search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சார்பதிவாளர் அலுவலகம்
    X
    புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சார்பதிவாளர் அலுவலகம்

    புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது

    புதுக்கோட்டையில் பத்திரம் பதிவு செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள இச்சடி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பத்திரம் பதிந்து ஆவணம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தருமாறு சார்பதிவாளர் கூறியதன் பேரில், ஊழியர் செந்தில்குமார் கேட்டுள்ளார்.

    இதில் ரூ.5 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் செல்வத்தின் நண்பரான சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பத்திரம் பதிந்த பின் அதற்கான ஆவணத்தை கொடுக்காமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து லஞ்சம் கேட்டவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து செந்தில்குமாரிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில், சுப்பிரமணியன் நேற்று புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அதே நேரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி மற்றும் போலீசார் அதே வளாகத்தில் மறைவான இடத்தில் இருந்து அவரை கண்காணித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக சுப்பிரமணியன் கொடுத்தபோது, அதனை சார்பதிவாளர் சரவணன் கூறியதன் பேரில் செந்தில்குமார் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சார்பதிவாளர் சரவணன், ஊழியர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது சார்பதிவாளர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் கதவு மற்றும் அலுவலகத்தின் ஜன்னல் மூடப்பட்டது. அலுவலகத்தின் உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் சார்பதிவாளரின் வீட்டில் சோதனை நடத்த உள்ளதாக கூறினர்.

    கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.21 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் உள்பட2 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×