என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ரெகுநாதபுரம் அருகே மதுவிற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரெகுநாதபுரம், புதுவிடுதி, பந்துவகோட்டை, முத்தன் விடுதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்லத்துரை (வயது 48), ராம் (32), அய்யாதுரை (65), ரெங்கராஜ் (38), பாக்கியராஜ் (25) ஆகிய5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    விராலிமலை அருகே பெற்ற குழந்தையை, தாயே ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வேலூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ஹாஜி முகமது. சமையல் கலைஞர். இவரது மனைவி அமீனா பேகம் (வயது 26). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி அமீனா பேகத்திற்கு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    இதற்கிடையே இவர்களது வீட்டருகே வசிக்கும் கண்ணன் (58) என்பவர், நீங்கள் வறுமை நிலையில் உள்ளதால், குழந்தையை உங்களால் வளர்க்க இயலாது, எனவே கடைசியாக பிறந்த குழந்தையை, குழந்தை இல்லாத நபருக்கு விற்று தருவதாக தம்பதியிடம் கூறியுள்ளார்.

    வறுமை காரணமாக அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமீனாபேகத்தை ஈரோட்டிற்கு அழைத்து சென்ற கண்ணன், அங்கு ஒரு நபரிடம் குழந்தையை விற்று ரூ.1 லட்சத்தை பெற்று அமீனா பேகத்திடம் கொடுத்துள்ளார். அப்போது குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் ஆதார் எண்கள் ஒரு வெற்று பத்திரத்தில் எழுதப்பட்டு அமீனாபேகத்திடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பினர் அமீனா பேகத்தை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மேற்கு மேலக்கோட்டையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 50). நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்து விட்டு கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    இதனால், திடுக்கிட்டு எழுந்த சின்னப்பொண்ணு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை தேடி பார்த்தனர். ஆனால், அந்த மர்ம நபர் சிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலீசில் சின்னப் பொண்ணு புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே கூத்தனுரில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தடுப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதால் குளிர் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத்திட்ட பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் விஜய பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஒரு விவசாயியாக உணர்ந்து காவிரி -வைகை-குண்டாறு இணைப் புத்திட்டத்தை ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்ட பணிகளுக்காக நிலம் கைய கப்படுத்துவதற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்த்து ரூ.333 கோடி மதிப்பீட்டில் டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் டெண்டர் பணிகள் முடிவுற்று ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    உலக நாடுகள் மற்றும் நமது அண்டை மாநிலங்களில் கொரோனா 2-ம் அலையின் போது கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் தமிழகம் கொரோனா பாதிப்பை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்தாலும் தமிழகத்தில் தினமும் 70,000 முதல் 80,000 வரை ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு நாளைக்கு 120 என்ற நிலையில் இருந்த இறப்பு விகிதத்தை தற்போது 20-க் கும் கீழாக இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன் அரசு மருத்துவமனைகளில் ஓரிரு இறப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கொண்டு வருவதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் இந்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் மத்திய அரசு பாராட்டும் வகையில் தமிழகத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

    தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனால் கொரோனா தொற்று இல்லாத நிலையை அடைய வழிவகை ஏற்படும். எனவே அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    தமிழகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 2,000-த்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தினமும் 2,318 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 13,000 முதல் 15,000 எண்ணிக்கையில் ஆர்டிபிசிஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 ஆகும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 61 ஆயிரத்து 231 பெண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2020-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (14.2.2020-ன் படி) மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தின் போது 1, 531 ஆண் வாக்காளர்கள், 1, 590 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 3, 122 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தத்தின்போது 4 ஆயிரத்து 440 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 90 பெண் வாக்காளர்கள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 552 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    மேலும் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021-ன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 21, 22-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர், அ.தி.மு.க. நிர்வாகி அப்துல் ரகுமான், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், காங்கிரஸ் நகர தலைவர் இப்ராகிம் பாபு உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    திருமயம் அருகே பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டிபுதூரை சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மனைவி ஆசிப் பேகம்(வயது 26). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் நச்சாந்துபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சிவபுரம் அருகே அவர்கள் வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து கீழசேவல்பட்டி சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆசிப்பேகம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். 

    இந்த நிலையில் ஆணைவாரி அருகே உள்ள பாம்பாறு பகுதியில் வீரையா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் வீரய்யா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வீரய்யாவுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 

    வீரய்யாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீரய்யாவுடன் சென்ற அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டார், அவரை பிடித்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு அவரது பழைய நண்பர்கள் புதிதாக வீடு கட்டிக் கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    கஜா புயலின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில், மச்சுவாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 44) வீடும் சேதமடைந்தது. அந்த வீட்டின் மேற்கூரையில் விளம்பர பதாகைகளால் அமைத்து அவரும், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் ஆட்டோவை விற்ற அவர், தற்போது டிரைவர் வேலைக்கு சென்று வருகிறார்.

    கொரோனா ஊரடங்கின்போது வெளியூர்களில் வசித்த அவரது நண்பர்கள் புதுக்கோட்டை வந்திருந்தனர். அப்போது முத்துக்குமாருடன் டி.இ.எல்.சி. பள்ளியில் படித்தவர்கள் ஒருங்கிணைந்து ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கினர். அப்போது, ஏழ்மை நிலையில் வசித்து வந்த முத்துக்குமாரின் நிலையை கண்ட அவரது நண்பர்கள், அவருக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுத்தனர்.

    மேலும், வாட்ஸ்-அப் குழுவில் இந்த தகவலை தெரிவித்திருந்தனர். அதன்அடிப்படையில் முத்துக்குமாருடன் 6 முதல் பிளஸ்-2 வரை படித்த நண்பர்கள் பலர் தற்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களும் உதவிக்கரம் நீட்டினர். நண்பர்கள் உதவியால் முத்துக்குமாருக்கு ஒரு புதிய வீட்டை அதே இடத்தில் கட்டிக் கொடுத்தனர்.

    அந்த புதிய வீட்டை நண்பர்கள் திறந்து வைத்து அதன் சாவியை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    கொரோனா ஊரடங்கில் பழைய நண்பரை சந்தித்ததிலும், புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்-அப் குழுவாலும் ஆட்டோ டிரைவருக்கு விடிவு பிறந்ததை எண்ணி அவரது நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு அருங்காட்சியகங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டன. அதன்படி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    கைகளை கழுவ கிருமி நாசினி வழங்கப்படுகிறது. மேலும் அருங்காட்சியகத்திற்குள் உள்ளதை பொதுமக்கள் பார்வையிட சமூக இடைவெளி விட்டு நிற்கும் அளவிற்கு தரையில் வட்டம் வரையப்பட்டுள்ளது. பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அருங்காட்சியகத்தை பொதுமக்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அரசு அருங்காட்சியகத்திற்கு விடுமுறையாகும். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.

    அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
    தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள சுதந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதப்பன் (வயது 60). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக வயல் சுதந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இவருடைய வயலை அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான பாலசுப்பிரமணியன் என்பவர் மற்றொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதப்பன், அவரது மகன் வடிவேல் (35) ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பாலசுப்பிரமணியன், அவரது மனைவி செல்லக்கிளி உள்பட 7 பேர் சேர்ந்து வடிவேல், வரதப்பன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்ற கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தென்னகர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 50). கூலி தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று நரங்கியப்பட்டு வேம்பையன் கோவில் அருகே இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதியினர் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரெத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×