search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman dies"

    வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்கு திரும்பிய கர்ப்பிணி விபத்தில் பலியானார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
    பல்லடம்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (30). கோவை பீளமேட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் உடுமலை பூலாங்கிணறை சேர்ந்த பி.காம். பட்டதாரியான தமிழ்செல்விக்கும் (22) கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    தமிழ்செல்வி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையொட்டி அவருக்கு நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    வளைகாப்பு முடிந்ததும் லோகேஸ்வரன், அவரது மனைவி தமிழ்செல்வி, அவரது பெற்றோர் சேகர், ஜோதிமணி ஆகியோர் காரில் பூலாங்கிணறுக்கு புறப்பட்டனர்.

    காரை லோகேஸ்வரன் ஓட்டி சென்றார். பல்லடம் அருகே உள்ள அரசங்காடு என்ற பகுதியில் சென்ற போது எதிரே ஒரு கார் வந்தது. திடீரென இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் காரை ஓட்டி சென்ற லோகேஸ்வரன் அவரது மனைவி தமிழ் செல்வி, காரில் இருந்த சேகர், ஜோதிமணி ஆகியோரும் மற்றொரு காரில் வந்த மணிகண்டன், தண்டபாணி, சாந்தாமணி, மனோன்மணி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    அவர்கள் 8 பேரையும் பல்லடம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே நிறைமாத கர்ப்பிணி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

    படுகாயம் அடைந்த மற்ற 7 பேரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் தனது மனைவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை பலியான தகவல் கிடைத்து லோகேஸ்வரன் கதறி துடித்தார். அவரது உறவினர்களும், தமிழ்செல்வி உறவினர்களும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுத வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியே சோகத்துடன் காணப்பட்டது.
    தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தினி (வயது 26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சாந்தினி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சாந்தினிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரமாக முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாந்தினி சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். ஏற்கனவே முள்ளக்காடு பகுதியில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

    சுகாதார துறையினர் போதிய மருத்துவ வசதிகள் செய்யவில்லை என்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக சாந்தினியின் கணவர் முருகன் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் உடைந்து சாலையில் தேங்கி கிடக்கிறது. ஆங்காங்கே கழிவுநீரும் தேங்கியுள்ளன. சுகாதார நடவடிக்கைகள் சரியில்லை. எனது மனைவிக்கு காய்ச்சல் வந்தபோதே மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தேன். ஆனால் முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் எனது மனைவியை இழந்துவிட்டேன்’’ என கண்ணீருடன் கூறினார்.

    மேலும் இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இங்குள்ள சுகாதார நிலையத்தில் ஒருவர் மட்டுமே டாக்டர். மற்ற 3 பேர் பயிற்சி டாக்டர்கள். இங்கு காலையில் பரிசோதனைக்கு சென்றால் வெளியில் வர மதியம் ஆகிவிடுகிறது. எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்கவேண்டும் என்றனர்.

    இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியானதால் முள்ளக்காடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுகாதாரதுறையினர் தூத்துக்குடி பகுதி முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, முள்ளக்காட்டில் கர்ப்பிணி சாந்தினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார். அவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது? என்பது குறித்து விரிவாக விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே டெங்கு காய்ச்சலை தடுக்க தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு துறையினரும், தனியார் அமைப்புகளும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
    ×