என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,266 கன அடியாக சரிந்தது
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
- அணைக்கும் வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உபரிநீரை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,479 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,550 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 2,266 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கும் வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.55 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 46.54 அடியானது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 45.90 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 15.32 டி.எம்.சி.யாக உள்ளது.






