என் மலர்
ராமநாதபுரம்
- கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் வருடா பிசேக விழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கபட்டது.
4-ம் இடம் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களூக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கபட்டது.இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராள மானோர் கண்டுகளித்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
- இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மண்டபம், எஸ்.மாரியூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
- மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி மண்டபம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் கடலாடி அருகே எஸ்.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படும்.
உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு, பல் பரிசோதனை, கொழுப்பு, உப்பு, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, கருப்பைவாய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, இதய நோய், மனநலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம், தோல் வியாதி, இந்திய மருத்துவம் மற்றும் சித்தா மருத்துவம், தாய்-சேய் நல ஆலோசனை ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மருந்துகளும் வழங்கப்படும்.
பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தெரிவிக்கப்படாத பரிசோதனை முடிவுகள் வாட்ஸ்-அப் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப் பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும். இதனையடுத்து தொற்று நோய் கண்டறியப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மக்களைத்தேடி மருத்துவம் மூலமாக அவர்கள் வீடு தேடியே மருந்துகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
கீழக்கரை
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான ம.தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினர்.
முன்னதாக அரண்மனை கோட்டை வாசல், விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துவேல், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மேகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், போகலூர் வட்டார தலைவர் முனீஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தமிழரசன், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொன்.பெரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- கல்வித்தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர்.
இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலை பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆக மொத்தம் 64 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றதே இதற்குக் காரணமாகும்.
தற்போது இந்த 64 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. அதனால் தலைமை யாசிரியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை.
நிரந்தர தலைமையாசிரியர் இல்லாமல் பள்ளிகள் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் 10-ம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஆனால்
கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு பின் தங்கியது. கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்தி ருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே கல்வித்தரத்தில் பின்தங்கி வரும் நிலையில், 64 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக கல்வி அமைச்சர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது.
- பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு பச்சை நிறத்திலான ஆடல் வடிவ நடராஜர் சிலை அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். அப்போது நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது. இதன் காரணமாக குளத்தில் மீன்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- படுகொலை சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
- கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் கீர்த்தி வாசன் (வயது22). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கீர்த்தி வாசனின் நண்பர் கொழுந்தூரை சேர்ந்த தினேஷ்குமார் (21). இவர் கீழத்தூவல் பகுதியை சேர்ந்த அபினேஷ் (23) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.35ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ்குமாரும், கீர்த்தி வாசனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருவரங்கம் மதுக்கடை அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, தினேஷ் குமாருக்கு பணம் கொடுத்த அபினேஷ் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் வந்திருக்கிறார்.
அவர் தினேஷ் குமாரை வழிமறித்து நிறுத்தி தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினேஷ்குமார் மற்றும் கீர்த்தி வாசன் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து அவர்களை அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அவர்கள் கீர்த்தி வாசன் மற்றும் தினேஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது காரால் மோதினர். இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை தொடர்ந்து காரால் மோதிய அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கார் மோதியதால் தூக்கி வீசப்பட்டதில் படுகாய மடைந்த கீர்த்தி வாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் படுகாயமடைந்து ரோட்டில் விழுந்து கிடந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரால் மோதி கீர்த்தி வாசன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ன கண்ணு, கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கீர்த்திவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கீர்த்திவாசன் கொலை தொடர்பாக அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா என்கிற சிவசுப்பிர மணியன்(24), கிருஷ்ண மூர்த்தி(26), துரை(24), மலை கிருஷ்ணராம்(24), வெங்கடேஷ்(26) ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.
அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அபினேஷ், சூர்யா, கிருஷ்ண மூர்த்தி, துரை, மலை கிருஷ்ணராம் ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பண விவகாரத்தில் நண்பருடன் சென்ற வாலிபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழத்தூவல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கமுதியில் அந்ேதாணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
- இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஜூன் மாதத்தில் நடை பெறும். இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டது. பங்குத் தந்தை அருள்சந்தி யாகு மற்றும் அருட் தந்தை யர்கள் முன்னிலையில், பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், காலை திருப்பலி நடந்தது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சமனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத் துடன் நடந்தது.
ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்த தேர்பவனியை மத வேறுபாடின்றி பொது மக்கள் பொரிகடலை, மிளகு, உப்பு, மலர்மாலை, மெழுகு வர்த்தி போன்ற வற்றை கொடுத்து வழிபட்ட னர். பேண்டு வாத்தியம், வானவேடிக்கை, மற்றும் மேல தாளங்களுடன் தேர்பவனி நடந்தது. இன்று சிறப்பு திருப்பலி நடந்தது.
விழா ஏற்பாடுகளை பரத உறவின்முறையினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.
- கமுதி அருகே அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
- இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.
கமுதி
கமுதி அருகே உள்ள திம்மநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீர மச்சான் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடைகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, தலைவ நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உட்பட 7 அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.
- ராமநாதபுரம் வட்டார முன்னாள் காவல்துறையினர் காங்கிரசில் இணைந்தனர்
- நாகராஜன், அல்அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு தரப்பினர் இணையும் நிகழ்ச்சி பாரதிநகர் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் நடந்தது. வட்டார தலைவர் காருகுடி சேகர் ஏற்பாட்டில் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் காவல் ஆய்வாளர் கொலுவூர் முருகேசன் தலைமையில் முன்னாள் காவல்துறையினர் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை செல்லத்துரை அப்துல்லா வழங்கினார்.
இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், பொருளாளருமான ராஜாராம் பாண்டியன் எம்.சி, மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் துல்கீப் கான், முன்னாள் ராணுவத்தினர் அணி மாவட்ட தலைவர் கோபால், ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி,மனித உரிமை பிரிவு தலைவர் செய்யது அபுதாஹீர்,துணைத் தலைவர் சீனி, ஆராய்ச்சி துறை தலைவர் துரை பாண்டி, மாவட்ட பொதுசெயலாளர்கள் ஆறுமுகம், நாகராஜன், அழகர்சாமி, சிறுபான்மைத்துறை துணைத் தலைவர் பனைக்குளம் ஹனீப் கான், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்கள் நாகராஜன், அல் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக டி.ஐ.ஜி. துரை தெரிவித்துள்ளார்.
- ‘செக்போஸ்ட்’ அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., துரை நிருபர்களிடம் கூறியதா வது:-
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தொடர்ந்து கடத்தல் அதிகரித்து வருகிறது.இவற்றை கட்டுப்படுத்த வேதாளை பகுதியில் போலீஸ் 'செக்போஸ்ட்' அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட உள்ளது.
இப்பிரிவு போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடல் வாழ் உயிரினங்கள், கஞ்சா கடத்தல், கடலில் தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த தனிப்படை செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
- ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






