என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

    கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை, அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது. அப்படித் தடை உள்ள நிலையில் தி.மு.க. பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான்.

    கொரோனா காலத்திலும் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போது வீட்டிலேயே முடங்கி இருந்துவிட்டு தற்போது தி.மு.க.வினர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருவது அரசியல் ஆதாயத்திற்காவே. அது மக்கள் மத்தியில் எடுபடாது. தேர்தலை எப்போது, எப்படி சந்திப்பது என்பது எங்களுக்கு தெரியும்.

    திரையரங்குகள் திறக்கப்படாத நேரத்தில் சூரரை போற்று போன்ற படங்கள் ஒடிடியில் திரையிடப்பட்டது. தற்போது திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதனை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    ரஜினிகாந்த் தனது மன்றத்தினரை சந்திப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினி தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதில் சிறப்பம்சம் ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது.

    அ.தி.மு.க. மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். எப்போதும் கட்டுக்கோப்பாக தான் உள்ளோம். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அ.தி.மு.க.வில் இருக்காது என தெரிவித்தார்.
    அரிமளத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர்-மாமனார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம் கே.ராயவரம் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் யோக பிரியா. இவருக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரவிந்தன் தொழில் செய்வதற்காக ரூ.10 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கி வருமாறு யோகபிரியாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம். 

    இதனையடுத்து யோகபிரியாவின் தந்தை 15 பவுன் நகை கொடுத்து மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அரவிந்தன் வேறுஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு யோக பிரியாவை மீண்டும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினராம். இதனால் மனவேதனை அடைந்த யோக பிரியா தந்தை வீட்டில் உள்ள குளியலறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தி யோகாபிரியாவின் கணவர் அரவிந்தன், மாமனார் செல்வமணி, மாமியார் ரேணுகாதேவி, நாத்தனார் சத்யபிரியா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மீன்சுருட்டி அருகே கிடைக்கும் வருமானத்தில் கணவர் மது அருந்தி விட்டு வந்தால் மனம் உடைந்த கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சுந்தரேசன்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரியா(வயது 22). பி.எஸ்சி நர்சிங் முடித்த இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு மெயின் ரோடு தெருவை சேர்ந்த அம்பலவாணன் மகன் பிரபாகரனுக்கும், கடந்த ஜனவரி 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 

    பிரியா தற்போது கர்ப்பமாக இருந்தார். பிரபாகரன் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர் கிடைத்த வருமானத்தில் மது அருந்தி விட்டு வருவாராம். இதனை பிரியா கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் தொடர்ந்து மது அருந்தி விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த பிரியா கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். 

    இதுகுறித்து பிரியாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை நடத்தி வருகிறார். பிரியாவிற்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் மேற்கு வங்காளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேய்யும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    அன்னவாசல்:

    மேற்கு வங்காளம் சிலிகுடி பகுதியை சேர்ந்தவர் சுமன். இவரது மனைவி ஜர்னா (வயது 26). இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜர்னாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அவரது கணவர் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜர்னாவை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் அன்னவாசல் அருகே உள்ள திருவேங்கைவாசல் என்னும் இடத்தில் சென்றபோது ஜர்னாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து தாய் ஜர்னா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தாயும், சேய்யும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    தினத்தந்தி செய்தி எதிரொலியாக அன்னவாசல் அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டன.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு பின்னர் எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்து ஒரு மாதகாலமாக அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல்களையும், தற்போது கொள்முதல் செய்த நெல்களையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிலேயே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

    தற்பொழுது அன்னவாசல் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த மழையில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை சுற்றிலும் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதில் சில மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மேலும் வீணாவதற்கு முன்பு அதை எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். இதுகுறித்து கடந்த வாரம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    புதுக்கோட்டையில் கடன் தொகையை திருப்பி தராதவரை காரில் கடத்தி சென்று மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27). இவர் திருப்பூரில் வேலைபார்த்து வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூரை சேர்ந்த நாகராஜ் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகராஜிடம் அய்யப்பன் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

    அதனை அவர் திருப்பி செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அய்யப்பனையும், அவரது உறவினரான சிவக்குமாரையும், நாகராஜ் மற்றும் அவரது உறவினர் பாலசுப்பிரமணியன் (34) ஆகியோர் புதுக்கோட்டையில் இருந்து காரில் கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அய்யப்பனிடம் கடன் தொகையை கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இது தொடர்பான தகவல் அறிந்த சிவக்குமாரின் மனைவி விஜயலட்சுமி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அய்யப்பன், சிவக்குமார் ஆகியோரை மீட்டனர். கடத்தி சென்ற நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை சன்னதி தெருவை சேர்ந்தவர் விவேகானந்தம். இவரது மகன் காத்தவராயன்(வயது 24). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் விராலிமலை கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபோது எதிரே சிமெண்டு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த காத்தவராயனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
    விராலிமலை:

    மதுரை மாவட்டம், பனையூரை சேர்ந்த பழனி மகன் பிரபு (வயது 36), மதுரை அய்யனார் புரத்தை சேர்ந்த சிவக்குமார் (44), சந்திரன் மகன் பிரபு (38), மோகன் (58) மற்றும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் எற்கலை வெள்ளூரை சேர்ந்த மணிகண்டன் (45) ஆகிய 5 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சந்திரன் மகன் பிரபு ஓட்டினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள இராசநாயக்கன்பட்டி சுங்கச்சாவடி அருகே கார் சென்றபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரில் இருந்த மணிகண்டன், பழனி மகன் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர்.

    மேலும் காரில் இருந்த சிவக்குமார், சந்திரன் மகன் பிரபு, மோகன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன், பிரபு ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செபஸ்தியான் ரவி மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்த ராமன் (வயது45), வைத்தியலிங்கம் (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    அரிமளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என்பவரை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டையில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை;

    தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் பசுபதிபாண்டியன் கூட்டமைப்பு சார்பில் பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க கோரி புதுக்கோட்டையில் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்ய ஏராளமான போலீசார் நேற்று காலை அந்த ஓட்டல் முன்பு குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஓட்டல் முன்பு அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் கொடியுடன் திரண்டனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு செல்ல முயன்ற பார்வதி சண்முகசாமியிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினர். இருப்பினும் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் கூறினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு சென்ற அவரையும், அமைப்பு நிர்வாகிகளையும் ஓட்டல் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
    ×