என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புகையிலை பொருட்கள் விற்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் பெட்டிக்கடையில்புகையிலை பொருட்கள் விற்ற காமராஜ் (வயது 40) மீது இலுப்பூர் போலீசாரும், சித்தன்னவாசல் சாலையில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்ற சதீஸ்குமார் (28) மீது அன்னவாசல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். செம்பாட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற குமார் (49), சின்னராசு (40) ஆகியோர் மீது வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வடகாடு அருகே கே.ராசியமங்கலம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில்புகையிலை பொருட்கள் விற்ற அருள்பிரகாசம் (59) மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் மதுப்பாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர்மீதும், பாண்டக்குடி கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் மீதும் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டையில் பத்திரம் பதிவு செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள இச்சடி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பத்திரம் பதிந்து ஆவணம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தருமாறு சார்பதிவாளர் கூறியதன் பேரில், ஊழியர் செந்தில்குமார் கேட்டுள்ளார்.

    இதில் ரூ.5 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் செல்வத்தின் நண்பரான சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பத்திரம் பதிந்த பின் அதற்கான ஆவணத்தை கொடுக்காமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து லஞ்சம் கேட்டவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து செந்தில்குமாரிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில், சுப்பிரமணியன் நேற்று புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அதே நேரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி மற்றும் போலீசார் அதே வளாகத்தில் மறைவான இடத்தில் இருந்து அவரை கண்காணித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக சுப்பிரமணியன் கொடுத்தபோது, அதனை சார்பதிவாளர் சரவணன் கூறியதன் பேரில் செந்தில்குமார் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சார்பதிவாளர் சரவணன், ஊழியர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது சார்பதிவாளர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் கதவு மற்றும் அலுவலகத்தின் ஜன்னல் மூடப்பட்டது. அலுவலகத்தின் உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் சார்பதிவாளரின் வீட்டில் சோதனை நடத்த உள்ளதாக கூறினர்.

    கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.21 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் உள்பட2 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது உண்டு. பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வந்து செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல புதுக்கோட்டையில் இருந்து வெளியூர்ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புதுக்கோட்டை வரவும், புதுக்கோட்டை வந்த பின் அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு பயணிகள் செல்லும் வகையில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் செல்லவும் வருகிற 11-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின் மீண்டும் ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்யும்வகையில் வருகிற 14-ந் தேதி மாலைக்கு பிறகு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வருகிற 17-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் சேவை உண்டு. பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் மற்றும் தேவைகளை பொறுத்து உடனுக்குடன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அறந்தாங்கி அருகே திருமணமான 11-வது நாளில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த தேடாக்கியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). இவருக்கும், வல்லத்திராகோட்டையை சேர்ந்த பவபிரியா என்பவருக்கும், கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று லட்சுமணன் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 11-வது நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு போனது தொடர்பாக வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 61). இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ரூ.4½ லட்சம் மதிப்பில் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    நகைகளை வீட்டில் வேலை செய்து வந்த திருவப்பூரை சேர்ந்த ராஜலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்தராஜன் வீட்டில் வேலைசெய்து வந்த ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி, பொன்னமராவதி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி சாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49). இவர் புதுக்கோட்டையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி வந்து கொண்டிருந்தார். அழியாநிலை என்ற இடத்தின் மீது வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். சம்பவத்தன்று இவர் மேலைச்சிவபுரியில் நடந்த திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிரே மயிலாப்பூர் ஊராட்சியை சேர்ந்த சித்தாண்டி மற்றும் அவரது மகன் விஜயகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது ஏனாதி பாலத்தின் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் மயங்கி விழுந்தார். மேலும் சித்தாண்டி, விஜயகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சித்தாண்டி மற்றும் விஜயகுமாரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை நகராட்சிக்கு வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகள், வீடுகளில் வரி செலுத்தாதவற்றில் ‘சீல்’ வைப்பு நடவடிக்கையை எடுத்தனர். இதில் 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. ஒரு வீட்டிற்கு பொருட்களுடன் வைத்து பூட்டுப்போட நகராட்சி ஊழியர்கள் முயன்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரத்திற்கு கடைகளை திறக்க அனுமதிக்க கோரி சம்பந்தப்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் சந்தைப்பேட்டையில் அரண்மனை வீதியில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி, தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. கடைகளை திறக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் முருகப்பன் உறுதிஅளித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப்படுத்தினார். மேலும் ஆணையர் ஜஹாங்கீர்பாட்ஷாவிடம் நேரில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் சமரசம் ஏற்படவில்லை. அடுத்தகட்ட போராட்டத்தை வியாபாரிகள் நடத்த முயன்ற போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, செல்போன் மூலம் பேசி சமாதானப்படுத்தினார். கடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதன்பின் நகராட்சி ஊழியர்கள், ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளை திறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று இரவு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். பெண் பணியாளர்களை மாலை 6 மணிக்கு மேலும் பணியில் இருக்க அறிவுறுத்தக்கூடாது எனவும், இரவு 8 மணிக்கு மேலும் பெண் பணியாளர்களை அலுவலகத்தில் வைத்து வேலைவாங்குவதாகவும் நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் அடுத்த கலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 46). விவசாயி. இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைகளில் காண்பித்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சக்தி வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருச்சி-புதுக்கோட்டை சாலை ஆவூர் பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மாத்தூர் விவேகானந்தா நகரை சேர்ந்த டென்னிஸ் மகன் மனோகர் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி மலையாண்டி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை சேர்ந்த வைத்தியநாதன் (59) என்பவரை பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க வழிகாட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கீரமங்கலம்:

    மருத்துவப்படிப்பு படிப்பதற்கு பிளஸ்-2 முடித்த பிறகு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தமிழ்நாட்டில் அதிகமான இடங்கள் இருந்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க செல்ல முடியாத நிலையில் தற்போது 7.5 சதவீதம் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 303 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் தற்போது மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 3-ந் தேதி முதல் ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி தெரியாமல் திணறி வருகின்றனர். விண்ணப்பத்தில் சிறு தவறு இருந்தாலும் நிராகரிக்கப்படும் நிலை உள்ளதால், மாவட்ட கல்வித்துறை மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய வழிகாட்ட வேண்டும் என்று பெற்றோர் கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே விரைவாக கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியாக அனுப்பலாம்.
    கறம்பக்குடி அருகே பாஜக கொடியை கழற்றி வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் பா.ஜ.க.எஸ்.சி, எஸ்.டி பிரிவின் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை நேற்று முன்தினம் யாரோ கழற்றி அப்பகுதியில் வீசி சென்றிருந்தனர். இதுகுறித்து கறம்பக் குடி பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். 

    அதன்பேரில், கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மதன் (வயது 25) என்ற வாலிபர் பா.ஜ.க. கொடியை கழற்றி வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மதனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட் டை சிறையில் அடைத்தனர்.
    அரிமளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள கல்லுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(வயது 23). விவசாயி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி நாகலட்சுமி, மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், மனைவியை தன் வீட்டிற்கு வருமாறு கார்த்தி அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த கார்த்தி, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×