என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அரிமளம் அருகே கணவன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி அந்தரி (வயது 48). இவருக்கு சொந்தமான வீட்டிற்கு எதிரே உள்ள இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன்கள் வேலுச்சாமி, ராஜா மற்றும் ராஜா மகன் சேகர் ஆகியோர் முள்வேலி அமைத்துள்ளனர். 

    இதையடுத்து அந்தரி அங்கு சென்று ஏன் இங்கே முள் வேலி அமைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வேலுச்சாமி, ராஜா, சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்தரியை கம்பால் தாக்கி அவருடைய கணவரை கன்னத்தில் அறைந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து அந்தரி கே. புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.
    வடகாடு;

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள மாங்காட்டை சேர்ந்தவர்கள் ரகு-விஜயலட்சுமி. கூலி தொழிலாளிகளான இவர்களது மகள் காயத்தரி. இவர் மாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். இவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தேர்வானார். 

    இவருக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. கூலி தொழிலாளிகளான இவர்களது பெற்றோர்களால் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கேட்கும் தொகையை உரிய காலத்தில் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக பலரிடமும் கூறி வந்தனர். 

    இந்நிலையில், இத்தகைய மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்து தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் நேற்று காயத்தரி பிறந்த நாளையொட்டி இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பிறந்த நாளை கொண்டாடி தங்களது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மச்சுவாடியில் பேன்சி கடையின் உரிமையாளரான மூதாட்டியின் 12 பவுன் தங்கச்சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை;

    புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருபவர் கல்யாணி (வயது 65). இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் தொப்பியும் அணிந்திருந்துள்ளார். அப்போது கடையில் பொருள் வாங்குவது போல கல்யாணியிடம் பேச்சுகொடுத்துள்ளனர். அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பார்த்த மர்மநபர்கள் 2 பேரும், அவரிடம் சங்கிலியை இதுபோன்று அணியாதீர்கள், கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். அவர்களது பேச்சை கேட்ட கல்யாணியும் 12 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி மணி பர்சில் வைத்துள்ளார். அப்போது அதனை வாங்கி பாதுகாப்பாக தாள்களை சுற்றி வைக்கும்படி கூறி, அந்த மணிபர்சை, கடையின் பெட்டியில் வைப்பது போல நாடகமாடி மர்மநபர்கள் திருடிவிட்டனர். மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு மணிபர்சை பார்த்த போது அதில் நகைகள் இல்லாததை கண்டு கல்யாணி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் முகம் தெரியவில்லை. அவர்களது மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது அது திருட்டு வாகனம் என தெரியவந்தது. இந்த நிலையில் மர்மநபர்கள் 2 பேரும் இதேபோல ஊர், ஊராக தொடர்ந்து கைவரிசையை காட்டி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இதே நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை அருகே தொழிலதிபரிடம் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டு, இடைத்தரகரையும் கைது செய்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வேலூர் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ஹாஜீமுகமது(வயது 32). சமையல் கலைஞர். இவரது மனைவி ஆமீனாபேகம்(26). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண், 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆமீனாபேகத்திற்கு 4-வதாக பெண்குழந்தை பிறந்தது. இவர்களின் வறுமையை அறிந்த அதே பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கண்ணன்(58) என்பவர் இவர்களிடம் நீங்கள் வறுமையில் உள்ளீர்கள், ஆதலால் குழந்தையை உங்களால் வளர்க்க இயலாது. எனவே குழந்தை இல்லாதவர்களிடம், குழந்தையை விற்று விடலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கண்ணன், ஆமீனாபேகத்தையும், குழந்தையையும் காரில் அழைத்துக்கொண்டு ஈரோடு அருகே உள்ள சித்தோடுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் பழக்கத்தில் இருந்த புவனா(36) என்பவருடன் சேர்ந்து ஆமீனாபேகத்தை காரிலேயே இருக்க வைத்துவிட்டு, குழந்தையை மட்டும் எடுத்து சென்றார். பின்னர் குழந்தையை ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்த புவனா, கண்ணன் ஆகிய இருவரும் ஆமீனாபேகத்திடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தனர். பின்னர் ஆமீனாபேகம், கண்ணன் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    இதைதொடர்ந்து குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக கடந்த 19-ந் தேதி புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர், ஆமீனாபேகத்தை அழைத்துக்கொண்டு விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை மீட்டு தருமாறு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் குழந்தையையும், இடைத்தரகரான கண்ணனையும் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விராலிமலை அருகே உள்ள இனாம் குளத்தூர் ரெயில்வேகேட் அருகே வைத்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவை சேர்ந்த தொழிலதிபரான சின்னதம்பி கவுண்டர் மகன் சிவராஜ்(42) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை விற்றதாகவும், அதில் ரூ.1 லட்சத்தை மட்டும் ஆமீனாபேகத்திடம் கொடுத்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவிநாசிக்கு சென்று குழந்தையை மீட்ட போலீசார் நேற்று மாலை சைல்டு லைன் அமைப்பினர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள புவனாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கீரனூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள மோசகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38), விவசாயி. வயிற்று வலியால் அவதி அடைந்து அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகா முல்லையூர் வல்லக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் பெத்தையா. இவரது மனைவி திம்மாயி (வயது 70). இவர் நேற்று விராலிமலைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குற்ச்சிப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது மார்த்தாண்டத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் விராலிமலை போலீசார் காரை ஓட்டி வந்த சென்னை ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி சுப்புலெட்சுமி (45) மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அம்பலகாரர் தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 35). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே இரும்பு துண்டு விழுந்து தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பிராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாகாளி (வயது 50). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

    அப்போது கிரேனில் இரும்பு தகடை தூக்கும் போது எதிர்பாராத விதமாக, அது மாகாளியின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 66). இவர் அறந்தாங்கி அருகே கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் கருப்பையாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராத தொகையாக ரூ.10 ஆயிரமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து கருப்பையாவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.3½ லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அங்கவி வாதாடினார்.

    இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் பாராட்டினார்.
    அறந்தாங்கி அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கடையாத்துப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் மெய்ஞானம். துபாயில் வேலை பார்த்து வரும் இவர், தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி சாத்தாயி(வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். சாத்தாயி, நெல் விவசாயம் செய்திருந்தார். நெல்லுக்கு இன்சூரன்ஸ் செய்யச்சொல்லி மணிகண்டனிடம், சாத்தாயி கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன், எனக்கு ஆன்-லைன் வகுப்பு உள்ளது. 

    பிறகு செய்கிறேன் என கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தாய்க் கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சாத்தாயி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மணிகண்டன் ஓடிச் சென்று தீயை அணைத்தார். இருந்தாலும் சாத்தாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாத்தாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம்பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார். 11 மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்கு தேவையான காசோலையை, தனது சொந்த பணத்தில் இருந்து அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பாராட்டுவதாக கூறினார்.
    மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் இளமாறன், நகரத் தலைவர் விக்கி, செயலாளர் பாபு, பொருளாளர் ஏ.டேவிட் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ×