என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல்லில் பலத்த மழை: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்
    X

    சேலம், நாமக்கல்லில் பலத்த மழை: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்

    • சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
    • தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி அம்மாப்பேட்டை ஜெயாதியேட்டர், நெத்திமேடு, தாதகாப்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்பட பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்த படியே சென்றனர்.

    மாலை 4 மணியளவில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்த படியே வீடுகளுக்கு திரும்பினர். சில மாணவர்களை பெற்றோர் குடை பிடித்த படி வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

    மழையை தொடர்ந்து ஆங்காங்கே ஒதுங்கி நின்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மழை நின்றதும் வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் சேலம் மாநகரில் 5 ரோடு உள்பட சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதே போல சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. 2 கி.மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம் புறநகர் பகுதிகளான எடப்பாடி, சித்தூர், வெள்ளரி வெள்ளி, பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் கன மழை கொட்டியது. இந்த பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 13 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வாகனம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், மங்களபுரம் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ராசிபுரத்தில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. மங்களபுரத்தில் 14.4 , சேந்தமங்கலம் 12, கொல்லிமலை 8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×