என் மலர்tooltip icon

    நீலகிரி

    மஞ்சூர் பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.
    மஞ்சூர்:

    மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. பச்சை தேயிலை விவசாயத்தை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தேயிலை செடிகளில் மகசூலும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி உள்ளது. காலை மற்றும் மாலை நேரத்தில் பனி சூழ்ந்து கடும் குளிரும் நிலவுவதால் இந்த கொப்புள நோய் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் சில இடங்களில் கொப்புள நோய் பரவலை தடுக்க மருந்து அடிக்கும் பணியும் நடந்து வருகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் 4,200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    ஆண்டுதோறும் டிசம்பர் 11-ந் தேதி சர்வதேச மலை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.

    தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த அடிப்படை தொழில்நுட்பங்களை அறிய ஆர்கானிக் நீல்கிரீஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தார். தொடர்ந்து 4 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயி விருதான ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள், ஒரு விவசாய குழுவுக்கு சிறந்த விவசாய குழு விருதான ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பேசினார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் இந்தியாவில் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது. இதன் வளத்தை பாதுகாக்க கிராமபுறங்களில் 21 வகையான 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மண் வளத்தை மேம்படுத்தி இயற்கை மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் நிலம் தயாரிப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை உள்ள அடிப்படை விவரங்களை இந்த புதிய செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல்போன் வைத்து உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

    நீலகிரியில் 4 ஆயிரத்து 800 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 70 ஆயிரம் விவசாயிகளும் இயற்கை வேளாண் விவசாயிகளாக மாற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், உதவி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    ஊட்டி அருகே கோரிசோலா அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த விஜயராஜன் என்பவரது மகன் டேனியல் (வயது 23). இவர் கடந்த ஓராண்டாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. 

    இதுகுறித்து பெற்றோர் மகனை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கோரிசோலா அணையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அணையில் குதித்து தற்கொலை செய்தது டேனியல் என்பது தெரியவந்தது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வலிப்பு நோய் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    கூடலூர்:

    மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக பல நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துயில் மேகம், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் காஞ்சனா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, பாசறை மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் மின்சார மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூடலூரில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் போட்டி போட்டு உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கூடலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி.யின் உருவ பொம்மையை பல இடங்களில் எரித்தனர். இதை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையிலான தி.மு.க.வினர் நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்த சமயத்தில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் முதல்-அமைச்சரின் உருவ பொம்மைக்கு தி.மு.க.வினர் தீ வைத்தனர். இதைக்கண்ட போலீசார் உடனடியாக ஓடிச்சென்று உருவ பொம்மையை பிடுங்கி தீயை அணைத்தனர்.

    பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ. திராவிட மணி, நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் புதிய பஸ் நிலையம் 5 முனை சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனுப்கான் தலைமையிலான அ.தி.மு.க.வினர் திரண்டனர். தொடர்ந்து ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்களை எழுப்பி, அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் ஓடிவந்து எரிந்துகொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். கூடலூரில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு உருவ பொம்மைகளை எரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் அ.தி.மு.க. நகர செயலாளர் டி.எல்.எஸ்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி உள்ளிட்ட பலர் ஆ.ராசாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லியாளம் தி.மு.க. நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஊட்டியில் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளை விமர்சித்து வரும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    குன்னூரில் சாந்தி ராமு எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆ.ராசா உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவரது உருவ பொம்மையை அ.தி.மு.க.வினரிடம் இருந்து பறித்தனர். ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றதை கண்டித்தும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் தி.மு.க.வினர் குன்னூர் வி.பி.தெருவில் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோரிசோலா அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த விஜயராஜன் என்பவரது மகன் டேனியல் (வயது 23). இவர் கடந்த ஓராண்டாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் மகனை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கோரிசோலா அணையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அணையில் குதித்து தற்கொலை செய்தது டேனியல் என்பது தெரியவந்தது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வலிப்பு நோய் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    ஊட்டி:

    தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள் கொரோனா காலத்தில் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    பொங்கல் போனஸ் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல நாட்கள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி காலத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு அதற்கான படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம், புயல், கொரோனா போன்ற இயற்கை இடர்பாடு பணிகளுக்கு இயற்கை இடர்பாடு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தியும், பணி மூப்பு 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் உத்தரவிட வேண்டும். 1.1.2003-ந் தேதிக்கு பின்னர் பணிக்கு வந்த அனைத்து கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    வருவாய் தாசில்தார்களால் கிராம உதவியாளர்கள் பணி நியமனம் செய்யும் நடைமுறையை அகற்றிவிட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலம் கிராம உதவியாளர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 20 சதவீதம் பதவி உயர்வு முழுமையாக கிடைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழிகாட்ட வேண்டும். வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கும் போது, பிறந்த தேதியை கணக்கில் கொண்டு வழங்கும் நிலை உள்ளது. இதை மாற்றி கிராம உதவியாளர்கள் பணியில் சேர்ந்த தேதியை கணக்கில் கொண்டு முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட வனப்பகுதியையொட்டியுள்ள பல பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடி அருகே சாமியார்மலை அடிவார வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட வனப்பகுதியையொட்டியுள்ள பல பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விவசாய தோட்டங்களில் உள்ள வாழை, தென்னை, பாக்கு மரம் மற்றும் காய்கறி பயிர்களை மிதித்தும், தின்றும் காட்டு யானைகள் நாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மழவன்சேரம்பாடி பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகள் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியன. இதில், காட்டுயானைகள் கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டின் அருகே நின்ற பாக்குமரங்களை முட்டி தள்ளியதில், மரம் வீட்டின் மேல் இருந்த சோலார் மின்சார உபகரணங்கள் மீது விழுந்தது. இதனால் மின்உபகரண பொருட்கள் சேதம்அடைந்தது. பின்னர் பொதுமக்கள் சத்தம்போட்டு காட்டுயானைகளை விரட்டினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால் அவற்றின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்து உள்ளது.

    காமராஜ் சாகர் அணையின் மொத்த உயரம் 49 அடி ஆகும். இதன் நீர்மட்டம் 45 அடியை தாண்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. 33 அடி உயரம் கொண்ட கிளன்மார்கன் அணையில் 30 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. 210 அடி உயரமுள்ள அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் 205 அடியாக உள்ளது.

    அவலாஞ்சி அணை 171 அடி உயரம் கொண்டது. இங்கு 169 அடிக்கு தண்ணீர் உள்ளது. எமரால்டு அணையின் உயரம் 184 அடி ஆகும். இங்கு 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கடல் போல் காணப்படுகிறது. மலைகளுக்கு நடுவே உள்ள அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அதேபோல் ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் டைகர்ஹில், மார்லிமந்து, தொட்டபெட்டா அப்பர், கோடப்பமந்து லோயர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. காலையில் இருந்து வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் விவசாயி வீட்டையும் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி மாங்கஞ்சிக்குன்னு பகுதியில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    அந்த யானை பாலு என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டிற்குள் இருந்தவர்கள் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றனர். அந்த வீட்டிற்குள் இருந்த பொருட்களையும் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஓடக்கொல்லி பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் குட்டன் ஆகிய கூலி தொழிலாளர்கள் நேற்று பகல் 11.30 மணிக்கு நடந்து சென்றனர். அப்போது காட்டு யானை எதிரே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி (வயது 52), குட்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் மணியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் முதுமலையில் இருந்து கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானையை விரட்டி அடிப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து கூடலூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நீலகிரி, கோவையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பகல் நேரங்களில் தூரலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சாரல் மழையால் கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் வளாக பகுதி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பலத்த காற்றுடன் பெய்த இந்த மழைக்கு குன்னூர்- ஊட்டி சாலையில் காணிகிராஜ் என்ற இடத்தில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள மஞ்சணகொரை, கோடப்பமந்து, பெர்ன்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் நேற்று காலையில் இருந்து மாலை வரை பனிமூட்டம் நிலவியது.

    இதனால் சாலைகளில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாததால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். தொடர் பனிமூட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கோவையில் கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று மாலை திடீரென காற்றுடன் மிதமான மழை பெய்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, காந்திபுரம் சாலை, ரெயில்நிலைய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலையும் மிதமான காலநிலையே நிலவி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

    அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் கல்லார் முதல் காட்டேரி வரை 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் குறுகிய வளைவுகளும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது.

    தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேற்கண்ட சாலையோரத்தில் ஆங்காங்கே லேசான மண்சரிவு தொடங்கி இருக்கிறது. இதனால் பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மண்சரிவு தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்வதால், சாலையோர மண் இறுக்கம் குறைந்து வருகிறது. இதனால் பாறைகள் உருண்டு விழும் நிலை காணப்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×