என் மலர்tooltip icon

    சேலம்

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையின் உபரி நீர் திட்ட பணிகளுக்கு ரூ. 565 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்படுகிது.

    மேட்டூர்:

    மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடந்தது.

    அன்புமணி ராமதாஸ்

    இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையின் உபரி நீர் திட்ட பணிகளுக்கு ரூ. 565 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் அணையில் உபரியாக செல்லும் 5 டிஎம்சி தண்ணீரை எடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும். சேலம் மாவட்டத்தில் 1200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. உபரி நீர் திட்டம் மூலம் 100 அடிக்குள் நிலத்தடி நீர்மட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    மேட்டூர் அணையை தூர் வாரி அணையை ஆழப்படுத்த வேண்டும் இதன் மூலம் கூடுதலாக 20 டி.எம்.சி, நீர் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் 20 டிஎம்சி மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் 64 டிஎம்சி உள்ளது. 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் 3.5 லட்சம் ஏக்கர் மட்டுமே பயன்பெறும்.

    காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி இதுவரை தமிழகத்திற்கு 60 டிஎம்சி நீர் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் 4 டிஎம்சி நீர் மட்டுமே கர்நாடக அரசு வழங்கி உள்ளது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கும் தண்ணீரை குறைத்து குறுவை சாகுபடிக்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும். மேட்டூர் அனல் மின் நிலையம் மூலம் சுற்றுப்புற சூழல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டுரை சுற்றியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மழைக்காலங்களில் ரசாயன கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து விடுகின்றனர்.

    கொளத்தூரில் உள்ள தோனி மடுவுத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் பகுதியில் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை யில் ஏற்படும் விபத்து காரணமாக ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகிறது. காவிரி பிரச்சனைக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா முதல்-அமைச்சரை சந்தித்து காவிரி நீரை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்படுகிது.

    தென்பெண்ணை கழிவுகள், மைசூர் கழிவுகள், நொய்யல் ஆறு கழிவுகள் காவிரியில் கலக்கிறது இதனால் காவிரி நீர் மாசடைகிறது. தமிழகத்தில் பெயரளவுக்கு மட்டுமே 500 மது கடைகள் மூடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுவை ஒழிப்பதாக தெரிவித்தார் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி கல்லூரி வாசல்களில் போதை பொருட்கள் விற்பனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ .சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், மற்றும் மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ் சுதாகர் மேட்டூர் நகர செயலாளர் மதியழகன் கொளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் என சுமார் 500-க்கு மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.

    • உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.

    தாரமங்கலம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உத்திரபிரதேச சாமியாரின் உருவ படத்தை எரித்தனர்.

    திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி அஜித்குமார் தலைமையிலும். மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் கே.ஆர் தோப்பூர் கண்ணன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.

    இது பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பேசிய உத்திரபிரதேச சாமியாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் குடந்தை பாலன் நன்றி கூறினர். 

    • சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர்.
    • 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர். அங்கு மது குடித்து விட்டு நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 5 பேர் கும்பலுக்கும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்அடைந்த 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    சிகிச்சை

    பின்னர் இது குறித்து பொதுமக்கள் கிச்சிப்பா ளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரிவாள் வெட்டில் காயம்அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகி றார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 29-ந் தேதி முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • காலை 8 மணி நிலரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.54 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்காமல் இருக்க காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு தொடர்ந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29-ந் தேதி முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதை எதிர்த்து கர்நாடகா மாநிலம் மண்டியா பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும்தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மண்டியாவில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    கர்நாடகாவில் தண்ணீர் குறைக்கப்பட்டதால் தமிழகத்துக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 550 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.

    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.
    • இனி நீதிமன்ற விசாரணைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். வேறு கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டாம். திருந்தி வாழ முயற்சியுங்கள் என போலீசார் கேட்டுக் கொள்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.

    இதனையடுத்து சேலம் மாநகர துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் உதவி கமிஷனர் ராம மூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் ரவுடிகளை கண்கா ணிக்க தொடங்கியுள்ளனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் தெரு, சுந்தர் தெரு, எஸ்.எம்.சி காலனி ஆகிய பகுதிகளில் 111 ரவுடிகள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறியில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    இவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்று வழக்கு விசாரணைக்கு செல்கிறீர்களா? தற்போது என்ன தொழில் செய்கிறீர்கள்? சொந்த வீடா? வாடகை வீடா? வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என துருவி துருவி விசாரணை நடத்தியும், அறிவுரை வழங்கியும் வருகிறார்கள்.இனி நீதிமன்ற விசாரணைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். வேறு கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டாம். திருந்தி வாழ முயற்சியுங்கள் என போலீசார் கேட்டுக் கொள்கின்றனர். இது தவிர ரவு டிகளின் குடும்பத்தினரை அழைத்து நீதிமன்ற விசாரணைக்கு செல்ல அறிவுரை கூறுங்கள். வேறு வழக்குகளில் சிக்காமல் இருக்க வீட்டில் இருக்க கூறவும். அல்லது தொழில் ஏதாவது ஒன்றுக்கு செல்லுமாறு கூறவும் என்றும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    • மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
    • இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

