search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நகராட்சிக்கு வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

    புதுக்கோட்டை நகராட்சிக்கு வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகள், வீடுகளில் வரி செலுத்தாதவற்றில் ‘சீல்’ வைப்பு நடவடிக்கையை எடுத்தனர். இதில் 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. ஒரு வீட்டிற்கு பொருட்களுடன் வைத்து பூட்டுப்போட நகராட்சி ஊழியர்கள் முயன்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரத்திற்கு கடைகளை திறக்க அனுமதிக்க கோரி சம்பந்தப்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் சந்தைப்பேட்டையில் அரண்மனை வீதியில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி, தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. கடைகளை திறக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் முருகப்பன் உறுதிஅளித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப்படுத்தினார். மேலும் ஆணையர் ஜஹாங்கீர்பாட்ஷாவிடம் நேரில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் சமரசம் ஏற்படவில்லை. அடுத்தகட்ட போராட்டத்தை வியாபாரிகள் நடத்த முயன்ற போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, செல்போன் மூலம் பேசி சமாதானப்படுத்தினார். கடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதன்பின் நகராட்சி ஊழியர்கள், ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளை திறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று இரவு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். பெண் பணியாளர்களை மாலை 6 மணிக்கு மேலும் பணியில் இருக்க அறிவுறுத்தக்கூடாது எனவும், இரவு 8 மணிக்கு மேலும் பெண் பணியாளர்களை அலுவலகத்தில் வைத்து வேலைவாங்குவதாகவும் நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×