என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, விலைவாசி உயர்ந்து நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிபடுகின்றனர். எனவே இந்த மக்கள் விரோத அரசை விரைவில் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்த போராட்டதில் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, மூர்த்தி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
    • சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது.

    சேலம் :

    சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் திருடியதை அறிந்த அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார்.
    • அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி மது அருந்து வதால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநி லையில் சம்பவத்தன்று இரவு மது போதையில் சிவக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த நகை களை யாரோ மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்ததை அறிந்த அவர் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

    • தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கன்.மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன்.தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன். பொறியாளர் பிரேமா.மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா.நகராட்சி பொறியாளர் ஹரிகரன். குமாரபாளையம் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். எடப்பாடி நகராட்சி பொறியாளர் முருகேசன். ராசிபுரம் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    • சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஏழுபரன் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (60). இவர்களுக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், மல்லிகா (35) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு சுப்ரமணி வீட்டிற்குள் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    பின்னர் கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் உள்பட பல பகுதிகளிலும் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது .

    இதே போல சங்ககிரி, தலைவாசல், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு, மேட்டூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி கடும் குளிர் நிலவி வருகிறது.

    பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தான் ஏற்காட்டில் கடுமையான குளிர் நிலவும். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நவம்பர், டிசம்பரில் நிலவுவதை போன்று கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் குளிர் தாங்கும் உடைகளான சொட்டர், ஜர்கின் போன்ற உடைகளை அணிந்து தான் பொதுமக்கள் வெளியே செல்ல முடிகிறது. மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளது.

    மேலும் மலைப்பாதைகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இதேபோல் பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. மேலும் இரவு வரை மழை தூறலாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 33.2, சங்ககிரி 29, தலைவாசல் 22, ஏற்காடு 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 14, ஆனைமடுவு 11, மேட்டூர் 10.8, கெங்கவல்லி 10, ஓமலூர்9.4, ஆத்தூர் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 202.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
    • நேற்று முன்தினம் 47.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.81 அடியாக சரிந்தது.

    சேலம்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது.

    இன்று கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 2,873 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. நேற்று இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,217 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர் திறப்பு குறைத்து 3,930 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    அதேபோல் கபினி அணைக்கு இன்று 4,309 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 74.25 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று 1,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 7,317 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வினாடிக்கு 5,030 கன அடி நீரே திறக்கப்பட்டு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் 3,021 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் வினாடிக்கு 4,987 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இருப்பினும் நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 47.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.81 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.57 அடியாக குறைந்தது.

    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
    • பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    சங்ககிரி:

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு பிரியாவுக்கும், கணவர் ராஜதுரைக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது. இதில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிரியா, விக்னேஷ் பலத்த காயம் அடைந்தனர். இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா சின்னாக்கவுண்டா கிராமத்தை சேர்ந்த ஜெகன்பாபு (25) என்பதும், அவர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியப்படுத்த பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர்.

    கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    இதையடுத்து ஜெகன் பாபு மீது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்து நடக்கும் என்பதை தெரிந்தே வாகனத்தை நிறுத்துவது, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் வாகனத்தை எடுத்து செல்லுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து ஜெகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உறவினர்கள் சட்டவிதிகளின்படி வந்து பார்த்து செல்வார்கள்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியை அவரது மனைவி சந்தித்து பேசினார். அப்போது கைதியை சந்திக்க ஜெயில் வார்டன் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய அந்த வார்டன் அடிக்கடி போன் செய்து பேசினார். மேலும் செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய அந்த வார்டன் வீடியோ காலில் சென்றும் தவறாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் மற்றும் அதிகாரிகள் அந்த வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் வார்டன் அனுப்பிய வீடியோக்களை அனுப்புமாறு கூறினர். ஆனால் அந்த பெண் அந்த வீடியோக்களை அழித்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார். பின்னர் 2 பேரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதில் எவ்வளவு நேரம் வார்டன் அந்த பெண்ணிடம் பேசினார், என்னென்ன பேசினார், எத்தனை ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அதனை அறிக்கையாக தயாரித்து சிறை சூப்பிரண்டிடம் வழங்க உள்ளனர் . அதனை வைத்து நாளைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் சதீஷ்வரன் இரவு துணிகளை துவைத்து மாடியில் காயவைத்துள்ளார். அதை எடுப்பதற்காக இன்று காலை 2-வது மாடிக்கு சென்று கீழே இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு கால் முறிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சக மாணவர்கள் பார்த்து மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.
    • 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து இன்று காலை முதலே சேலம் மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே சண்முக ராஜா தலைமையில் ஜங்ஷன் தபால் நிலையம் அருகே இருந்து 150-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவாயில் அருகே பேரிகாடுகள் வைத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அதை தள்ளிக்கொண்டு போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதை அடுத்து ரெயில் நிலைய நுழைவு வாயில் வழியாக ரெயில் மறியலுக்கு முயன்ற 21 பெண்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ரெயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக ரெயில் நிலையத்திற்குள் சென்ற 20-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட குழு உறுப்பினர் பரமேஸ்வரி தலைமையில் 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் சுமார் 1/2 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.

    இதேபோல் சீலநாயக்கன்பட்டி திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமையில் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
    • கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. குறுகிய காலத்தில் கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று 19 விவசாயிகள் உற்பத்தி செய்த 191 மூட்டை கொப்பரை பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் சுமார் 52 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 84 குவிண்டால் கொப்பரை பருப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்துகொண்டு 6 லட்சத்து 20 ஆயிரத்து 532 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். இதில் பருப்பின் தரத்தை பொருத்து, அதிகபட்ச விலையாக ரூ.77.77 காசுக்கும், குறைந்த விலையாக ரூ.60.75 காசுக்கும், சராசரி விலையாக ரூ.76.75 காசுக்கும் விற்பனையானது. இந்த மையத்தில் அனைத்து விளை பொருட்களையும் இருப்பு வைப்பதற்கான வசதிகள் உள்ளது. இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு கடனுதவியும் வழங்கபடுகிறது. அதனால் இந்த வாய்ப்பை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு ஒழுங்குமுறை விற்பனை கூட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

    ×