    ஆன்லைனில் அதனை டவுன்லோட் செய்து பார்த்தபோது மொபட் ஓட்டும் ஒருவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவர் புல்லட் வைத்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பச்சியண்ணன் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு எழுதிக் கொடுத்தால் அதை சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.
    • கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி வருகிறார். அவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு பையை கொடுத்ததாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறி வருகிறார்.

    கனகராஜ் இறந்த விபத்து நடந்த இடத்தில் பேட்டி அளித்த தனபால் கொடநாடு கொள்ளைக்கும் எனது தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது தி.மு.க மற்றும் தி.மு.க.வின் பி.டீமான ஓ.பி.எஸ். அணியினர் தூண்டுதலின் பேரில் அவர் தவறான தகவலை கூறி வருகிறார்.

    அவர் ஊட்டி கோர்ட்டில் தனக்கு 2 ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி ஜாமின் கேட்டார். அதற்காக மருத்துவர்களின் சான்றிதழ்களையும் இணைத்து வழங்கியிருந்தார். அதன்படி ஊட்டி நீதிபதியும் அவருக்கு ஜாமின் வழங்கினார்.

    2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்போது அவரும் எனது கணவர் கடந்த 4ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளார். தற்போது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவரால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேச்சேரியில் பதிவான நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தபோது டாக்டர்களும் அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறினர்.

    மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து கொண்டு சிலரது தூண்டுதலின் பேரில் என் மீது தொடர்ந்து தவறான குற்றசாட்டு கூறி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே நான் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

    சூப்பிரண்டு இல்லாததால் அதிகாரிகள் மனுவை வாங்கி உள்ளனர். சூப்பிரண்டிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மணி, ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர் இருந்தனர்.

    • அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
    • ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே ஏழு பரனைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயி.

    இவருடைய மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கழுத்து அறுத்து கொலை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டுக்கு அருகே உள்ள சாலை கொட்டகையில் படுத்து தூங்கினார். அத்தா யம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கினார். நேற்று காலை ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    நகை, பணம் கொள்ளை

    மேலும் அத்தாயம்மாள் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கீதா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தினமும் இரவு அத்தாயம்மாள் வீட்டில் தனியாக தூங்கு வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    3 தனிப்படைகள்

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை யாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும், கடலோர மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    தென்மேற்கு பருவ மழை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை உள்ள காலம், இந்த காலங்களில் தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும், இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இன்னும் கூடுதலாக மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    5 சதவீதம் குறைவு

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் 1-ந் தேதி முதல் நேற்றைய தேதியான செப்டம்பர் 8-ந் தேதி வரை 289.1 மி.மீ. மழை பெய்யும், ஆனால் இந்தாண்டு 274.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 15 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் குறைவாகும், இன்னும் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 21 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் கூடுதல் மழை பெய்தால் வழக்கத்தை விட மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    • தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

    இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏரி, பூங்கா என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

    தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக மாறியுள்ளது.

    மேலும் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள கிணறு, கால்வாய், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கி உள்ளது.

    குறிப்பாக கடந்த 8 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி இந்த மழை பொழிவினால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு உற்சாகமாக நீராடி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4.45 மணியளவில் தொடங்கிய மழை 45 நிமிடங்கள் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவியது. இன்று காலை ஏற்காட்டில் வெயில் அடித்தபடி இருந்தது. சனிக்கிழயைான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 11.20 மி.மீ. மழை பெய்துள்ளது. கரியகோவில் 7, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, எடப்பாடி 2, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 30.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
    • நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 6-ந்தேதி மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவு ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் (20) என்பவர் ஓட்டினார். வேன் 6-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் அதி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். பிரியா, டிரைவர் விக்னேஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதில் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. பிரியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு (25) மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    • நேற்று மாலை முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.
    • பாசனத்துக்காக தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது நீர்மட்டம் 103 அடியாக இருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென குறைந்து 50 அடிக்கு கீழே நீர்மட்டம் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகிறது.

    மேலும் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் அணை குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பகுதி வெடித்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழை காரணமாக நீர்த்தேக்க பகுதிகளில் புல்முளைத்து காணப்படுகிறது. அந்த இடங்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதாவது 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 479 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 46.55 அடியாக இருந்தது. அணையில்இருந்து பாசனத்துக்காக தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×