என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தொடர்மழையால் சோளம்-நெற்பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால், இப்பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, பரமசிவம் உள்ளிட்ட பலரது வயலில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே மழையினால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் ஆதனக்கோட்டையை அடுத்த பெருங்களூர் அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தில் பூமி என்பவருக்கு சொந்தமான வயலில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இந்த பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கறம்பக்குடிஅருகே உள்ள புதுப்பட்டியில் விவசாயி ஒருவரின் வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி வீணானது.

    இதேபோல் அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயத்துக்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. தற்போது, தொடர் மழைபெய்து வருவதால் கால்நடைகளை மேய்ச்சலுக்க அழைத்து செல்ல முடியாதநிலையை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கால்நடை வளர்க்கும் ஆண்டி கூறுகையில், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் வீடுகளிலும், குடிசையிலும் கட்டி வைத்துள்ளோம். எனவே அரசு மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். மேலும் கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு வருவதால்கால்நடை முகாம் நடத்த வேண்டும் என்றார்.

    திருவரங்குளம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருவரங்குளம், வேப்பம்பட்டி, பூவரசகுடி, வள்ளகிராகோட்டை, திருவுடையார்பட்டி, கொத்த கோட்டை, மழவராயன்பட்டி, மாஞ்ஜான்விடுதி, காயாம்பட்டி, கல்லுபள்ளம், மாங்கநாம்பட்டி, தேத்தாம்பட்டி, திருக்கட்டளை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் வீடுகளில் கொட்டகை வசதியில்லாததால் ஆடுகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்டு கொட்டகை அமைக்க விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடகாடு மற்றும் மாங்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோளப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் இதனை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. அத்துடன் சோளப்பயிர்களில் உள்ள கதிர்கள் முளைத்து வருவதால் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று புற நோயாளிகளுக்கு வழங்கப்பட அனுமதி சீட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதை அறிந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சீட்டை பார்வையிட்டனர். அதில் சீட்டின் பின்புறம் இரட்டை இலை சின்னம் இருந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் கட்சி நிர்வாகிகளுடன் வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமதுவிடம் புகார் தெரிவித்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலின்போது, பொது மக்களுக்கு வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஊழியர்கள் தவறுதலாக அனுமதிச்சீட்டாக பயன்படுத்தி நோயாளிகளுக்கு வழங்கி விட்டனர். அவ்வாறு அனுமதி சீட்டு வழங்கியது உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது என்றனர்.

    சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் புறநோயாளிகளுக்கான அனுமதி சீட்டை முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வினியோகிக்காததே இதுபோன்ற தவறுக்கு காரணம் என கூறிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், இதுதொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தொடர் மழையினால் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அன்னவாசல், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது.

    இதனால், பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர்.

    மழையினால் நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    4 தலைமுறை கண்ட பொன்னம்மாள் பாட்டிக்கு அவரது உறவினர்கள் புடைசூழ 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அண வயல் ஜீவா நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி மனைவி பொன்னம்மாள். 105 வயதை எட்டியுள்ள இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த பொன்னம்மாள், தனது மகன்களுக்கு உதவியாக விளை நிலங்களுக்கு சென்று தன்னால் முடிந்த விவசாய பணிகளை செய்து வருகிறார். தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என 20-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    4-வது தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு அவரது உறவினர்கள் புடைசூழ 105-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் அச்சடித்து கொண்டாடப்பட்டது. 100-க் கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழாவில் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் மூதாட்டியிடம் ஆசி பெற்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

    இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 14 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று வீடு திரும்பினர்.

    அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 948 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருமயம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரெயில் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் மனைவி சாந்தி. இவர் மாடி வீட்டின் கீழ் பகுதியிலும், அண்ணன் மோகன் சிங் மாடியிலும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர். இதையடுத்து நேற்று இரவு மோகன்சிங் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன்பக்க கதைவை திறந்த போது சாந்தி வீட்டின் பின்பக்கம் கதவு உடைந்து திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வீட்டின் உரிமையாளர் சாந்தி வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த பிறகு தான் திருட்டு போன பொருட்கள் குறித்து தெரியவரும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்து வேம்பையன் (வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றார். தற்போது அவருக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சரியான வேலை இல்லை.

