என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை படத்தில் காணலாம்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை 65-வது பழக்கண்காட்சி தொடக்கம்
- நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.
- அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் தொடங்கி முடிவடைந்துள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
கோடைவிழாவின் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடக்க உள்ளது. பழ கண்காட்சி நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.
கண்காட்சி தொடங்க உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளில் பூங்கா நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சிம்ஸ் பூங்கா உருவாகி 151-வது ஆண்டு என்பதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா நுழைவாயில் முன்பு 30 வகையான பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், சுற்றுலா தலங்களில் உள்ள காட்சிகளை பழங்கள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
பூங்கா நுழைவாயில் உள்ளே சுமார் ஐந்து டன் எடையில் ஆன பழங்களை கொண்டு சுற்றுலா பகுதியில் உள்ள ரம்மியமான காட்சிகளை நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணைகளில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
3 நாள் நடைபெற உள்ள பழக்கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதவிர பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு நடவு செய்யப்பட்ட 3 லட்சம் மலர் செடிகள் அனைத்தும் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. 3 நாள் நடைபெற உள்ள பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் நாவில் உமிழ் நீர் சுரக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட வகையிலான பழ வகைகள் இடம்பெற உள்ளதால், கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






