என் மலர்
ராமநாதபுரம்
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றப்பட்டது.
- புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரி விழா விமரிசை யாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நாளை (11-ந்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அபிஷேகங்கள் ராமநாதசாமிக்கு நடை பெறும். பின்னர் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராமநாதசாமி சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி யேற்றப்படும்.
12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகா சிவராத்திரியில் தினசரி ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெறும்.
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கோவிலின் உபகோவிலான கெந்தமாதன பர்வத வர்த்தினி அமைந்துள்ள மண்டகப் படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகாசிவராத்திரியன்று (18-ந்தேதி) இரவு வெள்ளி ரதம் புறப்பாடும், 19-ந் தேதி தேரோட்டமும் நடை பெறும்.
20-ந் தேதி அமாவாசை யை முன்னிட்டு ராமநாத சாமி-பர்வத வர்த்தினி அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்படாகி காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
- ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
- பைபர் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய-மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தினமும் 24 மணி நேரம் படகில் ரோந்து சென்று கடத்தல்காரர்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இருந்தபோதிலும், அவர்களது கண்காணிப்பையும் மீறி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மத்திய-மாநில உளவுப்பிரிவினர், இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, சுங்கத்துறையினர், போலீசார் கண்காணிப்பில் இருந்தும் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை.
சமீப காலமாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினரே அவ்வப்போது பெரிய அளவிலான தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தின் நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படை, மண்டபத்தில் கூட்டுக்குழு அமைத்து மன்னார் வளைகுடா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா? என கடந்த 2 நாட்களாக கண்காணித்து வந்தனர்.
கடந்த 8-ந் தேதி இரவு இந்தக்குழு, சந்தேகத்திற்கு இடமாக ஒரு படகு வந்ததை கண்டுபிடித்தது. அதிலிருந்த மர்ம நபர்கள் போலீசார் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும், அவர்களிமிடமிருந்து தப்பிக்க படகை அதிவேகமாக செலுத்தினர். அவர்களை கூட்டுக்குழு, விரட்டிச் சென்று பிடித்தது.
படகில் சோதனையிட்ட போது, சட்டவிரோத கடத்தல் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அவர்கள் கடத்திவந்த தங்கக் கட்டிகளை கடலில் வீசியது தெரியவந்தது.இதனையடுத்து இந்திய கடலோரக் காவல்படைக் குழு, குறிப்பிட்ட ஒரு பகுதியில் கடலில் மூழ்கி கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தியதில், 17.74 கிலோ தங்கம் இருந்த மூட்டை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை, மீன்பிடி படகில் கடத்தி வந்த மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த நாகூா்கனி (வயது 30), அன்வா் (25), மன்சூா்அலி (25) ஆகிய 3 பேர் பிடித்துச் செல்லப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கைக்காக மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து 3 பேரிடம் தொடர்ந்து 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் எவ்வித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.
இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்லாத வகையில் குறிப்பிட்ட இடங்களில் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியதும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் பைபர் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய-மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- படகில் தங்கக்கட்டிகள் இல்லாததால் அவர்களிடம் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
- மன்னார் வளைகுடா பகுதியில் தேடியதில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
ராமேசுவரம் கடல் பகுதியின் அருகாமையில் இலங்கை உள்ளது. இதனால் கடத்தல்காரர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே கடல் வழியாக நடக்கும் தங்க கடத்தலை தடுக்கவும் தீவிரவாத கும்பல் ஊடுருவலை கண்காணிக்கவும், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகள் மூலம் தினமும் 24 மணி நேரமும் ரோந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கையில் இருந்து ஒரு நாட்டு படகில் சிலர் தங்கக்கட்டிகளை கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்று நாட்டு படகு வருகிறதா? என்று பார்த்தனர்.
அப்போது நடுக்கடலில் நாட்டு படகு ஒன்று வருவது தெரியவந்தது. அதில் இருந்த 3 பேர் தங்களை நோக்கி போலீசார் வருவதை கண்டதும், தங்களது படகில் வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அவசர அவசரமாக கடலில் வீசியுள்ளனர்.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார் படகில் தங்கக்கட்டிகள் இல்லாததால் அவர்களிடம் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது படகில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் நாட்டு படகு நின்ற இடத்தில் தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டதா? என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு ஸ்கூபா டைவிங் வீரர்களை அழைத்து வந்து ஆழ்கடலில் மூழ்கி தங்கக்கட்டி பார்சல்கள் உள்ளதா? என்று நேற்று முதல் இன்று காலை வரை விடிய, விடிய தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும் கடலோர காவல்படையினர் இன்று 2-வது நாளாக தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் தேடியதில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 12 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின. அவற்றின் மதிப்பு ரூ.7.50 கோடியாகும்.
- ராமநாதபுரம் நகராட்சிக்கு ரூ. 22½ லட்சம் மதிப்பில் மின்கல இயக்க வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.
- பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என்று விழாவில் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வழங்கப்பட்ட மின்கல இயக்க வாகனங்களை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவு செய்திட வேண்டும் என்கிற நோக்கத்திலும் மேலும் இதற்கான அனைத்து நகராட்சிகளுக்கும் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். மாசு இல்லாத ராமநாதபுரத்தை உருவாக்குவது இன்றியமையாததாகும். தூய்மைப் பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றை மேலும் சிறப்பாக மேற்கொண்டு ராமநாதபுரம் நகரினை தூய்மையான நகராட்சியாகவும் மற்ற நகராட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கிடும் வகையில் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
அதனைத் தொடர்ந்து ஐ, சி.ஐ.சி.ஐ. பவுண்டேஷன் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் தலா ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 5 மின்கல இயக்க வாகனங்களை (மொத்தம் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில்) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். வாகனங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் வாகனங்களை ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்ப டைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், நகர் மன்றத்துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையர் (பொ) லெட்சுமணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை பாடி லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனம் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் 3-ம் ஆண்டு எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். சென்னை லூகாஸ் டி.வி.எஸ். துணைமேலாளர் ரசீத், எச்.ஆர்.அலுவலர் சந்தானம் ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி ரேசன்கார்டு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது.
- குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 11-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் வட்டம்-அம்மன்கோவில் (ரேசன் கடை), ராமேசுவரம் வட்டம்-பாம்பன் (ஊராட்சி ஒன்றிய கட்டிடம்), திருவாடானை வட்டம்-கல்லூர் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் - சிரகிக்கோட்டை (ரேசன் கடை), முதுகுளத்தூர் வட்டம்-கண்டிலான் (ரேசன்கடை), கடலாடி வட்டம்-பீ.கீரந்தை (ரேசன்கடை), கமுதி வட்டம்-செங்கற்படை (ரேசன்கடை), கீழக்கரை வட்டம்-களரி (ரேசன்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-அழகர்தேவன் கோட்டையில் (ரேசன்கடை) முகாம்கள் நடைபெறுகிறது.
இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ரேசன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகா ரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஹோவர் கிராப்ட் படகு மூலம் கடல் மற்றும் தரையிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
பனைக்குளம்:
பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடலில் படகுகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக கடலோர குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஹோவர் கிராப்ட் படகு மூலம் கடல் மற்றும் தரையிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பாம்பன் பகுதி அருகே நடுக்கடலில் ஒரு நாட்டு படகு வருவது கடலோர போலீசாருக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் தங்களை நோக்கி வருவதை கண்டதும் படகில் இருந்த 2 நபர்கள் படகில் வைத்திருந்த சில பொருட்களை எடுத்து கடலில் வீசினர்.
அந்த நாட்டு படகை போலீசார் சுற்றி வளைத்தனர். படகில் இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
படகில் இருந்து வீசிய பொருள் பற்றி கேட்ட போது எதுவும் வீசவில்லை என்று அவர்கள் கூறினர். படகில் வந்த நபர்கள் பலகோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்திருக்கலாம். அவர்கள் தங்களை கண்டதும் கடலில் தங்கக்கட்டிகளை வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து போலீசார் கடலில் முத்துகுளிக்கும் மீனவர்களை அழைத்து வந்து தங்கக்கட்டிகள் வீசப்பட்டதாக சந்தேகப்படும் இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டுப்படகில் வந்த நபர்கள் இலங்கையை சேர்ந்தவர்களா? கொள்ளையர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அபிராமம்
இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.
காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூலகத்தின் சார்பில் 5-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா பற்றி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசி யம் பற்றி எடுத்துரைத்தார். தமிழாசிரியர் சிவகாமி முன்னிலை வகித்தார்.
நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி பற்றிக் கூறினார். அனைவரும் வாருங்கள் புத்தகத் திருவிழாவிற்கு, புத்தகம் படிப்போம் புது உலகு படைப்போம், நம்ம ராம்நாடு புத்தகத் திருவிழா, புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள் ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திக்கொண்டு அனை வரும் புத்தகத் திருவிழா வில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களாகிய மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி செல்வபிரபு, சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் சதீஷ்குமார் பாலு ஆகியோர் பங்கேற்று ேபசினர்.
நோய்க்கு காரணமான நுண்ணுயிரினங்களை கண்டறிவதற்கு பயன்படும் அனைத்து உபகரங்களைப் பற்றியும் அதனை கையாளும் முறைகளைப் பற்றியும் செல்வபிரபு எடுத்துரைத்தார். நானோ அறிவியல் பற்றியும், அதனுடைய வகைகளை குறித்தும், மருத்துவத்தில் நானோ அறிவியலின் தாக்கம் குறித்தும் சதீஷ்குமார் பாலு எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் ஆனந்த், ஷோபனா, விஜயகுமாரி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
- கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
- சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் அண்ணாதுரை, மேலாளர் முரளிதரன், முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், துணை சேர்மன் ஆத்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர்கள் குமரையா, பிச்சை உள்ளிட்ட கவுன்சிலர்கள்: கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை மற்றும் வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆணையாளர்: இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மாரியூர் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: சாத்தங்குடி வெள்ளங்குளம் கிரா மத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். கடுகு சந்தை சத்திரம் கிராம தெருக்கள் முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி: வாலிநோக்கம் கிராமத்தில் குடிநீருக்காக பைப் லைன் பதிப்பதற்கு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடைந்த சாலைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் மாயகிருஷ்ணன்: ஏ.புன வாசல் ஊராட்சி பாடு வனேந்தல் கிராமத்திற்கு மெட்டல் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கவுன்சிலர் குஞ்சரம் முருகன்: டி.எம்.கோட்டை கிராமத்தில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலீல்: மாரியூர் கடற்கரை செல்லும் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒப்பிலான் கடற்கரைக்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் அம்மாவாசி: சிக்கல் கிராமத்தில் உள்ள பாண்டியன் ஊரணியை சுற்றி முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும். சிக்கல் மேற்கு காலனி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர் ராஜேந்திரன்: வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து சிறைக்குளம் செல்லும் சாலை, ராஜாக்கள் பாளையம் கிராமத்தில் இருந்து காமராஜர்புரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் செய்யது ராவ்யா செய்யது அலி: கீழச் சிறுபோது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலச்சிறு போது, கீழச்சிறுபோது, சவேரியார் பட்டினம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, மகேஸ்வரி சக்திவேல், முருக லட்சுமி மலைராஜ், நரிப்பையூர் முருகன், உள்ளிட்டோரும் அவர்களது பகுதி கோரிக்கை களை வலியுறுத்தினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.






