என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவிகள் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கே.வி.எஸ்.தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சுவேதா (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஆலங்குடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் காயப்போட்டு இருந்த துணிகளை சுவேதா எடுக்க முயன்றார். அப்போது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் அவரது உடல் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறி துடித்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட் டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல் ஆலங்குடியை அடுத்த நம்பன்பட்டியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். இவருடைய மகள் அஞ்சலி (17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில், அந்த பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் அஞ்சலி வீட்டின் பக்கம் மின்கம்பத்தின் அருகில் உள்ள எர்த் கம்பியை தெரியாமல் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அதில் இருந்து வந்த மின்சாரம் அஞ்சலியின் உடலில் பாய்ந்தது. இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆலங்குடி பகுதியில் மழைக்கு 2 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புரெவி புயலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை நகராட்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர், வரத்து வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய், காட்டுப்புதுக்குளம் வரத்துவாரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி அதிகப்படுத்த பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தேவையான திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களிலுள்ள பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரெவி புயல் பாதிப்பு குறித்து மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு மூலம் வழங்கப்படும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் தற்பொழுது மழைக்காரணமாக சிறியளவில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலுள்ள முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தற்பொழுது பாதுகாப்பு மையங்களுக்கு வருகின்றனர். இந்த மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தரைப்பாலங்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஏரி குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே உள்ள ஆயிரம் மணல் மூட்டைகளுடன் தற்பொழுது கூடுதலாகவும், மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையை எதிர்க்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322 222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ரேஷன்கடை உதவியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைமணி மகன் குமார்(வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று திருமயம் கடைவீதிக்கு சைக்கிளில் வந்த அவர் அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

    காரைக்குடி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இலுப்பூர், அரிமளம் பகுதிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலின் போது போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு கிடந்ததால் விவசாயிகள் கவலைபட்டு வந்தனர். இந்நிலையில் புரெவி புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை இடை விடாது பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டையின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. வடக்கு ராஜ வீதி தி.மு.க. அலுவலகம் முன்பாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேல ராஜ வீதி, பழனியப்பா முக்கம் அருகேயும் வெள்ளம் போல் மழை நீர் செல்கிறது. பெரியார்நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் நகராட்சி பணியாளர்கள் மழை நீர் தேங்காதபடி அடைத்திருந்த குப்பைகளை அகற்றி மழைநீரை வெளியேற்றினர். மேலும் குடியிருப்பு பகுதியான கம்பன் நகரில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் சூழ்ந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தாடின. புதுக்கோட்டை நகரின் முக்கிய கடைவீதி பகுதிகளான தெற்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

    கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படாததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்படாததாலும், ஆக்கிரமிப்பாலும் கறம்பக்குடி பெரியகுளம், குமரகுளம், மாங்கொட்டைகுளம், புதுக்குளம், ராட்டினா குளம் உள்ளிட்ட பாசன குளங்களுக்கு செல்லும் தண்ணீர் அங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகளும், வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றார்.

    இதற்கிடையே நேற்று அதிகாலை பெய்த கனமழையில் கறம்பக்குடி பெரியகடைவீதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 50) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இதில் வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசன், அவரது மனைவி விஜயராணி, மகன் பாரதி, மகள் வைதேகி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

    இலுப்பூர் அன்னவாசல், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழையால் சாலைகளிலும் தெருகளிலும் தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகளும், கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இலுப்பூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சந்தியாகு என்பவர் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லதாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இலுப்பூர், அன்னவாசல், புதுக்கோட்டை சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்களில் பயணிகள் இல்லாமலே சென்றது. இலுப்பூர் நவம்பட்டியை சேர்ந்த காலனி வீட்டில் வசிப்பவர் ராஜூ. இவரது வீட்டின் மேற்கூறையில் இருந்த சிமெண்டு பூச்சுக்கள் திடிரென விழுந்தது. அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் தெருவில் அடைத்திருந்த மழை தண்ணீரை மழையை பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவரே கால்வாய் அமைத்து வெளியேற்றினார். இதனை அப்பகுதி பொதுமக்கள் பராட்டினார்.

    அன்னவாசலில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் நேற்று பெய்த மழையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கிறது.

    வடகாடு, ஆலங்குடி, கீரமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

    திருமயத்தில் கன மழை பெய்ததையடுத்து திருமயம்-பொன்னமராவதி சாலை பெருந்துறை பஸ் நிறுத்தத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்து விழுந்தது. போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் அங்கு வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

    கோட்டைப்பட்டினம் கடலோர பகுதியில் தொடர் மழை பெய்தது. இப்பகுதிகளில் மழையின் வேகம் அதிகமானதால் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கடல்நீர் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சில மண் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி காணப்படுகிறது. மீமிசல், அருகே உள்ள தாளானூர், முத்துக்குடா கிராமங்களில் உள்ள 2 வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி தவமணி. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தவமணியின் ஒருபக்க வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்த அரிமளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிஷாராணி, ஆணையர் ராமச்சந்திரன் ஆகியோர் வீட்டில் இருந்தவர்களிடம் இங்கே தங்கக்கூடாது பள்ளியில் சென்று தங்குங்கள் எனக்கூறினார். அதிகாரிகளை சந்தித்து தவமணி, அவருடைய மகன் சுப்பிரமணி மற்றும் மருமகள் நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. உடனடியாக அவர்கள் ஆயிங்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோன்று சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் அண்ணா நகர் தெருவில் வசித்து வரும் ராமன். முடிதிருத்தும் தொழிலாளி. வீட்டில் ராமன் அவருடைய மனைவி பஞ்சு, மருமகன் அங்கு ராஜ், மகள் சாந்தி ஆகியோர் வீட்டில் இருக்கும்பொழுது திடீரென ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தாஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் பொன்-புதுப்பட்டியிலிருந்து வேகுப்பட்டி செல்லும் ரோட்டில் மாம்பழத்தான் ஊரணி அருகே காற்றுக்கு நடு ரோட்டில் கருவேல மரம், முருங்கை மரம் விழுந்ததை தூய்மை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

