என் மலர்
ராமநாதபுரம்
- விவசாயிகளுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
- அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். குறிப்பாக அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல ஆயிரம் ஏக்கர் இருந்த போதிலும் குறிப்பிட்ட நஞ்சை நிலங்களில் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகிப்போவது அல்லது புயல், வெள்ள காலங்களில் மழையால் பயிர்கள் அழுகியும், தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது.
அபிராமத்தை சுற்றிலும் பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. இந்த பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவ சாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அபிராமம் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டும் நம்பி 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.
விவசாய தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்தது மாதத்திற்க்கு 25 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும்.
ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்போது விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
இதுபற்றி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டு களாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்கதையாகி விட்டது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான மகசூல் விவசாயத்தில் கிடைப்பதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வேலையின்றி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. விவசாய தொழி லாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மழை, வெள்ளம். வறட்சி காலங்களில் இழப்பீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இனிவரும் காலங்களில் நிவாரணம் வழங்க தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கணவர் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டரிடம் பட்டதாரி பெண் மனு கொடுத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் லுத்துபியா பேகம். இவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனக்கும், கீழக்கரை முகம்மது அப்துல் காதர் மரைக்கா (வயது50) என்ப வருக்கும் 2002-ம் ஆண்டு திருமணமானது. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திருமணத்தின்போது எனது தந்தை வரதட்சணையாக கொடுத்த வீட்டில் 20 வருடங்களாக கணவர் மற்றும் பிள்ளைகள் வசித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக எனது கணவரின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் பல மாற்றங்கள் காணப்பட்டது.
திருமணத்தின் போது எனது தந்தை 41 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். அதனை எனது கணவர் விற்றும், அடகு வைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்தார். மேலும் எனது குடும்பத்தார் கொடுத்த ரூ.10 லட்சத்தையும் அபகரித்து விட்டார்.
என்னை ஏமாற்றி எனக்கு சொந்தமான சொத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். எங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து என்னிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
- கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கீழக்கரை
கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவைகளில் புறநகர் பஸ்கள் திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி டெப்போ, கன்னியாகுமரி டெப்போ கும்பகோணம் டெப்போ நாகப்பட்டினம் டெப்போ உள்ளிட்ட புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.
இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற னர்.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலை யத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கடலாடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
முதுகுளத்தூர்
கடலாடி அருகே உள்ள ஏ.பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானம், (வயது 36). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தார். மாசானத்திற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாசானம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நைலான் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மாசானத்தின் தந்தை சேமு கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 395 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கைகள் குறித்த 395 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர் களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சினைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம் தலைமையில் நடந்தது.
யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சிங்கத்துரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் மேளா நாளை முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
- கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.300 கோடி பயிர்க்கடனும், ரூ.200 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 40 ஆயிரத்து 180 விவசாயிகளுக்கு ரூ.248.16 கோடி பயிர்க்கடனும், 6 ஆயிரத்து 153 விவசாயிகளுக்கு ரூ.88.75 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 6.2.2023 முதல் 10.2.2023 வரை சிறப்பு கடன் மேளாக்கள் நடத்தப்பட உள்ளது.
பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கு பருத்தி ரூ.22 ஆயிரத்து 50, மிளகாய் ரூ.27ஆயிரத்து 950, தென்னை ரூ.22 ஆயிரம், வாழை ரூ.40 ஆயிரத்து 550, மக்காச்சோளம் ரூ.18 ஆயிரத்து 850, நிலக்கடலை ரூ.21 ஆயிரத்து700 என்ற அளவில் வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்படும். விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அனைத்து விவசாயி களும் இந்த சிறப்பு கடன் மேளாவில் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்புக் கடன் பெற்றுப் பயனடையலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
பரமக்குடி வட்டாரம் 88703 52220, போகலூர் வட்டாரம் 75503 43249, கமுதி வட்டாரம் 77081 85419, கடலாடி வட்டாரம் 94435 76159, நயினார்கோவில் வட்டாரம் 90951 14291,முதுகுளத்தூர் வட்டாரம் 94872 13528, ராமநாதபுரம் வட்டாரம் 99522 06840, மண்டபம் வட்டாரம் 94430 65821, திருப்புல்லாணி வட்டாரம் 83001 71459, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் 88386 68780, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சரக துணைப்பதிவாளர் 73387 21602.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
- இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்ற ஆசிப்பிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, 2-ம் பரிசை வென்ற முகம்மது யூசுப்பிற்கு பஞ்சாயத்து துணை தலைவர் புரோஸ் கான், 3-ம் பரிசை வென்ற கைப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பஹது ராஜா ஆகியோர் காசோலை வழங்கினர்.
ஒன்றிய பற்றாளர் லதா, கவுன்சிலர்கள் மீராசா, அயூப் கான், பீர் முஹைதீன், ரஜப் நிஷா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெற உதவிய அக்பர் அம்பலம், செய்யது இபுராமுசா, ரஜபுல்லாஹ் பெரியபட்டினம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.
- முதுகுளத்தூர், கடலாடியில் வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
- பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நடப்பாண்டில் இந்த பகுதிகளில் சுமார் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை போதிய அளவில் பெய்யாததால் வளர்ச்சி நிலை, தூர் பிடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
கண்மாய்களில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் நீர்பாசன வசதியுள்ள பகுதிகளிலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டது.
சில பகுதிகளில் பயிர்கள் ஆரம்பகட்ட வளர்ச்சிக்குப்பின் மணி பிடித்த நிலையில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக மணிகள் பதராக மாறி மகசூல் முற்றிலுமாக பாதிக்க ப்பட்டது.
பாதிக்க ப்பட்ட விவசாயி களின் தொடர் கோரி க்கைக்கு பிறகு தற்போது வருவாய் த்துறை மற்றும் வேளா ண்மைத் துறைகளின் மூலம் வறட்சி பாதிப்புகள் குறித்த கண க்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்ய சென்னை யில் இருந்து வந்த வேளாண்மை இயக்குநர் அண்ணா துரை, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூலுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கடலாடி வட்டாரம் ஏனாதி, முதுகுளத்தூர் வட்டாரம் தேரிருவேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, பாதிக்கப்பட்ட பரப்பு, பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு, பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வறட்சி பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை சாகு படிக்கு கொண்டு வரும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயன சர்மா உடனிருந்தார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செல்வம் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி வட்டார வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தொண்டி, திருவாடானையில் பிரதோச வழிபாடு நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அன்னபூரனேஸ்வர சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசம் நடந்தது. இதைெயாட்டி நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, அரிசி மாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நாகநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பூஜை ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்திருந்தனர். சர்க்கரை பொங்கல், எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- முதுகுளத்தூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் நேருகுமார், தலைமையாசிரியர் சந்தனவேல், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமில் மாணவர்களிடம் வெறிநோய் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
- காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). இவர்களுக்கு திவாகர் (20) என்ற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று திவாகருடன் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பினர். ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகிலுள்ள குவார்ட்டர்ஸ் அருகில் வாகனத்தை நிறுத்தி தமிழ்செல்வியும், திவாகரும் ஆறுமுகத்தின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் திவாகர் ஆகியோர் மீது மோதியது. இதில் திவாகருக்கு தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திவாகரை மீட்டு ராமநா தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






