என் மலர்tooltip icon

    நீலகிரி

    • அரசு பஸ்கள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும்.
    • பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிருங்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையால் 5 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்களில் விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

    தொடர்ந்து மழை மிரட்டி வரக்கூடிய சூழ்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மாவட்டத்தில் கனமழை பெய்கிறது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளைமலை என்ற இடத்தில் பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இருந்த போதிலும், தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதால் அந்த சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் மழை காரணமாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், அவலாஞ்சி, 9-வது மைல்கல் சூட்டிங் பாயிண்ட், ஊட்டி படகு இல்லம், ஊசிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் 2 நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம்-தவளைமலை பகுதியில் பெரிய பாறைகள், கற்கள் சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நடுவட்டம்-கூடலூர் சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அரசு பஸ்கள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும். சுற்றுலா வாகனங்கள் கூடலூர்-நடுவட்டம்-பைக்கார சாலைகள் வழியாக ஊட்டிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிருங்கள். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக சுற்றுலா தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்க தலைவர் பாரூக் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமே சுற்றுலா தொழிலை நம்பி தான் உள்ளது. விடுதிகள், காட்டேஜ்கள், சுற்றுலாவை நம்பி சிறு, சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் எண்ணற்ற தொழில் சுற்றுலாவை நம்பி நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏற்கனவே இ-பாஸ் உள்ளிட்ட நடைமுறையால் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. எந்த ஆண்டும் நீலகிரியில் மழைக்கு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதே கிடையாது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மழையால் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. மழையாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ள தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
    • போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுவதாக கூறப்பட்டு்ளது.

    மேலும், மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.
    • தேயிலை தோட்டத்திலிருந்து, சாலைக்கு எகிறி குதித்த தாய் புலியும், பின்னால் குட்டிகளும் சென்றன.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் வனத்தில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய ஒரு புலி கோத்தகிரி அடுத்த டி.மணிஹட்டி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அவை அங்குள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்த புலி பின்னர் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது.

    கிராமத்தில் குட்டிகளுடன் புலியின் நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து குட்டிகளுடன் உலாவரும் புலியை வனத்துறையினர் கண்காணித்து அடர்வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
    • ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன.

    ஊட்டி:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட்டுள்ளது.

    அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவை வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலை உள்பட பல்வேறு கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.

    அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது. கிண்ணக்கொரை பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், குந்தா, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை 67 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மரங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    பலத்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே மண்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதேபோல் இத்தலார்-பெம்பட்டி சாலையில் 100 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் வாகனம் மூலம் மண்சரிவை சீரமைத்தனர். பந்தலூர் நாயக்கன் சோலை, ஊட்டி மஞ்சனக்கொரை அன்பு நகர், சேரனூர், பிக்கட்டி பகுதிகளிலும் சாலையோரங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தேவாலா அட்டியில் கனமழையால் வேலு என்பவரின் வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டதால் வீடு அந்தரத்தில் தொங்குகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமான காரணத்தால் நஞ்சநாடு, கப்பத்தொரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    ஓடைகள் முழுவதும் நிரம்பி வெள்ளம், ஓடைகளையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இந்த பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்பட்டு இருந்தன.

    இந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன.

    குறிப்பாக முத்தொரை பாலடா பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பந்தலூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சாகுபடிக்கு தயாராக நின்ற 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

    கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள கில்லூர், தேவன் எஸ்டேட், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மரங்கள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    சேரனூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மீது ராட்சத மரம் விழுந்தது. இதனால் சேரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 கிராமங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. இதேபோல் தங்கநாடு தோட்டம், மட்டகண்டி, கோரகுந்தா பகுதிகளிலும் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி நகர பகுதியில் நேற்று முதல் இன்று வரை 2 நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளனர்.

    தொடர்ந்து இன்று 4-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
    • நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    குன்னூர்:

    சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தந்தாலும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீலகிரியில் குவியும் சுற்றுலாபயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு நடத்தப்பட்டு மலர்கண்காட்சி நிறைவடைந்தது.

    பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இன்று மாலை வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் இன்று கடைசி நாள் நடைபெற இருந்த பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை நடைபெற இருந்த பரிசளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கை இடையே, நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓவேலி பகுதிக்கு சென்றவர்கள் தர்மகிரி பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் சிக்கினர்.

    இந்த காரில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் ஆற்றின் நடுவே சிக்கியதும் அதில் இருந்தவர்கள் உடனடியாக கீழே குதித்து தப்பியதால் உயிர் பிழைத்துள்ளனர்.

    • சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.

    நீலகிரிக்கு நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

    அதன்படி, உதகையில் 2 நாட்கள் படகு சவாரி சேவையும், 3 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    மேலும், பைன் மரக்காடுகள், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கனிமழையின்போது மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
    • கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.

    ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.

    இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். 

    • நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.
    • அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் தொடங்கி முடிவடைந்துள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.

    கோடைவிழாவின் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடக்க உள்ளது. பழ கண்காட்சி நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.

    கண்காட்சி தொடங்க உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளில் பூங்கா நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு சிம்ஸ் பூங்கா உருவாகி 151-வது ஆண்டு என்பதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா நுழைவாயில் முன்பு 30 வகையான பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், சுற்றுலா தலங்களில் உள்ள காட்சிகளை பழங்கள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

    பூங்கா நுழைவாயில் உள்ளே சுமார் ஐந்து டன் எடையில் ஆன பழங்களை கொண்டு சுற்றுலா பகுதியில் உள்ள ரம்மியமான காட்சிகளை நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணைகளில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.

    3 நாள் நடைபெற உள்ள பழக்கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு நடவு செய்யப்பட்ட 3 லட்சம் மலர் செடிகள் அனைத்தும் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. 3 நாள் நடைபெற உள்ள பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் நாவில் உமிழ் நீர் சுரக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட வகையிலான பழ வகைகள் இடம்பெற உள்ளதால், கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    • பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
    • தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

    இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்களால் பொன்னியின் செல்வன் அரண்மனை, நுழைவுவாயில், கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னபறவை ரதம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது.

    மேலும் பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதில் 200 லில்லியம் மலர்கள், 100-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மலர் கண்காட்சி தொடங்கியதில் இருந்து கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன.
    • தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான காலநிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மதியம் 12 மணிக்கு தொடங்கிய கனமழை 2 மணி வரை கொட்டியது. ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் மத்திய பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    அதேபோல் ரெயில் நிலைய பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

    ரெயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் வெளியேறினர். ரெயில்வே பாலத்தில் பஸ்கள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்த பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் சாலையே தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்கியது.
    • வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், மேலும் எண்ணிக்கை அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுந்தோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன.

    பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களை கொண்டு 70 அடி நீளம், 20 அடி உயரத்தில் பிரமாண்ட நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ரோஜா, சாமந்தி, கார்னேசன் போன்ற 2 லட்சம் மலர்கள் மூலம் 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    8 அடி உயரம், 35 அடி நீளத்தில் 50 ஆயிரத்து 400 சாமந்தி மலர்கள் மூலம் அன்னபட்சி, 4 ஆயிரம் மலர்த்தொட்டிகள், 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா பூக்கள் மூலம் கல்லணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்கள் மூலம் பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசை கருவிகள், பீரங்கி, யானை, புலி போன்ற அலங்கார வடிவமைப்புகளும் உள்ளது.

    கண்காட்சி தொடங்கியதை அடுத்து ஊட்டி அரசு தாவிரவயில் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    ஊட்டி மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரத்து 585 பேர் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கிய நாளில் 14 ஆயிரத்து 5 பேரும், 2-வது நாளான நேற்று 16 ஆயிரத்து 580 பேரும் என 2 நாட்களில் 30 ஆயிரத்து 585 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

    வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், இந்த எண்ணிக்கை அதிகமாகும் என அவர்கள் தெரிவித்தனர். 

    ×