுத்தி இருந்த சுமார் 40 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து தினமும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • நண்பர்களான மூன்று பேரும் ஒன்றாகவே வெளியில் சென்று வருவது வழக்கம்.
    • விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோனைமுத்து மகன் இசேந்திரன் (17), முனியசாமி மகன் அன்பரசன் (20) மற்றும் சண்முகவேல் மகன் லிங்கேஸ்வரன் (22).

    நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் ஒன்றாகவே வெளியில் சென்று வருவது வழக்கம். நேற்று இரவு மேலசெல்வனூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க செல்ல முடிவெடுத்தனர்.

    இதையடுத்து 3 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறிவிட்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு மேல செல்வனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாத்தங்குடி விலக்கு அருகே சென்றபோது, எதிரே ராமநாதபுரம் புத்தேந்தல் கிராமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த ஆம்னி வேன் மீது மோதியது. அடுத்த விநாடி அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்து லிங்கேஸ்வரன் உயிருக்கு போராடினார்.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் லிங்கேஸ்வரனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வேனிலேயே இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் ஆம்னி வேன் டிரைவர் பாலமுருகனும் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 3 பேரும் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.
    • இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    சேலம்:

    சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் காக்கையன் சுடுகாடு அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில போலீசார் அங்கு சென்றனர். அவர்களைப் பார்த்து பிரகாஷ் தப்பி ஓடி அங்குள்ள காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார். அப்போது பிரகாஷ் கால் உடைந்தது. அவரை பிடித்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் ஐஸ்வர்யா (18).
    • தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும், ஆத்தூர் அடுத்த வீரகனூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா (18) என்பவர், மதிய உணவு இடைவேளை நேரத்தில் தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த இவரை மீட்டு விடுதி காப்பாளர் சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அத்தனூர்பட்டி ஊராட்சி வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகளான சிறுமி, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற இச்சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அத்தனூர்பட்டி ஊராட்சி வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகளான சிறுமி, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற இச்சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே, வாழப்பாடி பழைய பஸ் நிலையம் அருகே பள்ளி சீருடையில் புத்தகப்பையுடன் தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்த சிறுமியை மீட்ட அப்பகுதி சேர்ந்தவர்கள், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தன்னை யாரோ இருவர் குறிச்சியில் இருந்து காரில் ஏற்றி வந்ததாகவும், வாழப்பாடியில் கார் நின்றதும் இறங்கி தான் தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்த இச்சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். ஆனால் இச்சிறுமியை யாரும் காரில் கடத்தி வந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவில்லை.

    • வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது.

    சேலம்:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் ரூ.7525 முதல் அதிகபட்சமாக ரூ.7828 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் தொடர் மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், தேங்காய் பருப்புகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×