    கறம்பக்குடி கச்சேரி வீதி, காட்டாத்தி, கரும்புலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. கந்தர்வகோட்டை திருச்சி சாலைக்கு கிழக்கு, பெருமாள் கோவில் வீதிக்கு தெற்கு மற்றும் வடகாடு காமராஜபுரம், மட்டையன்பட்டி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அறந்தாங்கி பகுதியில் பலத்த மழையால் 2 வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்தன.
    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட கத்தலூர் ஊராட்சி ரோட்டாத்துப்பட்டி மற்றும் குளத்தாத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் மின் மோட்டார் சரி செய்யப்படவில்லை. இதனால், கடந்த பல நாட்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு அருகில் உள்ள கிணற்றிலும், குளத்திலும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை(அதாவது இன்று) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதனை ஏற்று, குடிநீர் பிரச்சினை மற்றும் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    கோட்டைப்பட்டினத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் உமர். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம்போல, நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

    இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு, உமர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும், கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது மர்ம நபர்கள் 2 பேர் செல்போன்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோமாபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர் அணி மாநில தலைவராகவும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராகவும் உள்ளார். ராஜீவ் காந்தியின் தந்தையின் விளைநிலத்தை அவரும், அவரது சகோதரரும் பாகப்பிரிவினை செய்து கொண்டனர்.

    பாகப்பிரிவினை செய்த நிலத்திற்கு பட்டா கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி விண்ணப்பித்தார். அப்போது பட்டா கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இந்த நிலையில் கோமாபுரம் வட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெரோன் (30), ராஜீவ் காந்தியை அணுகி பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 7 சர்வே எண்ணுக்குரிய பட்டாவுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.35 ஆயிரம் தர வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக ஜெரோன் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் லஞ்ச கொடுக்க விரும்பாத ராஜீவ்காந்தி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கொடுப்பதற்காக ஜெரோனை, ராஜீவ் காந்தி தொடர்பு கொண்டார். அப்போது கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு வருமாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜீவ் காந்தி நேற்று பகலில் அங்கு சென்றார். அங்கு அலுவலகத்தின் முதல் தளத்திற்கு செல்லும் படியில் ரூ.15 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெரோனிடம் ராஜீவ்காந்தி கொடுத்தார். அதனை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, துணை தாசில்தார் செல்வகணபதி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு செல்வகணபதியுடன், நில அளவையர் முத்துவும் உடன் இருந்தார்.

    அப்போது நாம் கேட்ட தொகையை கொடுத்துவிட்டார், பட்டா மாறுதல் செய்து கொடுத்துவிடும்படி அவர்களிடம், ஜெரோன் கூறியிருக்கிறார். அப்போது பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என ஜெரோனிடம் செல்வகணபதியும், முத்துவும் கூறியுள்ளனர். இதற்கிடையில் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜெரோன், செல்வகணபதி, முத்து ஆகிய 3 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும் ஜெரோன் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதன்பின் துணை தாசில்தார் அமர்ந்திருந்த இருக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தாசில்தார் அலுவலகத்திற்கு மாலை 3 மணி அளவில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மற்றும் சோதனையை முடித்துக்கொண்டு இரவு 7.45 மணிக்கு வெளியே வந்தனர். பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைதான சம்பவம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அன்னவாசலில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி- நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள விளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலகுருமூர்த்தி(வயது 39). இவர் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வணிக வளாகத்தில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் விற்பனை முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு பாலகுருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த தங்கம்- வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாலகுருமூர்த்தி அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இருந்தது. மோப்பநாய் கடையில் இருந்து சித்தன்னவாசல் சாலை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தது. இந்த சம்பவத்தில் 8 பவுன் நகை, 320 கிராம் வெள்ளி பொருட்கள், நகையை எடைபோடும் தராசு, எல்.இ.டி. டி.வி உள்ளிட்டவைகள் கொள்ளை போயின. இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நாகுடி வெள்ளாற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தியதில் கீழ்குடியை சேர்ந்த கூத்தையா (வயது 40), வேலிவயலை சேர்ந்த முனியாண்டி (38) ஆகியோர் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.

    அவர்கள் இருவரையும் பிடித்து நாகுடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டையில் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் இவை மூன்றும் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது.


    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் மடைதிறந்த வெள்ளம் போல சுற்றத் தொடங்கினர்.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றும் வெகுவாக குறைந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் பலர் முககவசம் அணியாமல் வெளியே வரத் தொடங்கினர். இதனால், அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அதிகப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே நின்று அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்களில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த ஒரு சிலர் இரு சக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு சென்றனர். சிலர் கொரோனா தான் முடிந்துவிட்டதே பிறகு ஏன்? அபராதம் விதிக்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக முடியவில்லை, அதுவரை அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மாத்தூர், மண்டையூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூர் கடைவீதியில் மளிகை கடை வைத்திருக்கும் சந்தானம் (வயது 52) மற்றும் மாத்தூர் ரெயில்வேகேட் அருகே மளிகை கடை வைத்திருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (43) ஆகிய இருவரும் தங்களது பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்டையூரில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (52) என்பவர் புகையிலை பொருட்களை விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    கோட்டைப்பட்டினம்:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாரேனும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தால் அவர்களுக்கு உடனே தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    ×