    இதனால் மன உளைச்சலுடன் இருந்து உள்ளார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி உள்ளார். மேலும் அவருடைய குழந்தையை பார்க்க முடியாத ஆதங்கமும் இருந்துள்ளது. இதை பற்றி சிங்கப்பூரில் உடன் வேலை பார்த்த நண்பர்களிடம் புலம்பியபடி இருந்தாராம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துவேம்பையன் சிங்கப்பூரில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், முத்துவேம்பையன் குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முத்து வேம்பையன் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குடும்ப கஷ்டம் போக்க கர்ப்பிணி மனைவியை விட்டு சிங்கப்பூர் சென்றவர், அவருக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோட்டைப்பட்டினம் அருகே ரூ.2 லட்சம் செல்போன்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் உமர் (வயது 24). இவரது கடையில் கடந்த 2-ந்தேதி ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனையடுத்து இவர்களை பிடிக்க கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல் ஞானம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு ஆசாமிகள் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 5 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை மூர்த்தி (32), ராமேசுவரம் பகுதியை சேர்ந்த கோட்டைமணி (45), பூம்பூகார் பகுதியை சேர்ந்த அகத்தியன் (22), திருகடையூர் பகுதியை சேர்ந்த ராவணன் (24) ,தொண்டி புதுக்குடியை சேர்ந்த புரட்சிக் கண்ணன் (35) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து செல்போன்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் அறந்தாங்கி கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போன் திருட்டு கும்பலை பிடித்த போலீசாருக்கு வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    அறந்தாங்கி அருகே மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், “மாவட்டத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையினால் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 20 இடங்களில் மின் தடை ஏற்பட்டதை உடனடியாக சரிசெய்யப்பட்டன. 

    மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த 118 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், மழையினால் சிறு காயமடைந்த 2 பேருக்கும், இறந்த 12 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இதேபோல மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழையினால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது” என்றார். அப்போது சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன், மின்சார வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் மார்டின் லூதர் கிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    ‘புரெவி’ புயல் எதிரொலியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சராசரியாக 7.75 செ.மீ. அளவு பதிவாகி இருந்து.
    புதுக்கோட்டை:

    ‘புரெவி’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்து கொட்டித்தீர்த்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் பத்திரமாக கரைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயல் வலுவிழந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. 

    புதுக்கோட்டையில் நேற்று பகலிலும் மழை தூறியபடி இருந்தது. சாலைகளில் நேற்று முன்தினம் ஓடிய மழைநீர் வடிந்திருந்தன. ஒரு சில தாழ்வான இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி நின்றது. பல்லவன் குளத்தில் நீர் நிரம்பி காணப்பட்டது. சாந்தநாத சாமி கோவில் முன்பு உள்ள படித்துறை வழியாக குளத்தில் இருந்து நீர் வெளியேறி சென்றது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலையோர வியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்தனர். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சாலையில் மக்கள் குடையை பிடித்தப்படியும், மழை ‘கோட்’ அணிந்து சென்றவர்களையும் காணமுடிந்தது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட் டை-51.60, பெருங்களூர்- 76.20, புதுக்கோட்டை-47.50, ஆலங்குடி-116.80, கந்தர்வகோட்டை-88, கறம்பக்குடி-174.80, மழையூர்-175, கீழணை-64.80, திருமயம்-67, அரிமளம்-61.20, அறந்தாங்கி-49.80, ஆயிங்குடி-153.20, நாகுடி-63.20, மீமிசல்-41.50, ஆவுடையார்கோவில்-36.50, மணமேல்குடி-80.10, இலுப்பூர்-62, குடுமியான்மலை-57, அன்னவாசல்-79, விராலிமலை-62.20, உடையாளிப்பட்டி-85.40, கீரனூர்-83.50, பொன்னமராவதி-42.80, காரையூர்-42.40. மாவட்டத்தில் மொத்தம் 24 இடங்களில் மழைப்பதிவாகி இருந்தது. மொத்தம் 1, 861.50 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. சராசரியாக 77.56 மி.மீட்டர் ஆகும். சென்டி மீட்டர் கணக்கில் 7.75 அளவு மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    புதுக்கோட்டை அருகே நடந்து சென்றவரிடம் தங்கச்சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது38) . இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி சாலையில் நடந்து சென்றார். அப்போது 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். உடனே சுதாரித்த பாண்டியன், சங்கிலியை இறுகப்பிடித்துக்கொண்டார். அப்போது சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோட முயற்சித்தனர். இதில் ஒருவரை பாண்டியன் விரட்டிச்சென்று பிடித்து பொதுமக்கள் உதவியுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் வல்லாத்திராக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது (40) என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அடப்பனவயலை சேர்ந்த ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே வாகன விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் காசிராமன் (வயது 63). இவர் அழகுநிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மொபட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட காசிராமன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து காசிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×