என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பூதக்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 19). இவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு மணிகண்டன் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விராலிமலை அருகே குறிச்சிப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை மணிகண்டன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் வந்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்தன.
இந்நிலையில் மரத்தடியில் இருந்த 5-ம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த மணிமேகலை (வயது10). கங்காதேவி (10), பாண்டிமீனாள் (10) மகேஸ்வரி (10) சிவஜோதி (10) ஆகிய மாணவிகள் மீது அந்த பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் விழுந்தது. திரவம் பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால் மாணவிகள் பீதியடைந்து மயக்கம் வருவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மரத்தின் மீது பார்த்தபோது மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பாம்புகளை கொன்று எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாம்புகளை டாக்டர்களிடம் காண்பித்தனர்.
மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும் மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்தவர் சோலையன். இவரது மகன் பார்த்தசாரதி (வயது27). இவர் மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்திற்கு பார்த்தசாரதி சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் பிரபு (வயது 62). இவர் புதுக்கோட்டையில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வருகிறார். அப்பள்ளியின் தாளாளராகவும் உள்ளார்.
மேலும் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியில் சொந்த செலவில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை சென்று வழிபடுவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை அவர் வழக்கம் போல் தனது காரில் டிரைவர் தெய்வேந்திரனுடன் சண் முகநாதபுரத்தில் இருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள காட் டுப்பகுதி அருகே செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் 6 மர்ம நபர்கள் வந்தனர்.
திடீரென அவர்கள் காரை வழிமறித்ததோடு, டிரைவர் தெய்வேந்திரனை சரமாரி தாக்கி அவரது வாயையும், காருக்குள் இருந்த தர்ம ராஜ் பிரபுவின் வாயையும் துணியால் கட்டினர். இதையடுத்து 6 பேரும் சேர்ந்து அந்த காருடன் 2 பேரையும் கடத்தி சென்றனர்.
செல்லும் வழியில் தர்மராஜ் பிரபுவின் மகன் முத்துக் குமரனுக்கு போன் செய்த அவர்கள், உங்கள் தந்தையை கடத்தி வைத்துள்ளோம். ரூ.2 கோடி பணம் தந்தால் தான் விடுவோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனையை தீவிரப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதையறிந்த கடத்தல் கும்பல் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க இரவு முழுவதும் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் காருடன் சுற்றி வந்துள்ளனர். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டு மாவடி அருகே செல்லும் போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை பார்த்து, காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.
இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 4 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கடத்தப்பட்ட காரை போலீசார் சோதனையிட்ட போது அதில் இருந்த தர்ம ராஜ்பிரபு, டிரைவர் தெய்வேந்திரன் ஆகியோரை மீட்டனர். போலீசாரிடம் சிக் கிய 2 பேரும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்துக்காக பள்ளி தாளாளர் தர்மராஜ் பிரபுவை கடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தினார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 7.30 மணியளவில் பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

இதேபோல சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி கொண்டும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் உள்ள பெரியபள்ளிவாசல், தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், சின்னப்பாநகர், கைக்குறிச்சி, பாலன்நகர், அடப்பன்வயல், திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
இதேபோல பொன்னமராவதி இந்திராநகர் மற்றும் கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பொன்.இந்திராநகர் முஆத் இப்னு ஜபல் ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதேபோல கொன்னையூர், வேந்தன்பட்டி, புதுவளவு, அம்மன் கோவில் வீதி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதேபோல அறந்தாங்கி அலிஜைனம் ஓரியண்டல் அரபிக்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல அரசர்குளம், காரணியானேந்தல், வெட்டிவயல், மேற்பனைக் காடு, ரெத்தினகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை பெரிய பள்ளிவாசல், கல்லாக்கோட்டை பள்ளிவாசல், பெருங்களூர் பள்ளிவாசல், அண்டனூர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள குத்பா பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல்களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவரங்குளம், கைகாட்டி, வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் ஆனந்த பிரவின் (வயது 22). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலைநிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் செட்டியாப்பட்டியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலங்குடி அருகே செட்டியாப்பட்டி விளக்கில் மோட்டார் சைக்கிளை ஆனந்தபிரவின் திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தபிரவின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சம்பட்டி விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தபிரவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் ராகவேந்திரா (வயது 35), டிராக்டர் ஓட்டி வருகிறார்.
நேற்று கணபதிபுரத்தில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு டிராக்டரில் வந்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பெருச்சிவன்னியம்பட்டி அருகே சென்ற போது எதிரே கார் வந்துள்ளது.
காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டரை இறக்கியுள்ளார். திடீரென டிராக்டர் தலை குப்பற கவிழ்ந்தது. இதில் சிக்கிய ராகவேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.
28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 44). தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குளவாய்ப்பட்டியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவற்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தகோபால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






